Monday 7 October 2019

தாய்மொழிப் பள்ளிகள்

தாய்மொழிப் பள்ளிகள் பற்றியான விவாதங்கள் தொடர்ந்து, எல்லாக் காலங்களிலும், நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

அப்போதும் அம்னோ மாநாடுகளிலும் பேசப்பட்டு பேராளர்கள் பலர் கைதட்டல் வாங்கியிருக்கின்றனர்!

இப்போது இது கொஞ்சம் வித்தியாசம். வித்தியாசத்திலும் அப்போது யார் பேசினார்களோ அவர்களே இப்போதும் பேசியிருக்கின்றனர்.  அம்னோ என்னும் பெயர் தான் இல்லையே தவிர மற்றபடி அதே மேடை, அதே பேச்சு -  இது ஒரு தொடர் கதை!

இந்த மலாய் கௌரவர்களின் நோக்கம்  என்ன? எல்லாம் அரசியல் தான். டாக்டர் மகாதிர் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும், அன்வார் பிரதமர் பதவிக்கு வரக்கூடாது,  என்பது தான் அவர்களின் நோக்கம். இதற்காக மலாய் மக்களிடையே தங்களது ஆதரவைப் பெருக்கிக் கொள்ள தாய்மொழிப் பள்ளிகளை வைத்து அரசியல் நடத்துகின்றனர்!

தாய்மொழிப் பள்ளிகள் இந்த நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல. அவைகள் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.  இந்தத் தாய்மொழிப் பள்ளிகளால் யாருக்கு என்ன கேடு வந்திருக்கிறது என்று சொல்ல முடியுமா? ஒன்றும் இல்லை.!இவர்கள் சொல்லுகின்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் இவர்களே உருவாக்கியவை.

பல்லின மக்களிடையே ஒற்றுமை இல்லாததற்கு இந்தத் தாய்மொழிப் பள்ளிகளே காரணம் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டு.  யார் காரணம் என்பதை யாவரும் அறிவர்.  தேசிய பள்ளிகள் அனைத்தும் இஸ்லாமியப் பள்ளிகளாக மாறியதே, இன வாதம் பேசும் பள்ளிகளாக மாறியதே முழு காரணம் என்பதை மூடி மறைக்கின்றனர் இந்த கௌரவர்கள்! 

ஒன்றை நாம் கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் நமக்குப் புரியும்.  இது போன்ற, தாய்மொழிப் பள்ளிகள் இன வேற்றுமைக்குக் காரணம், என்று பேசுபவர்கள் யார்? இதுவும் வந்தேறிகள் தான் செய்கின்றனர்! பேசியவர்களைப் பாருங்கள். பெரும்பாலும் இந்தோனேசிய. தாய்லாந்து, இந்திய, பாக்கிஸ்தானிய, வங்காள வந்தேறிகள் தான் பேசுகின்றனர்!

ஒன்று நமக்குப் புரிகிறது. நாட்டு மக்களிடையே எல்லாமே எப்போதும் போலத் தான் போய்க் கொண்டிருக்கிறது.  தலைவர்களிடையே ஒற்றுமையில்லை!  பதவி ஆசை போகவில்லை!  

இவர்களின் பதவி வெறிக்காக மக்களிடையே ஒற்றுமை இல்லை என்று பேசி வருகின்றனர்! தாய்மொழிப் பள்ளிகளை வேரறுக்க நினைக்கின்றனர். எதைப் பேசினால் கைத்தட்டல் வாங்கலாம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற நிலைமைக்கு தரந்தாழ்ந்து பேசுகின்றனர்.

தாய்மொழிப் பள்ளிகள் நமது உரிமை. உரிமைகள் நமக்குமுண்டு!

No comments:

Post a Comment