Friday 18 June 2021

எதுவும் சாத்தியமே!

 நாடாளுமன்றம் எப்போது கூட்டப்பட வேண்டும்?

பேரரசர், சாத்தியமான விரைவில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் அதனை உறுதிபடுத்தியிருக்கிறார். ஆமாம் கூடிய விரைவில் சாத்தியமான தேதியில் நாடாளுமன்றம் நடைபெறும் என்பதாக.  

அதனையே பாஸ் கட்சியும் வரவேற்றிருக்கிறது. அரசாங்கம் கூறியதற்கு ஏற்ப பேரரசரின் அறிவிப்பு அமைந்திருப்பதாக அவர்களும் கூறியிருக்கின்றார்கள்.

ஆக, எப்போது நாடாளுமன்றம் கூடும்? விரைவில், சாத்தியமான தேதியில், கூடும் என எதிர்பார்க்கலாம்!

ஆனால் அந்த சாத்தியம் இப்போதைக்கு இல்லை என நிச்சயமாக சொல்லலாம்.   கோவிட்-19 இப்போதைக்குக் குறைவதாக இல்லை. தினசரி அது கூடிக் கொண்டே போகிறதே தவிர குறைவதற்கான அறிகுறி எதுவும் இதுவரை தெரியவில்லை! 4,000 பேருக்குக் குறைவாக இருந்தால் அரசாங்கம் சில தளர்வுகளை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.  கூடிக்கொண்டே போகின்ற ஒரு சூழலில் அது குறைவதாகவும் தெரியவில்லை.

கோவிட்-19 குறையவில்லை என்றால், ஊரடங்கு தொடரும் என்றால்,  நாடாளுமன்றம் கூடுவது என்பது அசாத்தியமே! அதனையும் மறுப்பதற்கில்லை.

பொதுவாக மக்கள் ஒன்றைப் புரிந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய நடப்பு அரசாங்கம் கோவிட்-19  தொற்றை அப்படி ஒன்றும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்கின்ற புரிந்துணர்வு தான் அது! காரணம் நாடாளுமன்றம் கூடக்கூடாது என்று அரசாங்கம் நினைக்கிறது. அது எப்படியோ போகட்டும். ஆனால் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாத அரசாங்கம் இருந்தால் என்ன, கெட்டழிந்து போனால் என்ன என்கிற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்!

செயல்படாத அரசாங்கம் என்றாலும் அரசை நிர்வகிக்கும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு அது, அவர்களுக்காக செயல்படுகின்ற அரசாங்கம்.  அதனால் அவர்கள் அரசாங்கத்தை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

நாடாளுமன்றம் கூடுவது என்பது விரைவில், சாத்தியமான தேதியில் கூடும் என நம்பலாம். அது எப்போது நடக்கும் என்பதை உங்களுடைய  ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

இப்போதே நடக்கலாம்! அடுத்த மாதம் நடக்கலாம்! அடுத்த ஆண்டு நடக்கலாம்! எதுவும் சாத்தியமே!

No comments:

Post a Comment