Tuesday 22 October 2019

அமிதாபச்சனுக்கு நன்றி!

பாலிவூட் நடிகர் அமிதாப்பச்சனைப் பற்றியான ஒரு செய்தி  அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தி.

"வயது 77 ஆகியிருக்கும் இந்த முதுமை நிலையிலும். அவரது உள்ளுறுப்புகளில் சில குறைந்த அளவே செயல்பட்டு வரும் நிலையிலும் அவர் இடைவிடாமல் படங்களில் நடிப்பதையும், மக்களை மகிவிழ்ப்பதையும் தொடர்ந்து செய்து வருபவர்."

என்கிற மேற் குறிபிட்ட வரிகள்  நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய வரிகள்.

வியாதிகள் இல்லாத மனிதர்களே இல்லை. வியாதிகள் கோடிசுவரனா ஏழையா என்று பாரபட்சம் பார்ப்பதிலை. தவறான உணவு முறைகள்,  தவறான பழக்க வழக்கங்கள் - இப்படி ஏதோ ஒன்று மனிதனிடம் தொற்றிக் கொண்டும், ஒட்டிக் கொண்டும் தான் இருக்கும். வியாதிகள் ஏற்படுவதற்கு அது போதும். வியாதிக்கு ஒரு சிறிய ஓட்டை இருந்தால் போதும் அதனை வைத்தே அது கூடு கட்டிக் குஞ்சு பொறித்து விடும்!

நாம் இங்கு சொல்ல வருவது வியாதி என்பது அனைவருக்கும் உண்டு. அது தவிர்க்க முடியாது ஒன்று.  ஆனால் அந்த வியாதி வந்ததும் நாம் எப்படி செயல்படுகிறோம், எப்படி எதிரொலிக்கிறோம் என்பது தான் முக்கியம். 

"நாளையே செத்துப் போவாய்!" என்று  நோயாளியைப் பார்த்து மருத்தவர் சொல்லுகிறார். ஆனால் அதன் பின்னர் நான்கு ஆண்டுகளோ நாற்பது ஆண்டுகளோ அந்த நோயாளி வாழ்ந்து மருத்துவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறார்!

"இனி நீங்கள்  நோய் நொடியின்றி பல ஆண்டுகள் வாழ்வீர்கள்!" என்று மருத்தவர் சொல்லுகிறார். ஆனால் நோயாளியோ ஒரு சில நாட்களில் மண்டையைப் போட்டு விடுகிறார்! 

மருத்துவர் சொல்லுவதில் தவறு இல்லை. அதே சமயத்தில் மருத்துவர் கடவுளும் இல்லை. அவர்களது அனுபவத்தை வைத்து ஓரளவு அவர்களால் கணிக்க முடியும், அவ்வளவு தான்.

ஆனால் எல்லாவற்றையும் விட நோயாளி என்ன நினைக்கிறார் என்பது தான் முக்கியம். 

நமக்கு வியாதியா மருத்துவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவோம். அவர் சொல்லுவது போல உணவு முறைகளைக் கடைப்பிடிப்போம். பத்தியங்களைக் கடைப்பிடிப்போம்.  உடற் பயிற்சிகளைச் செய்வோம். அவ்வளவு தான் நம்மால் செய்ய முடியும்.  அத்தோடு நமது கடமை முடிவடைந்தது. நமது அடுத்த வேலைகளைச் செய்ய ஆரம்பிப்போம். வியாதிகளைப் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். ஓரளவு நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதைத் தவிர அதிக ஆராய்ச்சி தேவை இல்லை.

அதை விடுத்து முக்கல் முனகல் எதுவும் தேவை இல்லை.  அதைப் பற்றியே 24 மணி நேரமும் சிந்திக்கத் தேவை இல்லை. கவலைப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அது வியாதியை அதிகப்படுத்துமே தவிர , வியாதிக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை. இல்லாத வியாதியை இருக்கிற வியாதியாக மாற்றி விடுமே தவிர பயம், கவலை இவைகளினால் எந்தப் பயனும் இல்லை!

அமிதாப்பச்சன் நல்லதொரு எடுத்துக் காட்டாக இருக்கிறார். வியாதி உண்டு. உடலில் குறைபாடுகள் உண்டு. ஆனால் அதனால் அவர் முடங்கிப் போகவில்லை.  நாளையே அவருக்கு மரணம் வரலாம். அதனை நாளைப் பார்த்துக் கொள்ளலாம்.  இப்போது உள்ள வேலை என்ன? அதனை இப்போது செய்வோம். மக்களை மகிழ்விப்போம். நமதுகடமைகளைச் செய்வோம். 

தவிர்க்க முடியாத மரணத்தைப் பற்றி கவலைப்படுவதை விட இப்போது கையில் இருக்கும் இந்த கணத்தை பயனுடையதாக பயன்படுத்திக் கொள்ளுவோம்!

நல்லதொரு பாடம்! வியாதி வரும்! போகும்!  போவதைப் பற்றி சிந்திக்க வேண்டாம்! வருவதைப் பற்றி சிந்திப்போம்!

No comments:

Post a Comment