Sunday 19 September 2021

சிறை மரணங்கள் குறைவதாக இல்லை!

 சிறை மரணங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியாதோ என்கிற எண்ணம் பொது மக்களுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர அதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என்றும் தோன்றவில்லை!  இது தான் இன்று நமது நாட்டின் நிலை!

சிறை மரணங்கள் என்றாலே பெரும்பாலும் அது இந்திய இளைஞராகவே இருக்கின்றனர். குடும்பத் தலைவர்கள் என்றாலும் அதுவும் இந்தியர்கள் தான். நமக்கே சலிப்பு ஏற்படுகின்ற அளவுக்கு அது இந்தியர்களின் மரணங்களாகத்தான் இருக்கின்றன.

அவர்களின் மரணங்களைப் பற்றியான செய்திகள் வெளியாகும் போதும் ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு விதமாகக்  கூறுவது நம்மைக் கிறுகிறுக்க வைக்கிறது!  குடும்பத்தினர் அவர்களை எந்த வியாதியும் இல்லாதவர்கள் என்று கூறுகின்றனர். குடும்பத்தினர் பொய் சொல்ல வாய்ப்பில்லை.  காவல்துறையோ ஒவ்வொருமுறையும் ஒரு வியாதியைக் கூறுகின்றனர்! இல்லாத வியாதியையெல்லாம் அவர்கள் கூறுகின்றனர்!

எப்போதாவது ஒரு மரணம் என்றால் நாம் அதனைப் பொருட்படுத்த மாட்டோம். அது பெரும்பாலும் உண்மை மரணமாகவே இருக்கும். 

ஆனால் நடப்பது என்ன? நல்ல முறையில்,  எந்த வியாதியும் இன்றி, கைது செய்யப்பட்ட ஒரு நபர் அடுத்த நாள் மரணமடைந்துவிட்டதாக செய்திகள் வரும்போது நமக்கும் அது திகைப்பாகத்தான் இருக்கிறது! குடும்பத்தினரும் கேள்விகள் எழுப்புகின்றனர். பொது மக்களும் கேள்விகள் எழுப்புகின்றனர். காவல்துறை மௌனம் சாதிக்கிறது! அல்லது ஏதோ மழுப்பலான பதில்கள் வருகின்றன!

வழக்கு, நீதிமன்றம் என்று வரும்போது  குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க பல ஆண்டுகள் ஆகின்றன. தலைவன் இல்லாத குடும்பங்கள் வருமானத்தை இழந்து மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பெரும்பாலும் நீதிமன்ற தீர்ப்புகள் வரும் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத்தான் சாதகமாக வருகின்றன. அப்படி என்றால் காவல்துறை தான்  குற்றவாளி! என்று பார்க்கப்படுகிறது!

சம்பந்தப்பட்ட குடும்பங்கள், நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும்வரை, பலவகைகளில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவுவது அரசாங்கத்தின் கடமை. அதுவும் ஏழைக் குடும்பங்களுக்கு உதவிகள் கிடைப்பது முக்கியம்.

சிறை மரணங்கள் குறைய வேண்டும். அதனையே நாம் விரும்புகிறோம்!

No comments:

Post a Comment