நேரத்திற்குப் பேர் போனவர்கள் ஐரோப்பியர்கள். ஒரு நிமிடம் தாமதமானாலும் அவர்களுடனான நமது சந்திப்பைத் துண்டித்து விடுவார்கள் என்பது நமக்குத் தெரியும்!
ஐரோப்பா, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளிலிருந்து அத்தனை பொருள்களையும் நகல் எடுத்து அந்தப் பொருள்களைத் தங்களது நாட்டுக்குக் கொண்டு சென்று பல சொந்த ஆய்வுகள், ஆராய்ச்சிக்களுக்குப் பின்னர் தங்களது பொருளாக (Made-in-Japan) பொருளாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஜப்பானியர்கள் நேரத்தை மட்டும் விட்டு வைப்பார்களா! அதை எப்படி விட்டு வைப்பார்கள்? அவர்களது இரயில் பயணங்கள் எல்லாம் குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட நிமிடம், குறிப்பிட்ட விநாடி - அனைத்தும் கச்சிதமாக குறிப்பிட்ட நேரத்தோடு அந்தப் பயணம் இருக்கும்!
நமக்கெல்லாம் அந்த கொடுப்பனை இல்லை! பொதுவாக ஆசிய நாடுகளில் நேரக் கலாச்சாரம் என்பதெல்லாம் சும்மா வாயளவில் மட்டும் தான்! குறிப்பிட்ட நேரத்தில் துயில் எழுவது, சந்திக்க வேண்டியவர்களை குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பது, ஒரு நேர்காணலுக்குப் போவது அனைத்துமே நாம் நேரத்தைக் கடைப்பிடிப்பதில்லை! நமக்கு நமது வசதிகள் தான் முக்கியம்!
இப்படி ஒரு சூழலில் வளர்ந்த நமக்கு ஏற்பட்ட அடி தான் ஜப்பானில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் முதல் பரிசான தங்கத்தை இழந்தது. குண்டு எறிதல் போட்டியில் நமது வீரர் ஷியாட் சுல்கிஃபிலி மூன்று நிமிட தாமதத்தினால் தங்கத்தை இழந்தார். குறிப்பிட்ட நேரத்தில் போட்டி நடைபெறுகின்ற இடத்திற்கு வராததால் அவருக்குக் கிடைக்க வேண்டிய தங்கம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இரண்டு முறை உலக சாதனை ஏற்படுத்தியவர். அதனால் எல்லாம் எந்தப் பயனுமில்லை! நான்கு ஆண்டுகள் கடுமையான பயிற்சி செய்து புதிய சாதனை ஏற்படுத்தியும் யாரும் அதனை பொருட்படுத்தவில்லை! அது தான் நேரத்தின் வலிமை!
நேரம் போனால் போனது தான். உலகில் மிகப்பெரிய பணக்காரர்களால் வாங்க முடியாத ஒன்று என்றால் அது நேரம் தான்! விட்டுவிட்டால் திரும்பப் பெற முடியாதது நேரம்! நேரம் பொன் போன்றது என்பார்கள்! பொன் கிடைக்கும் ஆனால் நேரம் கிடைக்கவே கிடைக்காது!
நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் அது நமக்கு நல்ல நேரம்! அதனை சோம்பலாக்கி சாம்பலாக்கினால் அது நமக்குக் கெட்ட நேரம்!
மூன்று நிமிடத் தாமதம்! தங்கம் பறிபோனது!
No comments:
Post a Comment