Tuesday 28 September 2021

குறைந்த விலை வீடுகள்

மலேசிய 12-வது  திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கென வீடுகள் கட்டும் திட்டம் நிச்சயமாக அனைவரின் வரவேற்பைப் பெறும் என நம்பலாம்.

பொதுவாக இன்றைய நிலையில் ஏழ்மையில் உள்ளவர்கள், நடுத்தர குடும்பத்தினர் வீடுகள் வாங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. நடுத்தர  குடும்பத்தினர் என்றால் கணவன் மனவி இருவரும் வேலை செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களால் சமாளிக்க முடியும். ஒருவர் வேலை இழந்தால் மாதத் தவணை கட்டுவதற்குத் தலை சுற்றும்!

ஆனால் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் சொந்த வீடு என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது என்பது தான் இன்றைய சூழல். ஒரு காலக் கட்டத்தில் ஏழைகளுக்கென்றே அரசாங்கம் மலிவு வீடுகளைக்  கட்டிக் கொடுத்தது. பலர் பயன் அடைந்தனர். பிறகு அது போன்ற திட்டங்கள் முழுமையாக கைவிடப்பட்டன. காரணம் தெரியவில்லை. ஒரு வேளை நாட்டில் ஏழைகள் இல்லை என்று ஆளும் வர்க்கம் நினைத்ததோ என்னவோ, யார் கண்டார்?

ஆனால் இப்போது 12-வது மலேசிய திட்டத்தில் கீழ் அந்தத் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கின்றனர்.  பாராட்டலாம்!

குறிப்பாக B40, M40 மக்கள் பயன்பெறும்படியாக  இந்தத் திட்டம் அமையும் என நம்பலாம். பி40 மக்களுக்கு நிச்சயம் இது போன்ற திட்டங்கள் தேவை. ஏழைகள் என்பதற்காக அவர்களை ஒதுக்கி வைக்க முடியாது. வேலை செய்து பிழைப்பவர்களில் அவர்களே நாட்டில் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றனர். அவர்கள் எல்லாக் காலங்களிலும்  வாடகை வீடுகளில் குடியிருக்க முடியாது.

எப்படியோ அரசாங்கம் ஏழ்மை நிலையிலுள்ள மக்களுக்காக ஐந்து இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டிருக்கிறது. நடப்பு அரசாங்கம் எத்தனை நாளைக்கு ஆட்சியில் இருக்கும் என்பதை  நம்மால் கணிக்க முடியாது. ஆனாலும் தங்களால் ஆன திட்டங்களைத் தீட்டியிருக்கிறார்கள். இவர்களால் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியவில்லை என்றாலும் அடுத்து அமையும் அரசாங்கம் இதனை நிறைவேற்றலாம். அது சாத்தியமே.

குறைந்த விலை வீடுகளுக்கு எல்லாக் காலங்களிலும் சந்தையில் மதிப்பு உண்டு. ஆனால் அந்த வீடுகள் பணக்காரர்கள் கையில் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!


No comments:

Post a Comment