Saturday 18 September 2021

செய்தி புதுசா இருக்கு!

 இராணுவப் படையில் சேருவதற்கு இன ரீதியிலான ஒதுக்கீடு எதுவும் இல்லை என்பதாக இராணுவத் தளபதி கூறியிருப்பது நமக்குப் புதிய செய்தியாகவே இருக்கிறது!


இப்படி ஒரு தகவலைக் கொடுத்ததற்காகவே நாம் அவரைப் பாராட்ட வேண்டும்! வாழ்த்துகிறோம்!

எல்லாக் காலத்திலுமே நாம் இராணுவம் என்பது மலாய்க்காரருக்கு மட்டுமே என்பது தான் நமக்குத் தெரிந்தது. ஒரு காலக் கட்டத்தில் ம.இ.க. கூட சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தி இந்திய இளைஞர்கள் இராணுவத்தில்  சேர வாய்ப்புக் கேட்டதெல்லாம் நமக்குத் தெரிந்தது தான்!

அப்போதுள்ள சட்டமும் இப்போது இராணுவத் தலைவர் சொல்லுகின்ற சட்டமும் எல்லாம் ஒன்று தான்.  எல்லாக் காலத்திலும் ஒரே சட்டம்  தான். எந்த மாற்றமும் இல்லை.   ஆனால் எழுதாத சட்டம் ஒன்று அப்போது கடைப்பிடிக்கப்பட்டது. அது மலாய்க்காரர் மட்டுமே என்கிற சட்டம் தான்! ஏதோ பெயருக்கு மற்ற இனத்தவர்களுக்கு ஒன்று இரண்டு என்று எண்ணி  கொடுக்கப்பட்டது!

ஆக நமக்குத் தெரிய வருவதெல்லாம் சட்டம் ஒன்று தான். ஆனால் இராணுவத் தலைவர் அன்றன்றைய சூழலுக்கு ஏற்ப என்ன சொல்லுகிறாரோ அது தான் நடந்தது! இப்போதும் அது தான் நடக்கிறது!

மற்றபடி நிர்ணயிக்கப்பட்ட  விதிமுறைகள் அடிப்படையில் என்று பார்த்தால் அது மலாய்க்கார இளைஞர்களுக்கு மட்டுமே  சாதகமாக அமைகிறது! மற்ற இன இளைஞர்களுக்கு விதிமுறைகள் சாதகமாக அமையவில்லை!

ஆனாலும் இப்போது இராணுவத்தில் சேருகின்ற மலாய்க்காரர் அல்லாத இளைஞர்களின் விழுக்காடு கூடி வருவதாகவே நாம் நம்புகிறோம். கடந்த 2017 -  2020 வரையிலான தரவுகளின் படி 20 - 25  விழுக்காடு இளைஞர்கள் இராணுவ சேவையில் இணைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி இராணுவ சேவையில் உள்ள மலாய்க்காரர் அல்லாதவர் எண்ணிக்கை 14.49 விழுக்காடு என்று தரவுகள் அடிப்படையில் இராணுவத் தலைவர் கூறியிருக்கிறார்.

வருங்காலங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என நம்புகிறோம். வாழ்த்துகள்!

No comments:

Post a Comment