Tuesday 7 September 2021

என்ன ஆயிற்று!

 நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அரசியல் சலசலப்புகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன! 

எல்லாமே ஒரு பயம் தான்! இன்னும் மத்தியில் நிலையில்லாத ஓர் அரசாங்கத்தைக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இன்னொரு பக்கம் ஒரு மாநிலத்தில் அரசியல் சலசலப்புகள் ஏற்பட்டால் தேவை இல்லாத பிரச்சனைகள் எழுமே என்கிற கவலை தான் நமக்கு!

நல்லதோ கெட்டதோ ஓர் நிலையான அரசாங்கம் நமக்குத் தேவை. நல்லதையும் கெட்டதையும் தீர்மானிக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது. அப்போது எந்த அரசாங்கம் நமக்குத் தேவை என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.

ஆனால்  மாநிலத்தில் இப்படி இடையில் பிரச்சனைகள் வந்தால் என்ன செய்ய முடியும்? ஏற்கனவே ஒரு சில மாநிலங்களில் பல குழப்பங்களுக்கிடையே ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன! கட்சித் தாவல்கள், மாற்றங்கள் என்று குழப்பங்கள் ஏற்பட்டு  கூட்டணி அரசாங்கங்கள்  அமைக்கப்பட்டன!

இது போன்ற செயல்கள் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஏற்படக் கூடாது என்பது தான் நாம் விரும்புவது. அடுத்த பொதுத் தேர்தல் வரை எந்த மாற்றமும் ஏற்படக்கூடாது. அதுவே நமது விருப்பம்.

மாநிலத்தில் உள்ள அரசியல் நிலைமை நமக்குத் தெரியவில்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம் மாநில மந்திரி பெசார் மீது சில அதிருப்திகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. மாநிலத்தில் பி.கே.ஆர். ஆட்சி அமைத்ததிலிருந்தே அவரும் ஏதோ அம்னோ அரசியல்வாதியைப் போலவே செயல்படுகின்றார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. பொது மக்கள் பார்வையில் அப்படி ஒரு கண்ணோட்டம் இருப்பது நமக்குத் தெரியும்.

ஆனால் இதனையெல்லாம் தவிர்த்து விட முடியும். காரணம் பி.கே.ஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் இங்கு இந்த மாநிலத்தில் தான் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவரால் சரி செய்து விட முடியும் என நான் நம்புகிறேன்.

இந்த அளவிற்கு அதனைப் பெரிதுபடுத்தி, பிரச்சனைகளை அதிகமாக்கி குழப்பத்தை ஏற்படுத்துவது அது எதிர்கட்சிகளுக்குத் தான் சாதகமாக அமையும். குழப்பத்தை ஏற்படுத்தவே அம்னோ கட்சியினர் என்றென்றும் தயாராக இருக்கின்றனர்!

நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!

No comments:

Post a Comment