Sunday 26 September 2021

வேலியே பயிரை மேய்கிறது!

 வேலியே பயிரை மேய்கிறது என்பது தான் இந்த அநியாயத்திற்குப் பொருத்தமாக இருக்கும்.

எம்.ஏ.சி.சி. யின் நோக்கம் என்ன? ஊழலை தடுப்பது தான் அவர்களின் வேலை. ஆனால் வருகின்ற செய்திகள் அப்படி ஒன்றும் அவர்களைப் பாராட்டும்படியாக இல்லை. பச்சைத் துரோகிகள் என்றே சொல்ல வேண்டியுள்ளது!


சமீபகாலமாக மூன்று  எம்.ஏ.சி.சி.  அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஊழல்வாதிகளிடமிருந்து பறிக்கப்பட்ட  பணம். பறிக்கப்பட்ட பணம் எம்.ஏ.சி.சி. அதிகாரிகளின் கைகளுக்கு மாறி  பின்னர் அவர்களின் பணமாகவே மாறிவிட்டது!

இவர்களில் மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்! அவர் மேல் இன்னும் ஒரு சில வழக்குகளும் சேர்ந்து கொண்டன! அதைத்தான் சொல்லுவார்கள்; ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறு செய்வது! மறைக்க, மறைக்க, மறைக்க, மேலும், மேலும், மேலும் தவறுகள்!

பணம் கையாடல் என்பதே குற்றம்! கையாடிய பணத்திற்குப் பதிலாக கள்ள நோட்டுக்களை வைத்து மறைத்தது இன்னொரு குற்றம்!  செய்த தவற்றை மறக்க  கஞ்சா அடித்தது குற்றம்!  அதனை மறைக்க கையில் துப்பாக்கியும் தோட்டாக்களையும் வைத்திருந்த குற்றம்!

நல்ல வேளை அவர் இன்னும் தற்கொலைக்குத் தயாராகவில்லை! அல்லது வேறு காரணங்களுக்காக துப்பாக்கி வைத்திருந்தாரா என்பதும் தெரியவில்லை!

நமக்கு இவர்கள் மேல் அனுதாபமே ஏற்படுகிறது. அவருடைய பதவி என்பது மிகப்பெரிய பதவி. அதன் பெயரைக் காப்பாற்ற வேண்டும். அவரை அந்தப் பதவியில் நியமித்த அரசாங்கத்திற்கு விசுவாசமான அதிகாரியாக இருக்க வேண்டும். பொது மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக  இருக்க வேண்டும். 

இது போன்ற பதவிகளுக்கு இவர்கள் வருமுன்னர் இவர்களின் பின்னணி ஆராயப்பட்டு அதன் பின்னர் தான் இவர்கள் பதவிகளில் நியமிக்கப்பாடுகிறார்கள். இது சாதாரண வி‌‌‌‌ஷயம் அல்ல. அரசாங்கம் மிகவும் கவனமாகத் தான் இவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.

ஆனாலும் அரசாங்கம் இவர்கள்   மேல் உள்ள நம்பிக்கையை இவர்கள் தகர்த்துவிடுகிறார்கள்! துரோகிகளாக மாறி விடுகிறார்கள்! என்ன தான் பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களின் குடும்பமும் இவர்களின் அவமானங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது!

என்ன தான் இரும்பு கம்பிகளைக் கொண்டு வேலி அமைத்தாலும் அப்போதும் பயிர்களுக்குப் பாதுகாப்பில்லை!

No comments:

Post a Comment