Friday 4 June 2021

தடுப்புக் காவல் மரணங்கள்!

 நமது நாட்டில் தடுப்புக் காவல் மரணங்கள், அதுவும் குறிப்பாக இந்திய இளைஞர்களின்  மரணங்கள், எந்த கட்டுப்பாடுமின்றி அதிரிகரித்துக் கொண்டே இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

விசாரணைக்குப் போகும் இளைஞர்கள் திரும்ப உயிரோடு வருவார்களா என்கிற சந்தேகம் இப்போது மக்களிடையே எழுந்திருக்கிறது. 

எதுவும் உறுதியில்லை. ஓர் உறுதியற்ற அரசாங்கம் பதவியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நாட்டில் பொறுப்பில் உள்ளவர் நமது பிரதமர் தான். அவரின் நிலைமை நமக்குப் புரிகிறது.  பேசவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அப்படி ஒரு நிலை அவருக்கு!  அவரும் "இந்தியர் என்றால் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் நமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை! மலாய்க்காரர் ஓட்டு தான் நமது இலக்கு!" என்கிற மனப்பான்மை அவரிடமும் உண்டு.  அவர் என்ன நினைக்கிறாரோ அதையே தான் ம.இ.கா.வும் நினைக்கும்!  வேறு சொந்தமாக எந்த சரக்கும் அவர்களுக்கு இல்லை!

இந்த மரணங்கள் பற்றி காவல் துறையில் எத்தனையோ புகார்கள் கொடுத்தாயிற்று ஆனால் அந்த புகார்கள் எந்தவொரு பயனையும் அளிக்கவில்லை.  தொடர்ந்தாற் போல புகார்கள் கொடுப்பதும் புகார்களை காலில்  போட்டு மிதிபட வைப்பதும் - எந்த ஒரு தீர்வை நோக்கியும் அது போகவில்லை! அதற்காக புகார் அளிக்காமல் இருந்துவிடவும்  முடியாது. அந்த ஒர் உரிமை மட்டும் தான் நமக்கு இருக்கிறது. அதனையும் கைகழுவி விட முடியாது.  ஏதோ இன்று அது வலுவாக இல்லையென்றாலும் நாளை அது வலுவாக இயங்கலாம். நம்பிக்கை தானே வாழ்க்கை.

இதில் பாவப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் தான்.  தாய்மார்கள், மனவிமார்கள், குழந்தை குட்டிகள் இவர்களுடைய நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தும் பாழ்,  வேறு என்ன சொல்ல? இருக்கிற கொஞ்ச நஞ்ச பணத்தையும் வழக்குகளுக்காகப் போய்விடும்.

நாட்டில் சட்டங்கள் இருக்கின்றன. அந்த சட்டங்களை யாரும் மதிப்பதில்லை. அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள். அவர்கள் செய்யாத குற்றங்களா?  அந்த குற்றங்கள் எதுவும் வெளியே வருவதில்லை!  மிகச் சாமர்த்தியமாக மறைக்கப்படுகின்றன!

அப்பாவிகள் பலர் ஏதோ ஒரு வகையில் காவல்துறையினரிடம் அகப்பட்டுக் கொள்கின்றனர். அதற்காக அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று சட்டங்கள் சொல்லவில்லை. முறையான விசாரணை வேண்டும் என்று தான் கோரிக்கைகள்  வைக்கப்படுகின்றன.

இந்த விசாரணைகளை எதிர்நோக்க முடியாதவர்களால் தான் இது போன்ற மரணங்கள் சம்பவிக்கின்றன.

காத்திருப்போம். நீதி, நியாயம் இல்லாமலா போய்விடும்!

No comments:

Post a Comment