Friday 18 June 2021

ஊர்க்காரரா நீங்க!

 தமிழ்நாட்டுக் காரர்களைத் தான் "ஊர்க்காரர்கள்" என்று அழைக்கப்படுவது நமது வழக்கம்.

அது ஒன்றும் தவறான வார்த்தையில்லை. நாம் நல்ல பண்போடும் அன்போடும் தான் தமிழகத்திலிருந்து இங்கு வந்து வேலை செபவர்களை அழைத்து வருகிறோம்.

"நீங்கள் ஊர்காரரா?" என்று கேட்கும் போது அதிலே ஒரு பாசம் உண்டு. பரிவு உண்டு. அதில் சந்தேகமில்லை. அப்படித்தான் அது இருந்தது.

ஆனால் அதே வார்த்தை இப்போது தீண்ட தகாத வார்த்தையாக மாறிவிட்டது. ஒரு சிலர் அப்படி ஒரு நிலைக்கு அந்த வார்த்தையைக் கொண்டு வந்து விட்டனர்.

அப்படிக் கேட்பதே ஏதோ ஏளனமாக அவர்களைப் பார்த்து கேட்பது போல அவர்கள் நினைக்கின்றனர். இவர்களோ  அப்படிச் சொல்லுவதில் ஏதோ ஒரு பெரிய சாதனையைச் செய்து விட்டது போல நினைக்கின்றனர்!  கிறுக்கர்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை!

ஆனால் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தமிழ் நாட்டுத் தமிழர்களை இங்குள்ள தமிழர்கள் அப்படிப் பேசி இழிவுபடுத்த  மாட்டார்கள்  என்று தான் நான் நினைக்கிறேன்.

தமிழ் நாட்டையே மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு தனது சொந்த மண்ணிலேயே "இளிச்சவாயன்" என்று பெயரெடுத்தவர்கள் தமிழர்கள்! அப்படிப்பட்டவர்கள்  இங்கு மட்டும் அப்படி ஒன்றும் இளிச்சவாயத்தனத்திலிருந்து விடுபட்டிருப்பார்கள் என்று நினைக்க இடமில்லை! இங்கும் அதே நிலை தான்!

பொதுவாக இந்த "ஊர்க்காரன்!" என்கிற வார்த்தை எங்கு அதிகம் பயன் படுத்தப்படுகிறது? அதைக் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். எல்லாருடைய குற்றச்சாட்டும் இங்குள்ள உணவகங்களைத்தான் சுட்டுகின்றன.

சரி, இந்த உணவகங்களை நடத்தும் முதலாளிகள் யார்? அதை நாம் கவனித்திருக்கிறோமா? இந்த உணவகங்களைத் தமிழர்களா நடத்துகிறார்கள் என்று ஆராய்ந்து பாருங்கள்.  பெரும்பாலும் தமிழர்களில்லை. ஆனால் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் தான் உணவகங்களை நடத்துகிறார்கள்! இவர்களுடைய வெளியே உள்ள விளம்பரப் பலகைகளில் கூட கீழே சிறிய எழுத்துக்களில் தமிழில் போட்டிருப்பார்கள் அல்லது தவிர்த்திருப்பார்கள்! தமிழ் நாட்டிலும் இதே நிலை தான்! இப்போதாவது புரிகிறதா? புரிந்தால் சரி!

தமிழர்களுக்கு எதிராகவே சில சமூகத்தினர் எல்லாக் காலங்களிலும் தமிழர்களை  இழிவு படுத்தவதை ஒரு கடமையாகவே செய்து வருகின்றனர்! யாரோ செய்கிறார்கள் ஆனால் தமிழர்கள் பெயர் தான் அடிபடுகிறது.

ஒன்று மட்டு சொல்லுவேன். தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு எதிராக இங்குள்ள தமிழர்கள் இல்லை என்பதை மட்டும் சொல்லுவேன். அவர்களை இழிவாகப் பேசுவதை இங்குள்ள தமிழர்கள் விரும்பமாட்டார்கள். இரு பக்கமும் யோக்கியன், அயோக்கியன்  இருக்கத்தான் செய்கிறார்கள்! அது தமிழர்கள் மட்டும் அல்ல, வங்காள தேசம், நேப்பாளம், பாக்கிஸ்தான், வியட்னாம் - இப்படி எல்லா நாட்டு இனத்தவர்களிலும் உண்டு.

அவர்களுக்கு "நீங்க ஊர்க்காரரா?"  என்று கேட்கத்தான் ஆளில்லை!

No comments:

Post a Comment