Wednesday 29 September 2021

வாழை இலைக்கு இத்தனை மவுசா!


 வாழை இலை பற்றிப் பேசும் போது நமக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாகவோ பொருளாதார ரீதியில் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாகவோ நமது கண்ணுக்குத் தெரிந்ததில்லை!

ஒரு நண்பர் சொல்லுவார்: குப்பை என்று எதனையும் தள்ள வேண்டாம்! அத்தனையும் காசு! என்பார். இப்போது நம் கண்முன்னே பார்க்கிறோம்."சுராட் காபார் லாமா!" என்று லோரிகளில் வந்து எல்லாப் பழைய சாமான்களையும் வாங்கிப் போகின்றனர். உரிமையாளன் சீனர் லோரி ஓட்டுபவன் நம்ம ஆள்!

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் ஒருவர் சொன்னார்: வாழை இலை இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவிற்கு இறக்குமதி ஆகிறது என்று சொன்னார்! 

நான் அதனை நம்பவில்லை. மலேசியாவில் வாழை இலையைப் பயன்படுத்துவதே இந்திய உணவகங்கள் மட்டும் தான். அப்படி ஒன்றும் பெரிய அளவுக்கு நமது நாட்டில் சந்தை இல்லை என்பது தான் எனது கணிப்பு. அதனால் நான் நம்பவில்லை! உண்மை நிலவரம் இன்றும்  தெரியவில்லை.  

 சமீபத்தில் இணையதளத்தில் வலம் வந்த போது மனதைக் கவர்ந்த செய்தி. தமிழ் நாடு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்மணி. பெயர் ராஜேஸ்வரி. சுமார் 10 வருடங்களாக வாழை இலை வியாபாரத்தில் வெற்றிநடை போட்டு வருகின்றார்.

வழக்கம் போல பல இடறல்களிக்கையிடையே எதனையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தொழிலிலே கவனம் செலுத்தி இன்று இந்த வாழை இலைத் தொழிலில் உயர்ந்து நிற்கிறார். வாழ்த்துகள் அம்மணி!

தொழிலை சிறிய அளவில் தொடங்கினார். ஆரம்பகாலத்தில் விசேஷங்களுக்காக வாழை இலை விற்பனை செய்தார்.  சொந்த போக்குவரத்து இல்லை. பேருந்தில் பயணம் செய்து சேர்க்க வேண்டிய இடத்தில் கொண்டு போய் சேர்ப்பார். சில ஆண்டுகள் இப்படியே தொடர்ந்தது.

பின்னர் தொழிலை விரிவுபடுத்தினார். வெளி மாநிலங்களில், பெரும் நகரங்களில் என்று தொழிலை கொண்டு சென்றார்.  இப்போது அவரிடம் சிறிய லோரி ஒன்று இருக்கிறது. போக்குவரத்துக்குத் தடையில்லை.

இப்போது அவரால் 365 நாளுக்கும் வாழை இலை தயார் செய்து விட முடியும்.  தேவையான இலைகள் எப்போதும் தயார். ஒவ்வொரு நாளும் சுமார் 200 வாழை இலை கட்டுகளை வெளியாக்குகின்றார். ஒவ்வொரு கட்டிலும் 250 வாழை இலைகள் உள்ளன.

இந்திய அளவில் தான் வியாபாரம் என்றாலும் இப்போது அரபு நாடுகளுக்கும் தனது வாழை இலைகளை அனுப்பி வைக்கிறார். இன்னும் பல உலக நாடுகளுக்கும் அவரது தொழில் விரிவடைய வேண்டும் என்பதே நமது விருப்பம்.

வாழை இலை என்றாலே நமக்கு அலட்சியம் உண்டு. ஆனால் அங்கும் பெரும் பணம் சம்பாதிக்க வழியுண்டு என்பதை அம்மையார் நிருபித்திருக்கிறார். 

வாழை இலைக்கு இத்தனை மவுசா என்றால் மனிதன் மனசு வைத்தால் அத்தனைக்கும் ஒரு மவுசை ஏற்படுத்திவிட முடியும்!

No comments:

Post a Comment