Monday 7 June 2021

ஏதோ சரியாயில்லை!

 மலேசிய இந்து சங்கம் செய்தது சரியான  ஒரு நடவடிக்கை இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை முன் கூட்டியே நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

ம.இ.கா. வைப் போலவே இந்து சங்கமும் ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறதோ என்று யோசிக்க வேண்டியுள்ளது.

அரசாங்கம் கோடிக்கணக்கில் கொடுக்கும் மானியத்தை முதலில் வாங்கிக் கொள்வது. கோடிக்கணக்கில் வர்த்தகர்களுக்கு உதவி செய்வது அதன் பின்னர் வாங்க ஆளில்லை என்று சொல்லி திரும்பவம் அந்தப் பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது  என்பது ம.இ.கா. இந்திய சமூகத்திற்குக் கற்றுக் கொடுத்த பாடம்.

இதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். முதலில் வாங்குவது போல் வாங்கு. அது இந்தியர்கள் கவனம் பெற. அதன் பின்னர் பெறுநர் யாருமில்லை என்று சொல்லி அந்த மானியத்தை அப்படியே திருப்பிக் கொடுத்து விடு. அப்படிச் செய்தால் உயரிய விருதுகள் கிடைக்கும்.  செனட்டர் பதவி கிடைக்கும். அத்தோடு கமிஷனும் கிடைக்கும்.  எல்லாவற்றையும் விட மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

இது ம.இ.கா. வின் பிரபலமான ஒரு வழிமுறை இந்தியர்களை ஏமாற்ற! இப்போது இந்து சங்கமும் அதே பாணியைப் பின்பற்றுகிறதோ, பக்தர்களை ஏமாற்ற,  என்று நினைக்க வேண்டியுள்ளது. இருந்தாலும் இது கோயிலுக்கான பணம். கோயிலுக்கான பணம் என்றாலே யோசிக்கத்தான் செய்வார்கள்.  ஏனெனில் கோயில் சொத்து குல நாசம் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள் பெரியவர்கள்.

இது சரியோ தவறோ தெரியவில்லை. மித்ராவின் பணம் என்பது இந்தியர்களின் வர்த்தக வளர்ச்சிக்காக ஆரம்பிக்கப்பட்டது. இப்போது இது மடை மாற்றப்பட்டு யாருக்கும் உதவாத நிலைக்குத் தள்ளப்படுகிறது என்பது தான் நமது வருத்தம்.

இன்னும் சில ஆண்டுகளில் இந்த மித்ராவின் பணம் தேவை இல்லை என்று ஒரு சாரார் சொல்ல வருவார்கள். காரணம் அந்தப் பணத்தை வாங்க ஆளில்லை என்று இவர்களே அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்வார்கள்!

நல்லதொரு தலைமைத்துவம் இல்லையென்றால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் என்கிற நிலை தான் ஏற்படும்!


No comments:

Post a Comment