Tuesday 8 June 2021

துங்கு ரசாலி சரியான மனிதரா?

 இப்போதைய இடைக்கால பிரதமர் முகைதீன் யாசின் எந்த அளவுக்கு மலேசிய மக்களிடையே செல்வாக்குப்  பெற்றிருக்கிறார் என்று காணும் போது நமக்குக் கொஞ்சம் வருத்தம் தான்.

செல்வாக்கு என்பதை விட்டுத் தள்ளுவோம். அவருடைய செயல்பாடு தான் நமக்கு முக்கியம்.

ஆனால் அவர் பூஜ்யம் செல்வாக்குப் பெற்றவராகத்தான் இருக்கிறார். எந்த நிலையிலும் அவர் மலேசிய மக்களுக்குத் தலைமை தாங்க தகுதியற்றவராகத்தான்  தென்படுகிறார்.  

அவர் இந்நாட்டிற்குத் தலைமை தாங்குவது என்பது கோவிட்-19 புண்ணியம் என்று தான் சொல்ல வேண்டும்! அந்தத் தொற்று மட்டும் இல்லையென்றால் அவர் என்றோ ஓரங்கட்டப்பட்டிருப்பார். ஏன்? கோவிட்-19 தொற்றை, தனது சுயநலத்திற்காக,  நாட்டில் இன்னும் அதிகப்படுத்தியவரே அவர் தான். இன்று நாடு இந்த அளவுக்கு சிரமத்திற்குள்ளாக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு அவர் தான் காரணம்!

இன்றைய சூழலில் நாட்டை வழிநடத்த வேறு யார் பொருத்தமானவராக இருப்பார் என்னும் போது துங்கு ரசாலி ஹம்சா அவர்களின் பெயரை ஒரு சிலர் பரிந்துரைக்கின்றனர்.

துங்கு ரசாலி நீண்ட நாள் நாடாளுமன்ற உறுப்பினர்.  எல்லாப் பிரதமருடனும் பணி புரிந்திருக்கிறார். அவருடைய நேர்மை பற்றியோ நாணயம் பற்றியோ யாரும் கேள்வி எழுப்ப முடியாது. அவர் நாட்டை வழி நடத்த எல்லாத் தகுதியும் உடையவர். அவர் அம்னோ கட்சியைச் சேர்ந்தவர் தான்.  ஆனால்  மற்ற அம்னோ ஊழல் தரப்பினருடன் அவரை ஒப்பிட முடியாது. 

இன்று மலேசியர்கள், உண்மையைச் சொன்னால், ஒரு விரக்தி நிலைக்கு வந்து விட்டனர். வேலை இல்லை. வருமானம் இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரு செயல்பாடற்ற அரசாங்கத்தினால் மக்கள் அவதிப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது என்பது தான் மக்களின் மனநிலை.

வேறு யாரின் பெயரைச் சொன்னாலும் உடனே அங்கே ஒரு அரசியல் வந்துவிடுகிறது! அதனால் பல குளறுபடிகள்!

துங்கு ரசாலி,  பிரதமர் பதவிக்கு நல்லதொரு பரிந்துரை தான்.  அவர் தடுமாற்றம் இல்லாத நல்ல பிரதமராகத் திகழ முடியும் என்பதே நமது முடிவு. இடைக்காலப்  பிரதமராக இருக்கட்டுமே! என்ன கெட்டுப் போய் விட்டது?

துங்கு ரசாலி சரியான மனிதர் தான்! தகுதியான மனிதர் தான்!

No comments:

Post a Comment