Friday 18 October 2019

தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி உதவி...!

பொதுவாக தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றன என்று அறியும் போது நமக்கு மகிழ்ச்சி தான். 

பராமரிப்பு, பள்ளியின் மேம்பாட்டுக்கு என்று உதவிகள் தேவைப்படுகின்றன என்பது உண்மை தான்.  முந்தைய அரசாங்கத்தாலும் இந்த உதவிகள் கொடுக்கப்பட்டுத்தான் வந்தன. ஆனால் அங்கு நிறைய ம.இ.கா. அரசியல் ஆட்டம் அதிகமாக இருந்தது. சில பள்ளிகளுக்குக் கிடைத்தன. பல பள்ளிகளுக்குக் கிடைக்கவில்லை! நிதி கிடைக்கப்பட்ட பள்ளிகளுக்குப் பணம் போய்ச் சேரவில்லை என்கிற குற்றச்சாட்டும் உண்டு. 

ஆனால் இப்போது அத்தகைய நிலைமை இல்லை.  எல்லாப் பள்ளிகளுக்கும் கிடைக்கின்றன.  ஒரு சில எதிர்க்கட்சி தலைமையாசிரியர்கள் நிதி உதவி வேண்டாம் என்கிற போக்கும் உண்டு.  அவர்களுக்கு அதனால் ஒரு வரவும் இல்லை என்பதால் "பள்ளி எக்கேடு கெட்டால் எனக்கு என்ன!" என்று  எச்சரிக்கை உணர்வோடு ஒதுக்கி விடுகின்றனர்!

எல்லா மாநிலங்களிலும் இந்த நிதி உதவி கிடைக்கிறதா என்பது தெரியவில்லை.  நமக்குத் தெரிந்த வரை ஜோகூர், சிலாங்கூர், பேரா - இந்த மாநிலங்களின் செய்திகள் தான் நாளிதழிகளில் வருகின்றன. மற்ற மாநிலங்களின் நிலவரங்கள் தெரியவில்லை.  ஒரு வேளை மற்ற மொழி பள்ளிகளுக்கு உதவலாம்.  ஏதாவது நடந்து தான் ஆக வேண்டும். இளிச்சவாயன் தமிழன் தான் என்பது மற்ற மாநிலங்களில் நிருபிக்கப்படுகிறதோ, தெரியவில்லை!

இந்த நேரத்தில் இன்னொரு செய்தியையும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். தமிழ்ப்பள்ளிகளுக்கு வெறும் நிதி உதவியோடு நமது மாண்புமிகுக்கள் நிறுத்திவிடக் கூடாது.  பல தமிழ்ப்பள்ளிகள் தனியார் கட்டுப்பாட்டில் உள்ளன.  இதற்க்கெல்லாம் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போதே ஒரு முடிவு காண வேண்டும்.  முந்தைய அரசாங்கத்தின் தொடர்ச்சிகள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.  இதனை அடுத்து வரும் அரசாங்கத்திற்கு - பக்காத்தான் அரசாங்கமாக இருந்தாலும் கூட - இந்தக் குளறுபடிகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இதனை வைத்து அரசியல் நடத்தும் வழக்கத்தை ம.இ.கா. கொண்டிருந்தது.  இனி இது வேண்டாம்.  தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளை வைத்து நடப்பு அரசாங்கம் அரசியல் நடத்தக் கூடாது  என்பதே நமது எண்ணம்.

தமிழ்ப்பள்ளிகளுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்க வேண்டும்.  பதவி உயர்வுகள் கிடைக்க வேண்டும். கல்வி அமைச்சில் உயர் பதவிகள் கிடைக்க வேண்டும். 

இவைகள் எல்லாம் இப்போது நடப்பில் உள்ள மாண்புமிகுக்கள் செய்ய வேண்டும்.  அது உங்களின் கடமை.  

நிதி உதவி மட்டும் அல்ல, பதவி உயர்வு,  நிலப்பட்டாக்கள் என்று அனைத்தும் உங்கள் வேலை.  இல்லாவிட்டால் எங்கள் புத்தியைக் காட்டி விடுவோம்!

No comments:

Post a Comment