Monday 14 June 2021

மற்ற வழிகளையும் ஆராயுங்கள்!

எஸ்.பி.எம். தோல்வி என்பது அத்தோடு முடிவடைந்து விடுவதில்லை!

கல்வியைத் தொடர்வதற்கு இன்னும் நிறையவே வழிகள் இருக்கின்றன. அரசாங்கம் நிறைய வழிகளைத் திறந்து விட்டிருக்கின்றது. எங்கும் ஓட வேண்டிய அவசியமில்லை! தலையில் கையை வைத்துக் கொண்டு கவலைப்பட வேண்டிய அவசியமில்லை!

வழிகள் ஆயிரம் உண்டு. அந்த வழிகளைப் பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

ஒரு மலாய் மாணவியை எனக்குத் தெரியும். எஸ்.பி.எம். தேர்வில் குறைவான புள்ளிகளைப் பெற்றவர். அவர் தொடர்ந்து தொழில்கல்வி பயில பதிவு செய்தார்.  அங்கு அவருக்குக் கிடைப்பதெல்லாம் சான்றிதழ் மட்டும்தான். அங்கு  அவர் சிறப்புத் தெர்ச்சி பெற்றார். அதன் பின்னர் அவருக்கு டிப்ளோமா கல்வி பயில மூன்றாண்டு காலம்,   தனது கல்வியைத் தொடர, அவருக்கு வாய்ப்புக் கிடைத்து அந்த மூன்றாண்டுகளையும் முடித்தார். அதன் பின்னர் அவருக்குக் பலகலைக்கழகத்தில் கல்வி பயில வாய்ப்புக் கிடைத்திருப்பதாகச் சொன்னார்.

அது மட்டும் அல்ல. ஒரு தமிழ் மாணவி. சான்றிதழ் முடித்த பின்னர் டிப்ளோமா பயில வாய்ப்புக் கிடைத்தது. அவருக்கும் மேற்படிப்புப் பயில வாய்ப்புக் கிடைத்ததை நான் அறிவேன்.

நான் சொல்ல வருவதெல்லாம் ஓரிடத்தில் தோல்வி என்றாலும் இன்னொரு இடத்தில் உங்களால் உயர முடியும். வெறும் திறன் பயிற்சி மட்டும் போதும் என்று நினைப்பவர்கள் ஓராண்டு கால பயிற்சியை மேற்கொள்ளலாம். அதற்கு மேலும் உயர வேண்டும் என்று நினைப்பவர்கள்  அந்த ஓராண்டு கால சான்றிதழ் படிப்பை சிறப்பாகச் செய்தால் இன்னும் தொடரலாம்.

வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன. எஸ்.பி.எம். தோல்வி என்பதை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு அடுத்த வாய்ப்பு என்ன என்று தேட வேண்டும். தொழில்திறன் பயில ஏகப்பட்ட தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. அவை பெரும்பாலும் பணத்தையே குறிக்கோளாக கொண்டவை. அங்கே தரமற்ற கல்வி தான் கிடைக்கும்.  ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் அவர்கள்!

அரசாங்கம் நிறையவே தொழில் பள்ளிகளைக் கட்டி வைத்திருக்கிறது. நிறையவே கல்வி பயில வாய்ப்புக்களை அள்ளி அள்ளி வழங்குகிறது. இவைகள் எல்லாம் வேண்டாமென்றாலும் கூட பினாங்கு புக்கிட் மெர்டாஜத்தில் ஆறுமுகம் பிள்ளை தொழில் நுட்பக் கல்லூரி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அங்கு இந்திய மாணவர்கள் கணிசமான  அளவு கல்வி பயிலுகின்றனர்.  இந்திய மாணவர்களுடன் தான் படிப்பேன் என்று அடம் பிடிப்பவர்கள் அதனையும் முயற்சி செய்யலாம்.

நாட்டில் கல்வி பயில நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன. "நான் எங்கும் என் பிள்ளைகளை அனுப்ப மாட்டேன்! கெட்டுப் போவார்கள்! எனக்குப் பக்கத்தில் தான்  படிக்க இடம் வேணும்!"  என்று சொல்லும் பெற்றோர்களுக்கு ஓர் ஆலோசனை. இன்றைக்குக் கெட்டுப் போகுபவர்கள் எல்லாம் வீட்டில் இருக்கும் போது தான் கெட்டுப் போகிறார்கள்! வீட்டுக்கு வெளியே அல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!

கடைசியாக, அப்படியே நீங்கள் எஸ்.பி.எம். தேர்வில் வெற்றி பெறவில்லை என்கிற நிலையில் இருந்தாலும் நம்பிக்கை  இழந்து விடாதீர்கள். இன்னும் நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன. இருக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களின் முயற்சி தான் முக்கியம். அவன் உதவுவான், இவன் உதவுவான் என்று பிறர் மீது பழிபோட நினைக்காதீர்கள்! உங்களுக்கு நீங்கள் தான் உதவி.

வெற்றி பெற வாழ்த்துகள்!

No comments:

Post a Comment