Wednesday 23 June 2021

பிரதமர் முகைதீன் சீனாவை மிஞ்சிவிட்டார்!

நமது பிரதமர் முகைதீனை குறை சொல்லுவது என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது!

உண்மையைச் சொன்னால் அவர் இப்போது பதவியில் இருப்பதே கோவிட்-19 புண்ணியம் என்று தான் சொல்ல வேண்டும்!  இந்தத் தொற்று என்று ஒன்று இல்லாவிட்டால் அவர் எப்போதோ மூட்டையைக் கட்டியிருப்பார்! கட்டியிருக்க வைத்திருப்பார்கள்! 

அந்தத் தொற்றை வேண்டுமென்றே நாடு முழுவதும் பரப்பி இப்போது நாட்டு மக்கள் அனைவரையும் சிரமத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார் என்பது தொடர்ந்து அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு!

இப்போது கோவிட்-19 எந்த நிலையில் நாட்டில் உள்ளது? இப்போது அது தான் நாட்டில் பேசும் பொருளாக மாறி  இருக்கிறது! ஆமாம் சின்னஞ்சிறிய நாடான நாம் தொற்று நோய் என்று வரும் போது, இறப்பு விகிதத்தில்,  நாம் சீனாவை மிஞ்சி விட்டோம்  என்று செய்திகள்  வருகின்றன.

ஒவ்வொரு நாடும் என்னன்னவோ சாதனைகளை உலக  அளவில் செய்து கொண்டிருக்கின்றன.  இருந்திருந்தும்  கோவிட்-19 தானா நமக்குச்  சாதனையாக  ஆக  வேண்டும்!

அது என்னவோ தெரியவில்லை, நாட்டின் பிரதமராக முகைதீன் பின் கதவு வழியாக வந்த போது, கோவிட்-19 முன் கதவு வழியாக உள்ளே நுழைந்தது!  அது எதேச்சையாக நடந்ததா திட்டமிட்டு நடந்ததா என்றால் அது  அப்படி நடந்ததாகத் தெரியவில்லை!

ஆனால் அதன் பின்னர் நடந்தது எல்லாம் திட்டமிடப்பட்டு நடந்தவை என்பது மக்கள் அறிவர். எல்லா மாநிலங்களிலும் அந்தத் தொற்று  திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டன!

அது தான் நம் நாட்டில் இப்போது நம்மை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிற  கோவிட்-19 தொற்றின் ஒரு சிறிய சுருக்கம். இப்போது நம்மாலும் பொறுத்துப் போக முடியவில்லை. வீட்டில் அடைந்து கிடப்பது என்பது ஒரு புதிய அனுபவம். அத்தோடு அது முடிந்து விடவில்லை. வேலை இல்லை. வருமானம் இல்லை. "பூவாவுக்கு" என்ன செய்வது? இது தான் மக்கள் நோக்கும் மகத்தானப் பிரச்சனை.

அதுவும் மலேசியர்களில்   அன்றாடக் காய்ச்சிகள் பலர் இருக்கின்றனர். சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். ஏதோ அதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் இவர்கள். இவர்கள் எல்லாம் தங்களது குடும்பங்களை எப்படிக் காப்பாற்ற முடியும்?

ஊரடங்கு என்றால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்ந்தால் சொல்ல வேண்டியதில்லை. அவர்களின் குடும்பங்களை யார் காப்பாற்றுவது? ஊரடங்கு என்றால் அரசாங்கம் தான் அவர்களுடைய குடும்பங்களின் நலனுக்கு முழு உத்திரவாதம் கொடுக்க வேண்டும்.

பதவிக்காக அடித்துக் கொண்டு தொற்று நோயை வளர்த்து விட்டனர். அதை இன்னும் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். அது தான் ஆளும் அரசியல்வாதிகளுக்குப் பதவியில் தொடர பாதுகாப்பு!

பிரதமர் முகைதீன், தனது ஆட்சி காலத்தில்,  கோரானா தொற்றை வளர்த்துக் கொண்டே பதவியில் நீடித்தவர் என்கிற பெயரைப் பெறுகின்றார்! அத்தோடு சீனாவையும் மிஞ்சிவிட்டார் என்கிற பெயரையும் பெறுகின்றார்!

No comments:

Post a Comment