Saturday 25 September 2021

எங்களால் யாரையும் சமாளிக்க முடியும்!

 பெர்சாத்துவின் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் மிகவும் நம்பிக்கையோடு அடுத்த போதுத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறார் என்பது  அவர் விடும் செய்திகளின் மூலம் நம்மால் அறிய முடிகிறது!

"யாரையும் தேர்தலில் சந்திக்கத் தயார்!" என்று அவர் மிகவும் தன்னம்பிக்கையோடு பேசி வருகிறார்!

நல்லது! அவரது தன்னம்பிக்கையை நாம் பாராட்டுகிறோம்! அவரும் நாட்டின்  பிரதமராக இருந்தவர். முன்னாள் பிரதமர்களான டாக்டர் மகாதிர், நஜிப் அப்துல் ரசாக் போன்றவர்கள் மிகவும் நம்பிக்கையோடு பேசும் அவர்களை விட நான் எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை என்று அவர் நினைப்பது பாராட்டுக்குரியது!

ஆனால் தேர்தல் முடிவுகள் என்பது தலைவர்கள் கையிலோ, பிரதமர்களின் கையிலோ இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். மக்களின் குரலே மகேசன் குரல் என்பது தான் இறுதி முடிவு!

முகைதீன் யாசினுக்கு மிகவும் நம்பிக்கைத் தரும் கூட்டணி என்பது பாஸ் கட்சியினர் தான். பாஸ் கட்சியினருக்கும் வேறு வழி இல்லை பெர்சாத்துவைத் தவிர!  பாஸ் கட்சியினரை அம்னோ ஏற்றுக்கொள்ளாது! காரணம் கடந்த காலங்களில் பாஸ் கட்சியினர் அம்னோவின் முதுகில் குத்தியவர்கள்!  அவர்களுக்கு பெர்சாத்துவை முதுகில்  குத்துவதில் எவ்வளவு நேரம் பிடிக்கும்?  அது அவர்களுக்கு இப்போது தெரியாது. பின்னர் அவர்களே தெரிந்து கொள்வார்கள்!

இவ்வளவு துணிவோடு பேசும் முகைதீன் அவர்களைப் பற்றி இந்நாட்டு மக்களின் கருத்து என்னவாக இருக்கும்? மக்கள் என்ன தான் அவரைப் பற்றி நினைக்கிறார்கள்? அவரது ஆட்சி காலத்தில் என்ன நடந்தது என்பதை அவர் சிந்தித்துப் பார்த்திருப்பாரா?

கடந்த காலங்களில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போயிருக்கிறார்கள்.  அப்போது  இல்லாத பல பிரச்சனைகள் பிரதமர் முகைதீன் காலத்தில் வந்து மக்களைப் பயமுறுத்தியிருக்கிறது! மற்றவர்கள் காலத்தில் அரசாங்கம் முறையாக நடந்தது. தவறுகள் நடந்திருக்கலாம். ஆனாலும் திருத்திக் கொண்டார்கள். ஆனால் முகைதீன் காலத்தில் அவர் பிரச்சனைகளை எதனையும் தீர்த்து வைக்கவில்லை. அவர் செய்த மாபெரும் தவறு கோவிட்-19 தொற்றை அதிகப்படுத்தினார் அல்லது நாடெங்கும் கொண்டு சென்று பரப்பினார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு! இன்றளவும் அந்தக் குற்றச்சாட்டு அவர் மீது தான் சுமத்தப்படுகின்றது!

அவர் அந்தத் தொற்றை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர எந்த முயற்சியும் செய்யவில்லை. அதற்குக் காரணம் அந்தத் தொற்றை வைத்தே அரசியல் ஆட்டம் ஆடினார்! உண்மையில் அவர் பதினேழு மாதங்கள் பிரதமராக இருந்ததற்கு கோவிட்-19 தொற்று தான் காரணம்!  அதனாலேயே அவர் கோவிட்-19 தொற்றை தீர்ப்பதற்கான வழிவகைகளைக் காண முயற்சி எடுக்கவில்லை!

எப்படியோ,  எந்தக் கட்சியையோ அல்லது தலைவர்களையோ அவர் எதிர்க்கத் தயார்!  ஆனால் மக்கள்? அவரை எதிர்க்கத் தயார்!                                                                                                                                                                                                                                              

No comments:

Post a Comment