மலேசியர்களுக்கு இன்னொரு பெரிய அடி விழுந்திருக்கிறது!
நாட்டில் பொது முடக்கம் தொடரும் என்கிற செய்தி அப்படி ஒன்றும் நல்ல செய்தி என்று யாருமே இன்றைய நிலையில் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை மக்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.
பொதுவாக மக்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். அதுவே மக்கள் எதிர்நோக்கும் முதலாவது பிரச்சனை. தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் மட்டு அல்ல தொழில் செய்து கொண்டிருக்கும் சிறு குறு வியாபாரிகளுக்கும் அதே கதி தான். வருமானம் இல்லாமல் கடைகளை இழுத்து மூடிக் கொண்டிருப்பவர்கள் பலர்.
மக்கள் நடமாட்டம் இல்லாமல், வருமானம் இல்லாமல் தவிக்கின்ற இந்தக் காலக் கட்டத்தில் அனைத்துப் பொருட்களின் விலைகளும் ஏறிவிட்டன. ஏதோ பண்டிகை என்கிற நினைப்போ என்னவோ தெரியவில்லை!
இந்த நேரத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பு என்னவென்று அவர்களுக்கும் தெரியவில்லை பொது மக்களுக்கும் தெரியவில்லை! மக்கள் வருமானமின்றி தவிக்கும் இந்தக் காலக்கட்டத்தில் பொருட்களின் விலைகளை - குறிப்பாக உணவு சம்பந்தப்பட்ட விலைகளை - ஏறாமல் பார்த்துக் கொள்ளுவது அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. அதனை மட்டும் அல்ல எதனையும் செய்யவில்லை என்பது தான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு. ஏதோ மரக்கட்டைகளை ஆட்சியில் வைத்திருக்கிறோமோ (நாம் வைக்கவில்லை என்பது வேறு விஷயம்) என்கிற எண்ணம் தான் வலுவாக நம் முன் நிற்கிறது!
ஆட்சியில் உள்ளோர், ஆட்சியாளர்கள் யாருமே இது பற்றி வாயைத் திறக்கவில்லை என்பது தான் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் என்ன செய்ய முடியும்? சாப்பாடு இருந்தால் ஏதோ 'போனால் போகிறது' என்று விட்டுக் கொடுப்பார்கள். வேலை இல்லை, சாப்பாடு இல்லை. வேறு என்ன தான் இருக்கிறது? கொரோனா இருக்கிறது! தடுப்பூசி இருக்கிறது!
இதை வைத்துக் கொண்டு மக்கள் என்ன செய்வார்கள்.தடுப்பூசி போட வேண்டுமென்றால் போக்குவரத்து வசதி வேண்டும். தடுப்பூசி போட்டுவிட்டு பட்டினியாக இருக்க முடியாது! அதற்குச் சாப்பாடு வேண்டும். பணம் இல்லாமல் எதுவுமே நடக்காது!
மக்கள் அரசாங்கத்தில் வேலை செய்தால் மாதச் சம்பளம் முழுமையாக கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் வருமானத்திற்குக் குறை இல்லை என்றால் கொரோனா வைப் பற்றி யாருக்கு என்ன கவலை! எல்லாப் பேரங்காடிகளையும் சுற்றிச் சுற்றி வரலாம்! துரித உணவகங்களை வலம் வரலாம்! அப்படியே ஒரு நாள் செத்துப் போனாலும் மனைவிக்கோ, கணவனுக்கோ தொடர்ந்து வருமானம் வரும்!
ஆனால் தனியார் துறையில் அந்த நிலை இல்லை. தனியார் துறையில் வேலை செய்யாதவர்களும் நிறையவே இருக்கிறார்கள். அன்றாட காய்ச்சிகள் என்கிற ஒரு பிரிவும் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்கள் நிலை என்ன?
ஏதோ அவர்களால் இயன்றதை சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் ஆப்பு வைத்தாகி விட்டது. அவர்கள் என்ன செய்வார்கள்?
பொது முடக்கம் நம்மை மிரள வைக்கிறது. அதுவும் ஏழை மக்களை நினைக்கும் போது நம்மால் கண்ணீர் விடத்தான் முடிகிறது.
இந்த மக்களுக்கு அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment