Friday 17 September 2021

இதனை நாம் வரவேற்க முடியாது!

 மத்திய அரசாங்கமோ மாநில அரசாங்கமோ யார் செய்தாலும் தவறு தவறு தான்.

மலாக்கா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தில்லுமுல்லுகளைத் தான் சொல்லுகிறேன். 

இந்து மக்களுக்கு ஈமச்சடங்கு செய்ய இடமில்லை. இது ஒரு 61 ஆண்டு காலப்பிரச்சனை.  இதற்கு முன்னர் இருந்த  பக்காத்தான் அரசாங்கம் ஈமச்சடங்குச் செய்வதற்கான  - அதற்கான இடத்தை - சுமார் `0.74 ஹெக்டர் நிலத்தை - மஸ்ஜித் தானா அருகே ஒதுக்கியிருந்தது. ஒதுக்கப்பட்ட நிலம்  மலாக்கா பட்டணத்திலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரம்.

ஏற்கனவே அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிலத்தை, பின் வாசல் வழியாக வந்த ஓர் அரசாங்கம், இப்படி அலட்சியமாக அதனை ஒதுக்கிவிட முடியாது. முன்னாள் அரசாங்கமும் அலசி ஆராய்ந்து தான் அந்த 0.74 நிலத்தை மலாக்கா இந்து மக்களின் நலனுக்காக ஒதுக்கியிருக்கிறது என்பதை இன்றைய அரசாங்கம் மறந்துவிடக் கூடாது.

ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகப் புரிகிறது. இன்றைய மாநில அரசாங்கம் இந்தியர்களின் நலனில் கொஞ்சம் கூட அக்கறையற்ற ஓர்  அரசாங்கம் என்பது தெளிவாகிறது.

நம்மைக் கேட்டால் ம.இ.கா.வைத் தான் குறை சொல்லுவோம். ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டதுமே ஈமச்சடங்குளுக்கான வேலைகளை அப்போதே செய்ய ஆரம்பித்திருக்க வேண்டும். என்ன நடந்தது என்று நமக்குத் தெரியவில்லை. ம.இ.கா. செய்ய முடியாததை இவர்கள் செய்வதாவது என்று நினைக்க வாய்ப்புண்டு. "நாம் என்ன ரோஷம் கெட்டவர்களா?" என்று கூட அவர்கள் நினைத்திருக்கலாம். இவர்கள்  ரோஷம் கெட்டவர்கள் என்று எப்போதோ நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம்! ஆனால் மக்கள் நலனே முக்கியம் என்று அவர்கள் நினைத்திருந்தால் இப்படி ஒரு இனப் புறக்கணிப்பு  ஏற்பட வாய்ப்பில்லை! 

நம்மிடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பொது நலன் கருதி சில சமயங்களில் சில பிரச்சனைகளுக்கு  நாம் ஒன்றுபட வேண்டும்.  உலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் ம.இ.கா. வினருக்கு மட்டும் தெரியவில்லை என்றால் இந்துக்களை அவர்கள் முட்டாள்கள் என்று நினைக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

இருக்கட்டும் எங்கே போகப் போகிறார்கள்? முச்சந்திக்கு வந்து தானே ஆக வேண்டும்!

துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது! பின் வாசலுக்கென்றே பிறந்த இழி பிறவிகள் இவர்கள்!

No comments:

Post a Comment