Monday 20 September 2021

மலேசிய தினம் ஏன்?

 நமது சுதந்திர தினம் எப்போது என அனைவரும் தெரிந்து வைத்திருக்கிறோம். 31 ஆகஸ்டு என்றால் அது தான் நமது சுதந்திர தினம். அது உறுதி. எந்த தவறும் ஏற்பட வாய்ப்பில்லை! காரணம் அன்று நமக்கு விடுமுறை மட்டும் அல்ல! அந்தத் தினத்திற்கான முக்கியத்துவம் தொடர்ந்து கொடுக்கப்படுகிறது. சுதந்திர தின ஊர்வலங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் என்று தொடர்ந்து முக்கியத்துவம் கொடுப்பதால் சுதந்திரத் தினத்தை மறக்கக் கூடிய வாய்ப்பில்லை!

 மலேசிய தினம் 16 செப்டம்பர்  அன்று கொண்டாடப்படுகிறது. சபா, சரவாக் மாநிலங்கள்  மலேசியாவுடன் இணைந்த தினம் மலேசிய தினம்.     மேற்கு மலேசியாவில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படாத ஒரு தினம் தான் மலேசிய தினம்!  அதாவது சபா, சரவாக் மாநிலங்களில் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் இங்குக் கொடுக்கப்படுவதில்லை! இங்கு ஏதோ ஒரு நாளைப் போல அன்று விடுமுறை! அவ்வளவு தான்!

இப்போது ஒரு சிலரிடையே மலேசிய தினத்திற்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்கிற முணுமுணுப்பு கேட்கத் தொடங்கியிருக்கிறது. அதில் உண்மையில்லாமல் இல்லை! போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது உண்மை தான்!

பொதுவாக சபா, சரவாக் மாநிலங்களில் கொண்டாப்படுகின்ற எந்தவொரு கொண்டாட்டமாக இருந்தாலும் அது ஏதோ வேறு ஒரு நாட்டில் நடைபெறுகின்ற ஒரு கொண்டாட்டமாகவே நமக்குத் தோன்றுகிறது! அது ஏனோ அந்த மாநிலங்களோடு மேற்கு மலேசியாவில் இருக்கும் நம்மால் ஒட்ட முடிவதில்லை! அவைகளை அந்நிய நாடுகளாக பார்க்கின்ற பார்வை தான் இன்னும் நமக்கு இருக்கின்றது!

ஒரு வேளை  தூர இடைவெளிகளைக் கொண்ட மாநிலங்களாக அவைகள்  இருப்பதால் நமக்கு அப்படித் தோன்றலாம். பொது மக்களிடையே குறைவான போக்குவரத்துகள் இருப்பதாலும் அப்படி இருக்கலாம். அரசியல்வாதிகளிடையே உள்ளதைப் போன்ற தொடர்புகள் பொது மக்களிடையே இல்லை!

எல்லாவற்றையும் விட அரசாங்கம், அவைகளும் நமது மாநிலங்கள் தான், என்கிற ஓர் உறவை ஆழமாகப் பதிய வைக்கவில்லை என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது! அதற்கான முயற்சிகளை அரசாங்கம் எப்போதும் செய்து கொண்டு தான் இருக்கின்றது. இன்னும் செய்து கொண்டு தான் இருக்கும்.

வருங்காலங்களில் மலேசிய தினம் இன்னும் அதிக சிறப்பாக மலேசிய முழுவதிலும் கொண்டாடப்படும் என நம்புவோம்!

No comments:

Post a Comment