Sunday 20 June 2021

இவர்களின் குறைபாடுகள் என்ன?

 சில சமயங்களில் சில விஷயங்களைப் பேசும் போது மனது வலிக்கின்றது.

தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் தொழிலாளர்களைத் தான் சொல்கிறேன். அவர்கள் மீது நமக்கு வெறுப்பில்லை என்று ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். வெளி நாடுகளிலிருந்து பலர் இங்கு வந்து  வேலை செய்கின்றார்கள்.

அவர்களையெல்லாம் நாம் வெறுப்பதில் நியாயமில்லை. அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் வருகிறார்கள். பிழைத்துவிட்டுப் போகட்டுமே! நமக்கு என்ன வந்தது?

ஆனால் தமிழ் நாட்டுத் தொழிலாளர்கள் என்றால் ஒரு சில உணவக உரிமையாளர்களுக்கு அவர்கள் ஏனோ இவர்களுக்குத் "தொக்காகப்"   போய்விடுகிறார்கள்!

உணவக உரிமையாளர்கள் என்று குறிப்பாக ஏன் சொல்லுகிறேன் என்றால் அங்கு தான் அதிகமான பிரச்சனைகளைத் தமிழ் நாட்டவர்கள் எதிர் நோக்குகிறார்கள்! உண்மையைச் சொன்னால் இந்த உணவக உரிமையாளர்கள் எந்த உணவகத் தொழில் பின்னணியும்  இல்லாதவர்கள். பாரம்பரியமாக உணவகத் தொழிலில் உள்ளவர்களால் எந்தப் பிரச்சனையும் எழுவதில்லை. அவர்கள் தொழிலைத் தெரிந்தவர்கள். அவர்களுக்குத் தொழிலாளர்கள் தேவை. அவர்களின் அருமை பெருமையை அறிந்தவர்கள்.

தீடீர் உணவக முதலாளிகள் தான் பிரச்சனைகளை உருவாக்குபவர்கள். அதற்கு ஒரே காரணம் தான் உண்டு.  தமிழ் நாட்டிலிருந்து வருபவர்கள் பலர் நடைமுறை முறைமைகளை அறியாதவர்கள். பலர் தங்களது வாழ்நாள் சேமிப்புக்களை சொத்துக்களை விற்று வேலை செய்ய இங்கு வருகிறார்கள். அவர்கள்  முற்றிலுமாக அங்குள்ள முகவர்களை நம்புகிறார்கள். அவர்களோ இவர்களைச்  சரியான ஆவணங்கள் இன்றி இங்கு அனுப்பி வைக்கிறார்கள்.

அதனைத் தான் இங்குள்ளவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். பயணச்சீட்டு,  பயணிகள் விசா,  ஒரு சில மாதங்களே தங்க முடியும் - போன்ற எதனையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. பெரும் தொகைக் கொடுத்து இங்கு வேலை செய்ய வந்தவர்கள் கடைசியில் சட்டத்திற்குப் புறம்பாக நாட்டில் தங்கியிருப்பவர்கள் என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கடைசியில் இந்த தொழிலாளர்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எங்கு இருக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. கடவுச்சீட்டு இல்லை. காண்பிப்பதற்கு எந்த ஆவணங்களும் இல்லை.

இப்போது நமக்குத் தெரிய வேண்டியதெல்லாம் இந்த திடீர் உணவக முதலாளிகள் எல்லாம் எப்படி தப்பி விடுகிறார்கள் என்பது தான். காவல்துறை எந்த நடவடிக்கையும்  எடுப்பதில்லை. மனிதவள அமைச்சு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏதோ நாட்டில் சட்டமே இல்லாதது போல் அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன!

ஆமாம் இந்த முதலாளிகளின்  குறை தான் என்ன?

No comments:

Post a Comment