Saturday 12 June 2021

கல்வியை விட்டு விடாதீர்கள்!

எஸ்.பி.எம். பரிட்சை முடிவுகள் வெளியாகி விட்டன.

வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர். மகிழ்ச்சி என்பது உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் தான்.

நீங்கள் வெற்றி பெற வேண்டும். உயர் கல்வி பயில வேண்டும் என்பதையெல்லாம் நாங்களும் விரும்புகிறோம்.  உங்கள் பெற்றோர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ அதே மகிழ்ச்சியைத்தான் நமது சமுதாயமும் கொண்டாடுகிறது. 

வருங்காலங்களில் நீங்கள் தான் நமது சமுதாயத்தின் மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், கணக்காளர்கள், ஆடிட்டர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள் -  இப்படி எல்லாமே நீங்கள் தான். நீங்கள் தான் இந்த சமுதாயத்தின் பெருமைகளை மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள்.

கல்வி என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. பல காரணங்கள். அதில் வறுமையையும் ஒரு காரணம் தான்.

அப்பன் குடிகாரனாக இருந்தால் அந்த குடும்பமே பல வழிகளில் அடிபடும். சாப்பாட்டுக்கே வழி இல்லாத குடும்பங்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஆனால் எந்த சூழ்நிலையிலும் கல்வியை விட்டுக் கொடுக்காத குடும்பங்கள் பலர் இருக்கின்றனர்.  எப்பாடு பட்டாவது குழந்தைகளின் கல்வியில் சமரசம் செய்து கொள்வதில்லை. காரணம் கல்வி மட்டும் தான் அவர்களை  முன்னேற்றத்துக்குக் கொண்டு செல்லும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர்.

ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.  எஸ்.பி.எம். தேர்வில் வெற்றி என்பது முதல் படி தான்.  இதனை வைத்துக் கொண்டு பெரிதாக எதனையும் சாதித்து விட  முடியாது. அடுத்து கல்லூரி, பல்கலைக்கழகம் என்று தொடர்ந்து படிக்க வேண்டும்.

அப்போது தான் நீங்கள் படித்த படிப்புக்கு மரியாதை. வேலை செய்தே ஆக வேண்டும் என்கிற சூழலில் உள்ளவர்கள்  தொடர்ந்து திறந்த வெளி பல்கலைக்கழகங்களில் தங்களின் கல்வியைத் தொடரலாம்.

வெற்றி பெற்ற அனைவரும் தொடர்ந்து டிப்ளோமா, டிகிரி  என்று தங்களது கல்வியைத் தொடர வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் கல்வியை விட்டு விடாதீர்கள்!

No comments:

Post a Comment