Tuesday 15 June 2021

இதற்கு ஏன் நன்றி, பாராட்டு?

 நமது பெருமைகளை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு ஏன் நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டும். இந்த அளவுக்கு நாம் அடிமையாக இருக்க வேண்டுமா?

ஆமாம்! நமக்கும் கோபம் வரும்! வராதா என்ன? கோபம் ஓரே ஒரு இனத்திற்கு மட்டும் குத்தகைக்கு விடப்படவில்லையே!

கிள்ளான் செட்டி பாடாங் பெயர் ஏன் மாற்றப்பட வேண்டும் என்பதில் எந்த முகாந்திரமும் இல்லை. சும்மா ஒரு பெயரை மாற்றி விட முடியாது. அதுவும் ஒரு சரித்திர நிகழ்வு பெற்றதாகக் கூறப்படும் அந்த இடத்தின் பெயரை ஏன் மாற்ற வேண்டும்?  சுமார் நூறு ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியை கொண்ட அந்த இடைத்தின் பெயரை மாற்ற வேண்டிய காரணம் என்ன? இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவரது மகள் இந்திரா காந்தியும் கால் பதித்த இடம் அந்த செட்டி பாடாங் என்று சொல்லப்படுகிறது.  அது நடந்தது 1949 - ம் ஆண்டு. அதாவது சுமார் 72 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வு. பழைய நிகழ்வுகளை அப்படியே தூக்கி எறிந்து விட முடியாது. அது சரித்திரம். மீண்டும் அவர்கள் இங்கு வர வாய்ப்பில்லை. 

நமது குழந்தைகள் பள்ளிகளில் கற்கும் சரித்திரமே கொஞ்சமும் சம்பந்தா சம்பந்தம் இல்லாத மலேசிய சரித்திரம் என்று சொல்லி எதை எதையோ கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்! அதே நேரத்தில் உண்மை சரித்திரத்தையும் ஒரு பக்கம் மறைத்துக் கொண்டிருக்கிறோம்!

கிள்ளான் நகராணமைக் கழகம் ஏன் இப்படி ஒரு கலக மனப்பான்மையோடு செயல்படுகிறது என்று நமக்கு கேள்வி எழுத்தான் செய்கிறது. சரித்திரம்  அறியாதவர்கள் பதவியில் இருந்தால் என்னன்ன நடக்கும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்!

 இதிலே, எனக்கு,  ஒரு சில அபிப்பிராய பேதங்கள் உண்டு. பெயரை மாற்றி விட்டார்கள். நமது மக்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். அதன் பின்னர் சிலாங்கூர் ஆட்சிக்குழு கூடுகிறது. நமது மாண்புமிகுகளும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் சிலாங்கூர் மந்திரி பெசார் "நாங்கள் எல்லாரும் கூடி அந்த பழைய பெயரையே  தொடர்கிறோம்!" என்று அறிவித்து விட்டார்! 

அது சரி,  நகராண்மைக் கழகத்தில் இருக்கின்ற  நமது இந்திய பிரதிநிதிகள் எங்கே போனார்கள்? ஓடியே போய்விட்டார்களா? இவர்கள் தான் நமது சமுதாயத்தின் இனத் துரோகிகள்.  அந்தக் கால சாமிவேலுவைப் போலவே செயல்படுகின்றனர். ஒன்று நமது உரிமைகளுக்காகப் போராட வேண்டும்.  நமது இனம் சார்ந்த உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்கிற பாடத்தை அரசியலுக்கு வருவதற்கு முன்னரே  கற்றிருக்க வேண்டும். எதுவும் இல்லாத பஞ்சப்பராரிகள்!

ஆனால் எல்லாவற்றையும் விட மந்திரி பெசாரைப்  பாராட்டுகிறோம்! மகிழ்ச்சியடைகிறோம்!  அடடா!  என்ன பாராட்டு மழைகள்! ஏன்? அந்த புதிய பெயரை மாற்றும் போது மந்திரி பெசாருக்கோ, மாண்புமிகுகளுக்கோ ஒன்றுமே தெரியாமல் நாட்டை விட்டு வெளியே போய் விட்டார்களா?

இங்கு யாருமே பாராட்டுக்குரியவர்கள் அல்ல!  மக்கள் தான், தமிழர்கள் தான், பிரச்சனையைக் கையில் எடுத்த தமிழ் மக்கள்  தான் பாராட்டுக்குரியவர்கள்!

No comments:

Post a Comment