Thursday 10 October 2019

அவர்கள் என்ன பயங்கரவாதிகளா?

தமீழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லி பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

பொதுவாகவே உலகம் எங்கும் வாழும் தமிழர்களுக்கு,   தமீழீழ மக்கள் மீது ஓர் அனுதாபம் உண்டு.  அனுதாபம் என்பது வேறு  பயங்கரவாதம் என்பதோ, தீவிரவாதம் என்பதோ வேறு. 

இவர்கள் மூலம் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பதாக புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் த்லைவர் அயூப்கான் மைதீன் பிச்சை கூறியிருப்பது நமக்கு வியப்பை அளிக்கிறது.

                          ஜி.சாமிநாதன்                                         பி.குணசேகரன்          

எப்படியோ நாம் பயங்கரவாதத்தை ஆதரிக்க முடியாது. ஆனால் காவல்துறை இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கைது செய்திருப்பதும்  அவர்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பதும்  நம்மை யோசிக்க வைக்கிறது.   

இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாயக் ஒரு தீவிரவாதி என்று நாடே சொன்ன போது கூட புக்கிட் அமான் இவ்வளவு தீவிரம் காட்டவில்லை என்பதையும் நாம் அறிவோம்.

அதுவும் நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் பி.குணா கைது செய்த விதம் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. முகமூடி அணிந்துகொண்டு ஏதோ ஒரு பயங்கரவாதியைக் கைது செய்வது போல - குண்டர் கும்பலைக் கைது செய்வது போல - காவல்துறையினர் நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாது.  ஒரு கௌரவமிக்க சட்டமன்ற உறுப்பினரை இப்படிக் கைது செய்வதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்பது தான் குற்றச்சாட்டே தவிர அவர் விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதைக் காவல்துறை புரிந்து கொள்ள வேண்டும். 

விடுதலைப் புலிகள் என்பது என்றோ மறக்கப்பட்டுப் போன ஒர் இயக்கம்.  அதற்குப் புத்துயிர் கொடுப்பது என்பதெல்லாம் - அதுவும் மலேசியத் தமிழர்கள் - கொடுப்பார்கள் என்பதெல்லாம்  புக்கிட் அமான்  ஏதோ ஓரு கற்பனை உலகில் இருப்பதாகவே தோன்றுகிறது! யாரையோ குறி வைத்து அல்லது யாரையோ திருப்திப்படுத்த இந்த நாடகம் அரங்கேறுகிறதோ என்கிற சந்தேகமும் எழுகிறது!

எப்படி இருப்பினும் கவால்துறையிடமிருந்து இதுவரை சரியான விளக்கம் இல்லை.

பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment