நம் நாட்டில் மீண்டும் அரசியல் நாடகம் ஆரம்பமாகிவிட்டது!
நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்கின்றனர் ஒரு சாரார். "ஆமாம், கூட்டப்பட வேண்டும். யாரும் வேண்டாமென்று சொல்லவில்லையே. செய்ய வேண்டிய வேலைகளை அப்படியே போட்டுவிட்டு ஓடியார முடியாது என்று தானே சொல்லுகிறோம்! கொஞ்சம் பொறுத்துக் கொள்ள முடியாதா?" என்கின்றனர் ஆளும் தரப்பு!
ஒரு குறிப்பு: "செய்ய வேண்டிய வேலைகள்" என்றால் கொள்ளையடித்தது இன்னும் போதவில்லை என்பது பொருள்!
கோவிட்-19 இன்னும்...இன்னும்.... நீடித்தால் அவ்வளவும் பணம் என்பது அவர்களது நம்பிக்கை! அந்த நம்பிக்கையை நாம் ஏன் தகர்க்க வேண்டும்?
நாடளுமன்றத்தை வெகு விரைவில் கூட்ட வேண்டும் என்பதாக மாமன்னர் கூறி இருந்தார். ஒன்றைக் கவனிக்க வேண்டும். "வெகு விரைவில்" என்பதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன! அதனை ஓரிரு மாதங்கள் எனவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஓரிரு மாமாங்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்!
ஆனால் நடப்பு அரசாங்கத்திற்கு ஓரு மாமாங்கம் தேவை இல்லை. அவர்களின் தேவை எல்லாம் அடுத்த பொதுத் தேர்தல் வரை தான். வேண்டுமானால் கால் மாமாங்கம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
இப்போது நமது அரசியல்வாதிகள் மாமன்னர் சொன்னதை பலவாறாக திரித்துப் பேசுகின்றனர்! இந்த அரசியல் சட்டம் இப்படிச் சொல்லுகிறது, அந்த அரசியல் சட்டம் அப்படிச் சொல்லுகிறது, நாடாளுமன்றத்தைக் கூட்ட மாமன்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று பலவாறாக பல்டி அடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் செய்வதை எல்லாம் பார்க்கும் போது: குரங்கு கையில் பூமாலை! என்பது தான் ஞாபகத்திற்கு வருகிறது! குரங்குகள் சேட்டைகள் பண்ணலாம்! அது அவைகளின் இயல்பு. இவர்கள் மனிதர்கள். ஒரு வேளை எங்கள் மூதாதையர்களை எங்களால் விட்டுக் கொடுக்க முடியாது என்கிறார்களோ!
நாடகம் மீண்டும் ஆரம்பமாகி விட்டது. ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்துவார்கள். சவால் விடுவார்கள்! சட்டத்தில் கோளாறு என்பார்கள். அந்தக் கட்சி அப்படி, இந்தக் கட்சி இப்படி என்பார்கள்.
கொஞ்சம் நாளைக்குச் சத்தம், கூச்சல், குழப்பம் எல்லாம் கேட்கும்! எல்லாம் நடக்கும் ஆனால் ஒன்று மட்டும் நடக்காது. நாடாளுமன்றம் மட்டும் கூட்டப்படாது.
மீண்டும் எல்லாரும் அமைதியாகி விடுவார்கள். பிறகு மீண்டும் மாமன்னர், அரசியல் சாசனம், நாடாளுமன்றம் .....என்று விவாதங்கள் தொடரும்!
நமக்கென்ன! நாமும் ரசிப்போம்!
No comments:
Post a Comment