Wednesday 8 September 2021

பெரியாருக்கு சிலை

 தமிழ் நாடு, திருச்சியில் பெரியாருக்குச் சிலை வைக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

திராவிடக் கழகத்தினருக்கு அது நல்ல செய்தி தான் என்பதில் ஐயமில்லை.

திருச்சி மாவட்டம்,  மணச்சநல்லூர் வட்டம், சிறுகனூரில் இந்த சிலையை அமைக்க "பெரியார் சுயமரியாதைப் பிரசார அறக்கட்டளை" திட்டமிட்டிருக்கிறது என்பதாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி பூங்குன்றன் அறிவித்திருக்கிறார்.    

 தமிழ் நாடு அரசாங்கம் அதற்கான அனுமதி  அளித்திருக்கிறதே தவிர அதற்கான செலவுகளை "பெரியார் சுமரியாதைப் பிரசார அறக்கட்டளை"  ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதே போல ஒன்றிய அரசும் இந்தத் திட்டத்திற்கான அனுமதியை அளித்திருக்கிறது.

சிறுகனூரில் "பெரியார் உலகம்" என்கிற மிகப்பெரிய வளாகம் ஒன்று 27 ஏக்கர் நிலத்தில் அமையவிருக்கிறது. இந்த வளாகத்தில் தான் பெரியாரின்  95 அடி உயர சிலை கட்டப்படவிருக்கின்றது. அத்தோடு அந்த வளாகத்தில் நூலகம்,  கோளரங்கம், ஒலி-ஒளி காட்சி,  குழந்தைகள் பூங்கா, உணவகம், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை அமையவிருக்கின்றன. இதன் ஒட்டு மொத்த செலவு 100 கோடி ரூபாய் என்பதாக மதிப்பிடப்படுகிறது.

இந்த நேரத்தில் நாம் சொல்ல வருவதெல்லாம் இந்த வளாகத்திற்கு 100 கோடி ரூபாய் செலவு என்று மதிப்பிடுகிறீர்கள். பெரியார் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.  அந்த வளாகத்தின் உள்ளே ஒரு கல்லூரி ஒன்றையும் கட்டலாம். பல ஏழை மாணவர்களுக்குக் கல்விக் கண்ணைத் திறக்கலாம். பெரியார் அதில் தான் மகிழ்ச்சி கொள்வார்.

இப்போது நீங்கள் செய்வதெல்லாம் வெறும் தொழிற்கான முதலீடு. மிகப் பெரிய செலவில் தொழிலில் முதலீடு செய்கிறீர்கள். அதே நேரத்தில் கொஞ்சம்  மாணவச் செல்வங்களையும் கவனியுங்களேன் என்பது மட்டும் தான் நாம் சொல்லுகிறோம்.

பெரியார் பெயரில் பெரியதொரு வர்த்தக தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறீர்கள். வாழ்த்துகள்!  இதன் மூலம் வர்த்தகத் துறையில் திராவிடர்களின் ஆதிக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறீர்கள். இதில் தமிழர்களின் பங்கு சுழியம் என நம்ப இடமிருக்கிறது! 

பெரியாருக்குச் சிலை வைப்பதன் மூலம் தமிழர்களுக்கும்  நல்லது நடக்கும் என நம்புவோம்!

No comments:

Post a Comment