Wednesday, 16 June 2021

வெற்றி மனப்பாங்கு என்பது இது தான்!

 ஒரு மாணவியைப் பற்றியான செய்தியைப்படித்த போது அவர் பாராட்டப்பட வேண்டியவர் என்று தோன்றியது.

பிரவீணா சந்திரன் என்கிற மாணவி எஸ்.பி.எம். தேர்வில் 8A  எடுத்து சாதனைப் புரிந்திருக்கிறார். அவரை விடக்  கூடுதலான புள்ளிகள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. 

ஆனால் அவர்களுக்கும் இந்த மாணவிக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உண்டு.  இனி கல்வி கற்பது இயங்கலை வழி தான் என்கிற நிலை வந்த போது அவருக்குத் தேவையான மடிக்கணினி கைவசம் இல்லை. அவருடைய சூழ்நிலை  அவரால் கணினி வாங்க இயலவில்லை. 

அந்த நேரத்தில் அவரிடம் இருந்ததெல்லாம் ஒரே ஒரு பழைய கைப்பேசி மட்டுமே.  அந்த கைப்பேசியை வைத்தே  இயங்களையில் அவர் தனது பாடங்களைப் படித்து  எஸ்.பி.எம். தேர்வில் எட்டு ஏக்களை வாங்கி சாதனைப் புரிந்துள்ளார். அவரே நேர் முக வகுப்பில் கலந்து கொண்டிருந்தால் அல்லது மடிக்கணினி வசதியிருந்திருந்தால் அவரும் மற்றவர்களைப் போல பத்து, பதினோரு ஏக்களை வாங்கிக் குவித்திருப்பார்.

நம்மிடையே ஒரு பழமொழி உண்டு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று சொல்லுவார்கள்.  அதைத்தான் ஞாபகத்துகிறார் பிரவீணா. எதைப்பற்றியும் கவலைப்படாமல், தனது இயலாமையும் பற்றிக் கவலைப்படாமல் தன்னிடம் இருப்பதைக் கொண்டு சாதனைப் புரிந்திருக்கிறார் இந்த மாணவி. 

இவரை விட இன்னும் மிக மோசமான சூழலில் இருந்த மாணவர்கள் கூட பல இன்னல்கள் இடர்களைத் தாண்டி வெற்றி பெற்ற கதைகள் எல்லாம் நம்மிடம் உண்டு.

நமக்குத் தேவை எல்லாம் வெற்றி பெற வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் தான்.  அத்தோடு வெற்றி பெற முடியும் என்கிற மனப்பக்குவம், மனப்பாங்கு என்பது முக்கியம்.  தோல்வியைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் எப்படி வெற்றி பெறுவது என்பது தான் நம் மனதில் நிற்க வேண்டும். வெற்றி பெற நினப்பவர்களுக்கு மாற்றுச் சிந்தனை தேவை இல்லை. காரணம் நமது குறிக்கோள் என்பது வெற்றி மட்டும் தான்.

நாம் இந்த மாணவியை வாழ்த்துகிறோம்.  இவர் எந்தத் துறையில் படிக்க நினைக்கிறாரோ அதுவே அவருக்குக் கிடைக்கவும் நமது வாழ்த்துகள். 

அவர் நிச்சயமாக தான் விரும்புகிற துறையைத் தெர்ந்தெடுத்து அதிலே மாபெரும் வெற்றி பெறுவார் எனவும் நாம் நம்புகிறோம். பல இடர்களைக் கலைந்து எஸ்.பி.எம். தேர்வில் வெற்றி பெற்றவருக்கு வருங்காலங்களில் எந்த ஒரு சோதனையையும் சாதனையாக மாற்றும் இயல்பு அவருக்கு உண்டு என்பதில் ஐயமில்லை.

பிரவீணா தொடர் வெற்றிகளைக் குவிக்க வேண்டும்! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment