Wednesday 22 September 2021

பெண்கள் கல்வி மறுக்கப்படுமா?

 ஆப்கானிஸ்தானின் புதிய தாலிபன் அரசாங்கம் பெண்களின் கல்வியை மறுக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பெண் கல்வி பற்றி பேசுபவர்கள் 1990 களில் பெண்களுக்குத் தாலிபன்களால் ஏற்பட்ட துயரங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். மிகவும் கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டு பெண்கள் ஒடுக்கப்பட்டனர்.

ஆனால் அன்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளதாகவே நமக்குத் தோன்றுகிறது.

இன்று ஆப்கானிஸ்தானின் ஆட்சி முற்றிலும் தாலிபன்கள் கையில். அவர்கள் பயங்கரவாதிகள் என்பது போய் இன்று நாட்டை ஆளுகின்ற தரப்பினர் என்கிற நிலைக்கு வந்திருக்கின்றனர். நல்லதோ கெட்டதோ அவர்கள் தான் இனி நாட்டை ஆளப்போகின்றவர்கள்.

முன்பு போல பயங்கரவாதிகள் என்பது போய் அவர்கள் ஆப்கானிஸ்தானை ஆளுகின்றவர்கள் என்கின்ற நிலைமைக்கு வந்திருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் அவர்களுக்கென்று எதிரிகள் இருந்தார்கள். அதனால் அவர்களை எதிர்க்க துப்பாக்கி ஏந்த வேண்டிய  நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருந்தது.இப்போது அந்த நிலை இல்லை. அவர்கள் தான் ஆட்சியாளர்கள். அவர்கள் யாரையும் எதிர்க்க வேண்டிய சூழல் இல்லை.

பல ஆண்டுகளாகவே அவர்கள் ஒரு முரட்டுத்தனமான சூழலில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். இப்போது அது தேவை இல்லை என்றாலும் அவர்கள் வாழ்ந்த அந்த சூழலிலிருந்து அவர்களை மாற்றிக்கொள்ள கால அவகாசம் தேவை. அதனால் தான் அவர்கள் பேசுவதில் முன்னும் பின்னும் முரணான போக்கு நிலவுகிறது!

பெண்கள் கல்வி என்று வருகின்ற போது அவர்களது போக்கில் நிச்சயம் மாற்றம் வரும் என நம்பலாம். ஏன் கிறிஸ்துவ பள்ளிகளில் கூட ஆண், பெண் பள்ளிகள் இன்னும் கூட இயங்கத்தானே செய்கின்றன!  தாலிபன்களும் அப்படித்தான்! மாறுவர்!

முதலில் பெண்கள் கல்வி என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டாலே காலப் போக்கில் உயர்கல்வியிலும் மாற்றங்கள் வந்து தான் ஆக வேண்டும். பெண்கள் கல்வியைப் புறக்கணித்துவிட முடியாது. மற்ற நாடுகளுடன் தொடர்புகள் வேண்டும், வியாபாரம் செய்ய வேண்டும், போட்டி போட வேண்டும் என்கிற நிலைக்குத் தள்ளப்படும் போது பெண்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு என்பதை அவர்கள் உணர்வார்கள்! பெண்களை ஒதுக்கி விட முடியாது!

இத்தனை ஆண்டுகள் போராட்டம் என்றே வாழ்ந்தவர்கள். பெண்கள் அவர்களுக்குத் தேவைப்படவில்லை. ஆனால் அவர்களே அரசாங்கத்தை இப்போது  நடத்துகின்றனர். அங்குப் பெண்கள் தேவை. கல்வி கற்றவர் தேவை. அரசாங்கத்தை நடத்துவதற்கும் பெண்கள் தேவை.

அதனால் பெண்கள் கல்வி மறுக்கப்படுமா என்று கேட்டால்: இல்லை! மறுக்கப்படாது! என்பது தான் பதில். இப்போதைக்கு அவர்கள் பேச்சில் முன்னுக்குப்பின் முரணாக பேசுவது தவிர்க்க முடியாதது! அனைத்தும் சீக்கிரம் மாறும்! மாற வேண்டும்!

No comments:

Post a Comment