Thursday 10 June 2021

மீண்டும் முகைதீனா?

 அரசியல் கட்சி தலைவர்கள் மாமன்னரைச் சந்திக்கிறார்கள்.

மாமன்னர் எல்லாக் கட்சித் தலைவர்களையும் ஏறக்குறைய சந்தித்து விட்டார் எனலாம். இப்போது அவர் மாநில சுல்தான்களைச் சந்தித்த பின்னர் அவர் நாட்டின் நலன் கருதி ஒரு நல்ல முடிவுக்கு வருவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

நல்ல முடிவு என்றால் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியவில்லை! நம்முடைய எதிர்பார்ப்பு, தலைவர்களின் எதிர்பார்ப்பு, மாமன்னரின் எதிர்பார்ப்பு - இவைகள்  எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

கட்சித் தலைவர்களின் எதிர்பார்ப்பு என்பது வேறு. அவர்கள் பதவிக்காக போராடும் போராட்டக் குணம் உடையவர்கள்.  மக்களின் நலன் என்பது அவர்களின் சிந்தனைக்கு வருவதில்லை. சுல்தான்கள் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அவர்களின் ஒருமித்த கருத்துத் தான் மாமன்னரின் கருத்தாக இருக்கும் என்று யூகிக்கலாம். 

கடந்த கால நிகழ்வுகளைப் பார்க்கும் போது  அப்படித்தான் அது நடந்திருக்கிறது. இன்றைய பிரதமர் முகமது யாசின் தொடர்ந்து பிரதமராக இருப்பதற்கு சுல்தான்களும் ஒரு காரணம் எனச் சொல்லலாம்.

ஆனால் இந்த முறை ஏதேனும் மாற்றங்கள் நிகழக்கூடிய சாத்தியங்கள் உண்டா என்று பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. காரணம் பிரதமர் முகமது யாசினின் "இயங்காமல் இருப்பதே நமக்கு நல்லது!" என்கிற பாணியில் நாட்டை வழிநடத்துகிறார்!

இப்பொழுது மக்கள் பெரும்பாலும் விரக்தி நிலையில் இருக்கின்றனர். பல பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர். வேலை செய்தால் தான் தங்களது குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்கிற நிலையில் இருக்கும் மக்களிடம் என்னன்னவோ காரணங்கள் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு போவது இனி மேலும் ஏற்றுக்கொள்ள முடியாது  என்பது தான் மக்களின் நிலை.

பிரதமர்,  தானும் செய்யமாட்டார் மற்றவர்களுக்கும்  வழிவிடமாட்டார் என்பதை இன்னும் எத்தனை காலத்திற்கு மக்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியும் என்பது தெரியவில்லை! அவர் ஏதேனும் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.  பதவியில் இருக்கும் வரை எதையாவது செய்து பிரச்சனைகளைக் குறைக்க வேண்டும்.  ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என்பதைத்தான் மக்கள் குறையாகப் பார்க்கிறார்கள்.

இப்போது, வருகின்ற இடைக் காலத்தில், யார் நாட்டை வழி நடத்தப் போகிறார் என்று மக்களிடையே கேள்வி எழுப்பப்படுகிறது.  மாமன்னரை சந்தித்த பின்னர், இதற்கு முன்னர்  என்ன நடந்திருக்கிறது என்று பார்க்கின்ற போது,  இன்றைய பிரதமர் தனது பதவியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருக்கிறது என்பது தான் பளிச்செனத் தெரிகிறது!

வேறு என்ன தான் நடக்கும்?

No comments:

Post a Comment