Sunday 13 June 2021

உங்களை நம்புங்கள்!

 எஸ்.பி.எம். தேர்வில்  தேர்ச்சி அடையாத  மாணவர்களும் பலர் இருக்கின்றார்கள். 

ஆனால் தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. மீண்டும் தேர்வை எழுது தேர்ச்சி அடையளாம்.  தேர்ச்சி பெற்றவர்கள் எல்லாம் புத்திசாலிகள்  தேர்ச்சி பெறாதவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்பதாக ஒன்றுமில்லை.

தேர்வில் தோல்வியைத் தழுவியர்கள், ஒரு முறை இரு முறையல்ல, பல முயற்சிகளுக்குப் பின்னர் வெற்றி பெற்றவர்கள் இருக்கிறார்கள். நம்மில் பலர் இருக்கிறார்கள். நம்மைச் சுற்றி பலர் இருக்கிறார்கள். நாட்டில் பலர் இருக்கிறார்கள். உலகில் பலர் இருக்கிறார்கள்.

தேர்வில் தோல்வி என்பது ஒன்றும் புதிதல்ல. அது தொடர்ந்து எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து கொண்டு வருவது தான்.

அதனால் தான் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைத் தொடர்ந்தாற்  போல டியூஷன் வகுப்புகளுக்கு தவறாமல்  அனுப்புகிறார்கள்.  அப்படி இருந்தும் கூட தேர்வில் தோல்வி அடைபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! என்ன செய்ய?

ஆனாலும் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் பெற்றோர்களின் கனவு. அதனால் தான் அவர்களைத் தொடர்ந்து படிக்க  வேண்டும் என்பதாக பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள்.

ஒரு சில குடும்பங்களில் பண வசதி உள்ளவர்களாக இருக்கலாம். அதனால் பெற்றோர்கள் கூட "படித்தால் என்ன! படிக்கவிட்டால் என்ன!" என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள் கூட இருக்கிறார்கள்!

ஆனால் பெற்றோர்களுக்கு நான் சொல்ல விரும்புவது:  பணம் இருப்பது நல்லது.  வருங்காலங்களில் அந்தப் பணத்தைப் பிள்ளைகளுக்குக் கட்டிக் காக்க தெரிவது அதைவிட நல்லது!

அப்படிக் கட்டிக் காக்கத் தெரியாத பிள்ளைகளினால் இருந்ததையும் இழந்து கடைசியில் நடுத்தெருவுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அல்லது அவர்கள் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்படுவார்கள் என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.

கல்வி இல்லாத பிள்ளைகளுக்கு எதுவும் நடக்கலாம். அதனால் ஓரிருமுறை தேர்வில் தோல்வி அடைந்துவிடுவதால் அப்படி ஒன்றையும் பெரிதாக இழந்துவிடப் போவதில்லை. அவர்கள் தொடர்ந்து படித்து வெற்றி பெற வைப்பது பெற்றோரின் கடமை.

நாம் வாழ்க்கையில் பலவற்றைப் பார்க்கிறோம்.  ஆர்வமில்லாத மருத்துவ படிப்புக்குப் போனவர் பலர் பல்லாண்டுகளை வீணடித்து கடைசியில் ஒன்றுமில்லாமல் திரும்பிவர்களும் உண்டு. அது ஆர்வம் இல்லாமையால் வருகின்ற குறைபாடு.

எஸ்.பி.எம். என்பது அடிப்படைக் கல்வி. அது நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய அடிப்படைக் கல்வி. பிற்காலத்தில் ஏதோ ஒரு வகையில் அந்தக் கல்வி அவர்களுக்கு உதவியாக இருக்கும். முன்னேற்றத்திற்கு ஏணிப்படியாக விளங்கக் கூடியது.

அதனால் எஸ்.பி.எம். என்பது, வெற்றி பெருவது என்பது,  நமது கல்விப் பாதையில்  ஒரு முக்கிய அம்சம். அதனால் அதனை அலட்சியம் செய்ய வேண்டாம். நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment