Tuesday 29 June 2021

தடுப்பூசி போடுவதில் நாம் பின் தங்கியிருக்கிறோமா?

 கொரோனா தடுப்பூசி போடுவதில் நமது அரசாங்கம் முனைப்புக் காட்டுகிறதா அல்லது சுணக்கம் காட்டுகிறதா?

இப்படி ஒரு கேள்வியை நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும். காரணம் பொதுவாக நாம் பார்க்கும் போது அரசாங்கத் தரப்பிலிருந்து இன்னும் ஏனோ தானோ போக்கில் தான் இந்தத் திட்டம் போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டியிருக்கிறது!

அதாவது அப்படியும் இல்லை இப்படியும் இல்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. போடு என்றும் சொல்லவில்லை போட வேண்டாம் என்றும் சொல்லவில்லை.  போட்டால் போடு போடாவிட்டால் போ! என்கிற ஒருவித அலட்சியம் தான் நிலவுகிறது!

அதாவது கோவிட்-19 முற்றாக நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்கிற முனைப்பு அரசாங்கத்திடம் இல்லை என்று தான் நாம் கணிக்க வேண்டியிருக்கிறது.

இன்று உலகெங்கிலும் எல்லா நாடுகளும் கோவிட்-19 க்கான தடுப்பூசியைத் தங்கள் நாட்டு மக்கள் போட வேண்டும் என்பதிலே முனைப்புக் காட்டுகின்றன. இது ஒன்றும் அதிசயம் அல்ல.  அது அவர்கள் நாட்டு மக்களின் நலன் சார்ந்தது. போட்டுத்தான் ஆக வேண்டும்.  மக்கள் வியாதியால் முடங்குவதும் நாட்டு மக்கள் மரணிப்பதும் எந்த நாடும் விரும்பவதில்லை.  நமது அரசியல்வாதிகள் விதிவிலக்கோ?

இந்தத் தொற்று பரவினால் பரவாயில்லை, மக்கள் செத்தால் கூட பரவாயில்லை இன்னும் கொஞ்ச நாள் நீடிக்கட்டுமே என்கிற மனப்போக்கு நமது அரசியல்வாதிகளுக்கு உண்டு என்றே தோன்றுகிறது!

தொற்றின் தாக்கம் ஏற்பட்டதிலிருந்து இன்று வரை பார்க்கும் போது பொது மக்கள் பலர் எஸ்.ஒ.பி. யை மீறியிருக்கலாம். அதற்கான தண்டனைகளையும் அவர்களுக்குக் கொடுத்து விட்டார்கள்.  ஆனால் இதில் குறிப்பாக நமது நாட்டின் அமைச்சர்கள் பலர் எஸ்.ஒ.பி. யை மீறியிருக்கிறார்கள்! அமைச்சர்கள் மீறினால் அது தான் செய்தி! மக்கள் என்ன செய்யக் கூடாது என்று சட்டம் போடுபவர்களே அதை மீறினால்  அதற்கான காரணம் என்ன? எஸ்.ஒ.பி. யை அவர்கள் விரும்பவில்லை, தொற்று தொடர வேண்டும் என்பது தானே அதன் பொருள்!

அது தான் இப்போது வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி போட வேண்டும் என்பதிலே ஆர்வமில்லை என்பது தான் அதிகாரத்தில் உள்ளவர்களின் நிலை என்பதாகத் தோன்றுகிறது!

இதில் மக்களின் நிலை என்ன?  நாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். அவர்களுடைய அரசியல் நமக்கு வேண்டாம். நமக்கு வேறு விதமான கருத்துகள் இல்லை. தடுப்பூசி என்பது உலகெங்கும் நடந்து கொண்டிருக்கிறது.  தொற்றை தடுக்க வேண்டும் என்றால் நாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நாம் நமது கடமையைத் தவறாமல் செய்வோம். முடிந்தவரை மேலும் தொற்று பரவாமல் பார்த்துக் கொள்வோம்.

தடுப்பூசி போடுவதில் நாம் பின் தங்கியிருக்கிறோமா என்று கேட்டால் "ஆம்!" என்கிற பதில் தான் வருகிறது!

No comments:

Post a Comment