Thursday 3 June 2021

இது போதுமா?

 அமைச்சர்களும், துணை அமைச்சர்களும் மூன்று மாதங்கள் தங்களது சம்பளத்தை எடுக்க மாட்டார்கள்  என்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.

நல்ல செய்தி தான். மறுப்பதற்கில்லை. மூன்று மாதங்கள் என்பதற்குப் பதிலாக  அவர்கள் பதவியில் இருக்கும் வரை பாதி சம்பளம் அவர்கள் வாங்கலாம்.   ஏன்? சம்பளம் வாங்காமல் கூட அவர்களால் தாக்குப் பிடிக்க முடியும். தொண்டு செய்ய வந்தவர்கள் சம்பளத்தை எதிர்பார்ப்பதில்லை!

அதே போல அரசாங்கத்தில் வேலை செய்வோர் குறைந்தது அடுத்த ஆறு மாதங்களுக்குத் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளலாம். பாதி சம்பளம் போதுமானதே. 

இதெல்லாம் ஒரு தற்காலிக நடவடிக்கை தான். இன்று நாட்டில் கணவன் மனைவி இருவருமே வேலை இல்லாமல் இருக்கும் நிலைமையில் பலர் இருக்கின்றனர். அவர்கள் வேலையை இழந்திருக்கின்றனர். அவர்களுக்குக் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற எண்ணில்லா துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

ஊரடங்கு காலத்தில் யாராலும் ஒன்றும் செய்ய இயலாது.  வேலை செய்ய அனுமதித்தால் அவர்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். ஊரடங்கினால் வேலை செய்ய இயலாது. வருமானம் என்பது இல்லை. எப்படி பிழைப்பை நடத்துவது?  

எல்லாருமே ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறோம்! எல்லாருக்குமே மாதத் தவணைகள் உண்டு. வீட்டுக் கடன், கார் கடன் என்று இப்படி இழுத்துக் கொண்டு போகும். வீட்டு வாடகைக் கட்டவில்லை என்றால் வீட்டைக்  காலி செய்ய வேண்டி வரும். பல சோதனைகளை மக்கள் எதிர் நோக்குகிறார்கள்.

கோவிட்-19 சமீப காலங்களில் முடியும் என்று தெரியவில்லை. ஒன்று போனால் அடுத்து ஒன்று வருகிறது. 

ஓரு நிரந்தர மற்ற அரசு பதவியில் இருப்பதால் அவர்களால் முழுமையாக இந்த நோயை ஒழிக்க வேண்டும் என்கிற அவசியம், அவசரம் இல்லாமல் இருக்கின்றனர்.  தொற்று நீடித்தால் அவர்கள் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும் என்று கணக்குப் போடுகின்றனர்!

இந்த நிலையில் மக்கள் தான் அவதிகளை அனுபவிக்கின்றனர். ஒரு நிரந்தர தீர்வைநோக்கி அரசு பயணிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த குற்றச்சாட்டு சேர வேண்டிய இடத்தில் சேருகிறதா என்கிற ஐயம் நமக்கும் உண்டு!

அதனால் தான் நாம் சொல்ல வருவதெல்லாம் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் அனைவரும் சம்பளம் வாங்காமல் நாட்டிற்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று கூறுகிறோம். நாடாளுமன்ற, சட்டமன்ற  உறுப்பினர்கள் சம்பளம் வாங்காமல் நாட்டிற்குத் தொண்டு செய்யுங்கள் என்று நாம் பரிந்துரைக்கிறோம்.

கோவிட்-19 கட்டுப்பாட்டிற்குள் வரும்வரை இவர்கள் சம்பளம் வாங்கக் கூடாது என்பதே ந்மது பரிந்துரை. அதன் மூலம் வேலை இல்லாத பல  குடும்பங்களுக்குக் குறைந்த அளவு உணவுகளையாவது ஆவர்களுக்குக் கொடுத்து அவர்களை வாழ வைக்க முடியும்.

இது போதாது தான்! ஆனால் வேறு வழிகளையும் அரசாங்கம் அலசி ஆராய வேண்டும்!


No comments:

Post a Comment