Tuesday 29 October 2019

சோகம் நிறைந்த தீபாவாளி

தமிழ் நாட்டிலும்  சரி, மலேசியாவிலும் சரி இந்த ஆண்டு தீப ஒளி என்ப்து மக்களுக்கு எந்த ஒளியையும் ஏற்றவில்லை.

 மலேசியாவில் விடுதலைப்புலிகளின் பெயரில் தமிழர்கள் சொஸ்மா சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  பொதுத் தேர்தலின் போது"சொஸ்மா சட்டம் தேவை இல்லை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொஸ்மா சட்டத்தை அகற்றிவிடுவோம்:  என்று சொன்ன எதிர்கட்சியினர், ஆளுங்கட்சியாக பதவிக்கு வந்த பின்னர், நாட்டின் பிரதமர் தனக்கு வேண்டாதவர்களுக்கு சொஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தி உள்ளே தள்ளுகிறார் என்று பாரவலாகப் பேசப்படுவதைப் பார்க்கின்றோம்!  யார் என்ன செய்ய முடியும்? அதிகாரம் பிரதமரின் கையில்.  வேறு வழியில்லை! சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்! தமிழர்கள் மீது கைவைப்பது நமக்குக் கவலை அளிக்கிறது.

மற்றும் ஒரு நிலவரத்தில்  தமிழ் நாடு, திருச்சி, மணல்பாறை, நடுக்காடுப்பட்டி கிராமத்தில் நடந்து சோக நிகழ்வு.  சுஜித் வில்சன் என்னும் இரண்டு வயது குழந்தை ஆள்துளை கிணற்றில் விழுந்து இறந்து போன சம்பவம்.

அவனைக் காப்பாற்ற எத்தனையோ போராட்டங்கள். எத்தனையோ வகை இயந்திரங்கள், அவனது உயிரைக் காப்பாற்ற.   இது போன்ற  பேரிடரின் போது அவர்களது துறையில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்கள். எண்பது மணி நேரப் போராட்டம்.  இத்தனை பேர்களுக்கும் "பை பை" காட்டி விட்டது அந்தக் குழந்தை.

ஆமாம், ஓர் இரண்டு வயது குழந்தை. எண்பது மணி நேரம் உயிரோடு இருக்குமா என்பது நமக்கும் புரிகிறது.  ஆனால் இறந்து போயிருப்பான் என்பதை மனம் ஏற்கவில்லை.  ஏதாவது அதிசயங்கள், அற்புதங்கள் நடந்து விடாதா என்று தான் மனம் எண்ணிக் கொண்டே இருந்தது.

கடைசியில் நாம் நினைத்தது  போல் எதுவும் நடக்கவில்லை. அதிசயங்களோ, அற்புதங்களோ எதுவும் நடந்து விடவில்லை. குழந்தை இறந்து  போனது தான் நடந்தது.

தமிழ் நாட்டில் ஒரு சில தொலைக்காட்சி நிலையங்கள் அதனை நேரலையாகவே தொடர்ச்சியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. நம்மாலும் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பார்க்காமல் இருக்க முடியவில்லை.

நேரலையைப் பார்க்கும் போதெல்லாம் சமீபத்தில் வந்த "அறம்" படம் ஞாபத்திலேயே இருந்தது. இவ்வளவு தெளிவாகச் சொல்லியும், இப்படி படித்துப் படித்துச் சொல்லியும்  இந்த மக்கள் இப்படி இருக்கிறார்களே என்கிற எண்ணம் தான் கண் முன்னே நின்றது. 

நிபுணர்கள் செய்ய வேண்டிய வேலையை செய்ய விடாமல் அரசியல்வாதிகள் தலையிடுகிறார்களே என்கிற எண்ணமும் மேலோங்கி நின்றது.

அவ்வளவு தான்,  பேச ஒன்றுமில்லை. இனி மேலாவது இந்த மக்கள் திருந்த வேண்டும். குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டும்.  தேவை என்றால் பெற்றோர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.  

வருங்காலங்களில் மீண்டும் இது போன்ற சோகங்கள் வேண்டாம்.

No comments:

Post a Comment