Thursday 17 October 2019

குழப்பமிக்க அரசியல்..!

இப்போது நாட்டில் ஒரு குழப்பமிக்க அரசியல் சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. 

யார் காரணம் என்று சொல்லத் தேவையில்லை.  அனைத்துக்கும் காரணம் பிரதமர் மகாதிர் என்பது நமக்குத் தெரிந்திருக்கிறது. 

அடுத்த பிரதமர் யார் என்பது முன்னமே அனைத்து பக்காத்தான் கட்சிகளாலும்  பேசித் தீர்க்கப்பட்ட ஒரு பிரச்சனை. இதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.  அதனை பிரதமர் மகாதீரே ஒப்புக் கொண்டிருக்கிறார். "எனது பொறுப்பை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பேன்" என்று பலமுறை அவரே சொல்லியிருக்கிறார்.

ஆனாலும் அவர் எதைச் சொன்னாலும் ஒர் உறுதியற்ற முறையில் தனது கருத்தைச் சொல்லி மக்களைக் குழப்புகிறார். பொதுவாக கிண்டல் பண்ணுவதும், தமாஷாகப் பேசுவதும் அவருக்குக் கை வந்த கலை!  பிரதமர் பதவி ஒப்படைப்பு என்னும் போதெல்லாம் அவர் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இப்போது மேலும் பல குழப்பமான செய்திகள் வருகின்றன.  நம்பிக்கைக் கூட்டணி தொடருமா என்கிற சந்தேகத்தை எழுப்புகின்றன.  ந்ல்லது நடக்கும் என்று நினைத்தோம். ஆனால் அவர் இப்படி நாச வேலையில்  ஈடுபடுவார் என்று யாரும் நினைக்கவில்லை. 

பிரதமர் மகாதிரின் எண்ண ஓட்டங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாடு நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரா அல்லது நாசமாகப் போகட்டும் என்று நினைக்கிறாரா அல்லது தனது மகன் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று நினைக்கிறாரா என்பதெல்லாம் நம்மால் கற்பனைச் செய்ய முடியவில்லை!

அன்வார் பதவிக்கு வருவதை அம்னோ தரப்பினர் விரும்ப மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். காரணம் மோசடி வழக்குகளை அவர்கள் எதிர் நோக்க வேண்டி வரும் என்கிற நிலைமையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்தச் செய்திகள் உண்மையா, பொய்யா என்பதில் உறுதி இல்லை. அவர்களோடு சேர்ந்து பிரதமரும் செயல்படுகிறாரா என்று நாமும் நினைக்க வேண்டியுள்ளது என்பது வருத்தமே!

பிரதமரின் செயல்பாடுகள் அவருடைய தகுதிக்கு அல்லது வயதுக்கு ஏற்றதாக இல்லை. இளம் வயதில் எப்படியோ இருந்திருக்கலாம். ஆனாலும் வயதான பின்னரும் இப்படி தில்லுமுள்ளுகள் என்பதெல்லாம் வருங்கால தலைமுறைக்கு சரியான எடுத்துக்காட்டாக இருக்க முடியாது. இந்த வயதில் மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அவருடைய நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

நாம் சொல்ல வருவதெல்லாம் மக்களைக் குழப்ப வேண்டாம் என்பதே!

No comments:

Post a Comment