Friday 3 September 2021

கட்சித் தாவலை தடைசெய்க!

 கட்சித் தாவல் என்பது ஒரு நாட்டைத் பீடித்த பெரும் தொற்று நோய் என்று தான் சொல்ல வேண்டும்!

கட்சிக்கு விசுவாசம், கொள்கைக்கு விசுவாசம், நாட்டுக்கு விசுவாசம்  இனத்துக்கு விசுவாசம், சமயத்திற்கு விசுவாசம் என்று முத்திரைக் குத்தப்பட்டவனெல்லாம்  பணம், பட்டம், பதவி என்றவுடன் அப்படியே அம்மணமாக எதிர் முகாமுக்கு ஓடியதை கடந்து வருடத்திலிருந்து நாம் பார்த்துக்  கொண்டிருக்கிறோம்! அவனுக்குத் தெரிந்ததெல்லாம் பணம் பத்தும் செய்யும் என்பது மட்டும் தான்!

இந்த கட்சித் தாவலினால் என்ன நடந்தது என்று நாம் பார்த்துக் கொண்டும், அனுபவித்துக் கொண்டும் இப்போது இருக்கிறோம்!

இந்த நிலையில் தனி ஆளாக நின்று கொண்டு, கட்சித் தாவலை தடை செய்ய,  முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர், அசாலினா ஒத்மான் சைட், இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறார். இதன் தொடர்பில்  வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தனிநபர் மசோதா ஒன்றை சமர்ப்பிக்கவிருக்கிறார்.

அப்படித் தப்பித் தவறி இந்த மசோதா வெற்றி பெற்றால் என்ன ஆகும்? அது அனைத்துக்  கட்சித் தாவலையும் நிறுத்திவிடும்! அத்தணை வலிமை வாய்ந்த சட்டமா அது? ஆமாம்! ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினரோ கட்சி தாவினால் அத்தோடு அவர் பதவிகாலம் முடிவுக்கு வந்து  விடும்.  அந்த தொகுதியில் மீண்டும் மறுதேர்தல் நடத்தப்படும்!

ஆகா! இது போதாதா! நமது மாண்புமிகுகளுக்கு!  வயிற்றுப் போக்கு ஆக எத்தனை நிமிடம் பிடிக்கும் என்கிறீர்கள்!

அதனால் தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று எல்லாத் தரப்பினரும் விரும்புகிறார்கள். நாமும் விரும்புகிறோம். இதனால் என்ன பயன்? ஓரு நிரந்தர அரசாங்கம் அமையும் என்பது போதாதா!

ஆனால் அரசியல்வாதிகள் விரும்ப வழியில்லை! பெரும்பால அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள்! உண்மை, நேர்மையுள்ள அரசியல்வாதிகள் மட்டுமே இது போன்ற சட்டங்கள் தேவை என்று விரும்புவார்கள். அவர்களைத் தேடி எங்கே போவது?

அசாலினா ஓத்மான் சைட் நல்ல பண்புள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அதற்கு நாம் பெங்கெராங்  நாடாளுமன்ற தொகுதி மக்களைத்தான் கேட்க வேண்டும். அவரை நாம் நம்புகிறோம்.

மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அசாலினாவின் இந்த முயற்சிக்கு எந்த அளவுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்? ஒரு வேளை இப்போதுள்ள எதிர்கட்சிகளின் ஆதரவு கிடைக்கலாம். பி.கே.ஆர்., ஜ.செ.க. போன்ற கட்சிகள் ஆதரிக்கலாம்!

பொறுத்திருந்து பார்ப்போம்! கட்சித் தாவலா அல்லது தாவலுக்குத் தடையா!

No comments:

Post a Comment