கல்வி என்று வரும் போது இந்திய மாணவர்களே அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு!
ஆய்வு செய்தவர்களுக்கு அது புதிய செய்தியாக இருக்கலாம். ஆனால் இந்திய பெற்றோர்கள் இந்தப் பாகுபாட்டை பல ஆண்டுகளாகவே அறிந்திருக்கின்றனர். இது பற்றி பேசியும் இருக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்களிடம் இந்தப் பிரச்சனையை கொண்டும் சென்றிருக்கின்றனர். ஆனால் அவர்கள் செவிடராகவே இருப்போம் என்று அடம் பிடிப்பதால் இந்தக் குறைபாடுகளை எடுத்துச் சொன்னாலும் எடுபடவில்லை!இந்திய மாணவர்களைப் பற்றியான ஓர் அபிப்பிராயம் ஆசிரியர்களிடம் உண்டு. அவர்கள் திறமையான மாணவர்கள். இது ஒன்றே போதும் ஆசிரியர்கள் அவர்களுக்கு எதிராக செயல்படுவதற்கு! காரணங்கள் ஏதுமில்லை! அவர்கள் எப்படித் திறமையான மாணவர்களாக இருக்கிறார்கள் என்பது ஆசிரியர்களுக்குப் புரியாத புதிர்! ஏழ்மை நிலையில் அவர்கள் இருந்தாலும் திறமை எங்கிருந்தோ அவர்களுக்கு வந்து விடுகிறது! அதனை ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
அதனாலேயே இந்திய மாணவர்கள் பலவாறான துன்பத்திற்கும், இடைஞ்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள்! பள்ளிகளில் ஆசிரியர்களால் அவர்கள் சிறுமைப்படுத்தப்படுகிறார்கள். தாழ்ந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். குடிகார இனம், குண்டர் கும்பல் என்று பலவாறாக ஆசிரியர்களால் சித்தரிக்கப்படுகிறார்கள். அதனையே அவர்கள் மலாய் மாணவர்களுக்கும் எடுத்துச் செல்கிறார்கள். ஆக அந்த மாணவர்களும் இந்திய மாணவர்களை இகழ்ந்து பேசவும், இளக்காரமாக பார்ப்பதும் பேசுவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது. சமயங்களில் அடிதடியிலும் போய் முடிகிறது!
இந்திய மாணவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள் சீன மாணவர்களுக்கு ஏற்படுவதில்லை. ஒரே காரணம் தான். இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். அந்த ஒரு காரணமே போதும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு!
ஆனால் இவைகள் எல்லாமே தற்காலிகம் தான்! நாம் வீழ்ந்து விடுவோம் என்று யாரும் நினைத்தால் அது தான் தவறு! நாம் வீழும் சமுதாயம் அல்ல. எந்த நிலையிலும் வாழ்ந்து காட்டும் சமுதாயம்!
பாதிப்பு என்றாலும் நாம் சாதனை படைக்கும் சமுதாயம்! சாதனை புரிவோம்!
No comments:
Post a Comment