Thursday 3 October 2019

அக்னி சுகுமார் மறைந்தார்

அக்கினி சுகுமார் மறைந்தார் என்னும் செய்தி உண்மையில் ஓர் அதிர்ச்சியான செய்தி. 

அவர் நல்ல பத்திரிக்கையாளர். நல்ல கவிஞர். நல்ல படைப்பாளர் என்று அவரைப் பற்றியான செய்திகள் கூறுகின்றன. நானும் அறிவேன்.

ஆனால் அவரைப்பற்றி - ஒன்றே ஒன்று மட்டும் - என் நினவில் நிற்கிறது. நான் கவிதைகள் படிப்பதோ, கதைகள் படிப்பதோ மிகவும் குறைவு. அது போல அவர் படைத்தவை எதனையும் நான் அதிகம் படிக்கவில்லை.

      நன்றி: செல்லியல்

ஆனாவ் அவர் நண்பன் பத்திரிக்கையில் எழுதிய தொடர் ஒன்றை என்னால் இன்றளவும் மறக்க முடியவில்லை. அது பயணக் கட்டுரை.

யாழ்ப்பாணத்திற்கு சென்று அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த அந்தக் கட்டுரை என்னால் மறக்க முடியாத ஒரு கட்டுரை. அதன் தலைப்பு எனக்கு மறந்து போனது. அது புத்தகமாக வராதா என்று இன்றளவும் ஓர் ஏக்கம் உண்டு. 

ஆனால் "வணக்கம் மலேசியா"  வில் அவரைப் பற்றியான செய்தியைப் படித்த போது நான் மறந்து போன அந்தக் கட்டுரையின் தலைப்பு "மண்ணே உயிரே"  என்று அறிகிறேன்.  அது புத்தகமாகவும் வெளி வந்திருக்கிறது. நான் தான் அறியவில்லை. அதை விட நான் வழக்கமாக புத்தகங்கள் வாங்கும் இடத்தில் மலேசிய படைப்பாளர்களின் புத்தகங்கள் விற்பது மிகவும் குறைவு. அதனால் தான் அந்தப் புத்தகம் என் கண்ணில் படவில்லை.

அந்த ஒரு பயணக் கட்டுரைக்காகவே அக்கினி சுகுமார் என்னால் மறக்க முடியாத மனிதராகி விட்டார். நான் கட்டுரைகளை வாசிப்பவன், கட்டுரைகளை நேசிப்பவன்.   அந்த வகையில் "மண்ணே உயிரே"  கட்டுரை என்னுள் ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. இப்போதும் கூட அவருடைய கட்டுரைகளைக் கண்டால் நான் படிப்பதுண்டு. 

அவருடைய மரணம் தமிழ் எழுத்துலகிற்கு மாபெரும் இழப்பு.  அவருக்கு வயது 64 தான் என்கிற போது ......ஒன்றும் சொல்ல முடியவில்லை.

தலைவனை இழந்து  வாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

No comments:

Post a Comment