Wednesday 16 October 2019

இது பக்காத்தான் அல்ல...!

இப்போது நாட்டில் நடப்பது பக்காத்தான் அரசாங்கம் அல்ல!

தேர்தலின் போது பக்காத்தான் கொடுத்த வாக்குறுதிகள் வேறு.   நாம் எதிர்பார்த்த -  கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை - நிறைவேற்ற முடியாத ஓர் அரசாங்கத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இது முற்றிலுமாக பிரதமர் மகாதிரின் ஒரு சர்வாதிகார நோக்கம் கொண்ட ஓர் அரசாங்கம். அடக்குமுறை கொண்ட ஓர் அரசாங்கமாக இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

டாக்டர் மகாதிர்,  பிரதமரானது ஓரு விபத்து என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல.  அவர் ஓர் இடைக்கால பிரதமராகத் தான்  பதவியேற்றார். ஆனாலும் இப்போது அவர் தனது பதவியை விட்டுக் கொடுக்க மறுக்கிறார்!  இத்தனை ஆண்டுகள் கழித்து அவருக்கு மீண்டும் பிரதமர் பதவி மீது ஏற்பட்ட ஆசை அவரை பதவியிலிருந்து விலக  மறுக்க வைக்கிறது.

இப்போது அவர் பதவி வகிப்பதால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் என்ன? 

முதலாவது பக்காதான் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தடுமாறுகிறது.  அதற்கு முழு முதற் காரணம் பிரதமர் மகாதிர் தான்.  தனது அந்தக்கால சர்வாதிகார முறையை மீண்டும் கொண்டு வருகிறார்  என்பதைத் தவிர வேறு காரணங்கள் இல்லை.

இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாயக் பிரச்சனையை முளையிலேயே  கிள்ளி எறிந்திருக்க வேண்டிய  ஒரு பிரச்சனை. அதனைத் தண்ணீர் ஊற்றி வளர்த்தவர் பிரதமர் மகாதிர் தான்.

அந்தப் பிரச்சனையின் தொடர்பாக ஏற்பட்டது தான் விடுதலைப்புலிகளின் பிரச்சனை. ஒன்றுமே இல்லாத ஒன்றை உருவாக்கி  தமிழர்களைக் கைது செய்து அவர்களைப் பயங்கரவாதிகளாக உலகத்திற்குக் காட்டுவது தான் அவரது எண்ணமே தவிர வேறொன்றும் இல்லை.

இப்போது இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான உறவுகளில் விரிசல் என்பதும் மகாதிரால் ஏற்பட்ட பிரச்சனையே. உட்கார்ந்து பேசித் தீர்க்க வேண்டிய காஷ்மீர் பிரச்சனையை உலக அரங்கில் தன்னை ஹீரோவாக காட்டுகின்ற  முயற்சி அது. அதனால் ஏற்பட்ட விளைவு தான் இந்தியா,  மலேசியாவின் செம்பணை எண்ணைய் புறக்கணிப்பு.

இன்னும் பல உண்டு. மேற்குறிப்பிட்ட அனைத்துக்கும் பிரதமர் மகாதிரே குற்றவாளி.  வேறு ஒரு தலைமையின் கீழ் பக்காத்தான் அரசாங்கம் அமைந்திருந்தால் மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் அனைத்தும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

இடைக்காலம் என்று சொல்லி இப்போது முழு தவணை என்று சொல்லி வருகிறார்!

இடைக்காலப் பிரதமர் மகாதிர் இன்றைய நிலையில் நாட்டிற்கு இடைஞ்சலே!

No comments:

Post a Comment