நம் நாட்டில் தற்கொலை சம்பவங்கள் மிகவும் அச்சதை ஏற்படுத்துகின்றன!
கோவிட்-19 தொற்றுக்குப் பின்னர் சொல்ல முடியாத அளவுக்குத் தற்கொலைகள் தொடர்ந்தாற் போல - கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு - தொடர்வதைப் பார்க்கும் போது நிச்சயமாக நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
ஒருவரைப் பார்த்து ஒருவர் பின்பற்றுகின்ற நிலை. என்ன செய்ய முடியும்? உயிர் வாழ மனிதனுக்கு ஏதோ ஒரு வேலை தேவை. அதனை வைத்துத் தான் அவன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். கணவருக்கு வேலை இல்லை என்றாலும் மனவி குடும்பத்தைக் காப்பாற்றலாம். ஏதோ பாதி வயிறாவது நிறையும். இருவருக்குமே வாழ வழி இல்லையென்றால் யார் அதற்குப் பொறுப்பு? அரசாங்கம் தான் பொறுப்பினை ஏற்க வேண்டும். வேறு வழியில்லை! இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கிற அவச்சொல் அரசாங்கத்திற்கு ஏற்படக் கூடாது.
2019-ம் ஆண்டு நமது நாட்டில் 699 தற்கொலைகள் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதுவே 2020-ல் 631 தற்கொலைகள். ஆனால் இந்த ஆண்டு 2021-ல் ஏழு மாதங்களில் சுமார் 638 சம்பவங்கள் பயப்படத்தக்க அளவுக்குப் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதாவது ஒரு நாளைக்கு மூன்று தற்கொலைகள். இதுவே நமது அச்சத்திற்குக் காரணம்.
இந்த தற்கொலைகளுக்குப் பல காரணங்கள். உடல் நோய், தொழிலில் தோல்வி என்று காரணங்கள் பல சொன்னாலும் மிகப்பெரிய காரணம் என்று சொன்னால் அது கோவிட்-19 தொற்று தான். தொற்றில் இறப்பவர்களை விட தொற்றினால் ஏற்பட்ட வேலையின்மை அதனால் ஏற்படுகின்ற குடும்ப வறுமை - இப்படி எல்லாமே கோவிட்-19 தொடர்புடையது தான்.
இப்படித் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே போகும் போது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன, தற்கொலைகளைக் குறைக்க அரசாங்கத்திடம் என்ன திட்டங்கள் உள்ளன - இது போன்ற விஷயங்களுக்குத் தான் அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஆனால் நடப்பதோ அரசியல் சண்டைகள் மட்டும் தான் நமக்குத் தெரிகிறது! ஆனால் புதிதாக வந்திருக்கும் சுகாதார அமைச்சரிடம் ஏதேனும் திட்டங்கள் இருக்கலாம்.
நாம் சொல்ல வருவதெல்லாம் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். எப்பாடுப் பட்டாவது தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும். அவர்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து அவர்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
தற்கொலைச் சம்பவங்கள் இப்படியே அதிகரித்துக் கொண்டே போனால் மலேசியர் அனைவருமே நோயாளி சமூகமாக மாறிவிடுவர்! இன்றைய நிலையில் அச்சம் தான் மக்கள் மனதில் முதன்மையாக நிற்கிறது!
No comments:
Post a Comment