நாட்டிற்குள் கோவிட்-19 என்று காலெடுத்து வைத்ததோ அன்றிலிருந்து நமக்கு ஏற்பட்டது பெரும் சாபக்கேடு!
அந்த நேரத்தில் அரசியல் நெருக்கடிகளும் ஏற்பட்டு அதன் மூலம் நமக்கு பெரும் சோதனைகளும் வேதனைகளும் அதிகரித்தது தான் மிச்சம்.
மக்கள் வேலை இல்லாப் பிரச்சனைகளை அப்போது தான் உணர ஆரம்பித்தனர். கணவன் மனைவி வேலை செய்கின்ற குடும்பத்தில் ஒருவர் வேலை செய்தாலே எப்படியோ சமாளிப்பர். ஆனால் இருவருமே வேலை இழந்தால் .....? இங்கு தான் மக்களால் சுமைகளைத் தாங்க முடியவில்லை.
நாளைய தினத்தை எப்படி கழிக்கப் போகிறோம் என்கிற எண்ணம் வருகின்ற போதே மனம் தளர்ந்து போகின்றனர். தளர்ந்து மட்டும் போகவில்லை; பயந்தும் போகின்றனர்.
யார் என்ன செய்ய முடியும்? ஒரளவு வசதி உள்ளவர்கள் சமாளித்தார்கள் ஆனால் எல்லாராலும் அப்படி இயலவில்லை. ஏதோ உதவிகளைப் பெற்று சமாளித்து வருகிறார்கள். அவர்கள் மீண்டும் வேலைக்குப் போக வேண்டும். போனால் தான் தங்களது பழைய நிலைக்கு திரும்ப முடியும்.
வேலை இல்லாத சுமார் ஒன்றரை வருட காலக்கட்டத்தில் சுமார் 10,317 பேர் திவால் ஆகியிருப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் கூறியிருக்கிறார். ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எதிர்பார்த்தது தான். இன்னும் கூடும் என்பது தான் கள நிலவரம்.
அதே காலக்கட்டத்தில் 1,246 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதில் சிறு, குறு, நடுத்தர, பெரும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அதில் வேலை இழந்தவர்கள் பல்லாயிரக் கணக்கான பேர்.
அரசாங்கம் தங்களால் முடிந்த அளவு வேலை இழந்த மக்கள் மீண்டும் வேலைக்குப் போக அவர்களால் இயன்றதைச் செய்கின்றனர். ஆனால் நிரந்தரமாக மூடிவிட்டுப் போன நிறுவனங்களை யார் என்ன செய்ய முடியும்? பலர் புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். என்ன வேலை என்று தெரியாது. இப்படி பல பிரச்சனைகளை அனைவருமே எதிர்நோக்கின்றனர்.
ஆனால் இங்கு அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்கள் தான். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, நிறுவனங்கள் அவர்களுக்குக் குறைவான சம்பளம் கொடுக்க முயற்சிப்பார்கள். அப்படி ஒரு நிலை வரும்போது மலாய்க்காரர்களுக்காக அம்னோ குரல் கொடுக்கும். சீனர்களுக்கு அப்படி ஒரு நிலை வராது. இந்தியர்கள் கேட்பாரற்றவர்கள். ஏதோ சம்பளம் கிடைத்தால் போதும் என்கிற நிலைமையில் உள்ளவர்கள். அத்தோடு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போட்டிக்கு வருகின்றனர். என்ன செய்ய?
நியாயம் பேச இது நேரம் அல்ல. அவர்கள் வாழ வேண்டும். அது தான் முக்கியம்.
எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. "இதுவும் கடந்து போகும்!" என்று நம்பிக்கையோடு காத்திருப்போம்!
No comments:
Post a Comment