Thursday 24 June 2021

நமக்கும் ரோஷம் உண்டு!

 ஒரு சிலர் பண்ணுகின்ற சேட்டைகளைப் பார்க்கும் போது அடாடா! நமக்கு என்னமாய் ரோஷம் வருகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது!

தமிழகத்திலிருந்து வந்து இங்கு வேலை செய்கின்றவர்களைப் பற்றி தான் சொல்லுகின்றேன்.

இங்கு வந்து வேலை செய்பவர்கள் உண்மையிலேயே பாவப்பட்ட ஜென்மங்கள்.  மலேசியாவுக்குப் போய் வேலை செய்தால் எப்படியோ குடும்பத்தைக் கரை சேர்க்கலாம் என்று ஓர் உந்துதலில் இங்கு வேலை செய்ய வருகிறார்கள். அவர்களிடம் இருக்கும் சொத்துக்களை விற்று, நகைகளை விற்று, கடன்களை வாங்கி, பாவம்! தங்களது குடும்பம் இனி பிழைத்துக் கொள்ளும் என்கிற எதிர்ப்பார்ப்போடு இங்கு வருகிறார்கள்.

ஆனால் இங்கு வந்து சேர்ந்த அடுத்த நிமிடமே அவர்களது வாழ்க்கை தடம் மாறிப்போகிறது.  கடப்பிதழ்கள் பறிபோகின்றன. எங்கே போகிறோம், என்ன செய்கிறோம் எதுவும் புரியவில்லை. சொல்லப்பட்டதோ ஒரு வேலை. ஆனால் செய்வதோ கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத ஒரு வேலை. ஏதோ தற்காலிகம் என்று சொல்லப்பட்டாலும் கடைசியில் அதுவே நிரந்தரம் என்கிற ஒரு நிலைமை. எதுவும் கேட்க முடியவில்லை. அதுவும் துணிந்து கேட்டு விட்டால் அடுத்த நிமிடம் அடி, உதை. மாதக் கணக்கில் சம்பளம் கொடுப்பதில்லை. எங்கே புகார் செய்வது,  ஒன்றும் புரியவில்லை.  காவல்துறையை நாட முடியவில்லை.  ஓடி ஒளியத்தான் முடிகிறது. மொழி தெரியாத ஒரு நாட்டில் என்ன செய்வது? விளங்கவில்லை!

இது தான் இங்கு வேலை செய்கின்ற அவர்களின் நிலைமை. பாதிக்கப்பட்ட ஒரு சிலரை நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். ஒரு நண்பர் "போலிஸ்ஸை பார்த்து என்னால் ஒளிய முடியாது! நான் ஊருக்குப் போகிறேன்!" என்று சொல்லி காலில் விழுந்த கதை எனக்குத் தெரியும். ஒரே மாதத்தில்,  தேவையான ஏற்பாடுகளைச் செய்து, கொஞ்சம் துணிமணிகளெல்லாம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தோம்! பாவம்! மிகவும் பயந்த மனிதர்! எத்தனையோ ஆயிரங்களைச் செலவு செய்து இங்கு வந்தவர். கடைசியில் ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு ஊர் திரும்பினார்.

பாவம்! இந்த ஏழை மக்களை ஏமாற்றி இங்கு வரவழைத்து கடைசியில் ஒன்றுமில்லாமல் திரும்பியவர் பலர்.  இப்படி ஏமாற்றி பிழைப்பதையே இங்கு பலர் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.

என்னவோ நாட்டில் சட்டம், ஒழுங்கு என்று ஒன்றுமே இல்லாத நாடு என்று தான் நினைக்க வேண்டி உள்ளது! ஏமாற்றுபவர்கள் எப்படியோ தப்பி விடுகின்றனர். அதனால் தான் இது ஒரு தொடர் கதையாகவே போய்க் கொண்டிருக்கிறது!

No comments:

Post a Comment