Monday 13 September 2021

இதுவும் சரியான கேள்வி தான்!

 அடுத்த மாதம் 3-ம் தேதிக்குப் பின்னர் கட்டம் கட்டமாகப்  பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கான ஏற்பாடுகளைக் கல்வி அமைச்சு செய்து வருகிறது.

அதிலே சிக்கல்கள் பல இருந்தாலும் வேறு வழியில்லை என்னும் நிலைக்குக் கல்வி அமைச்சு தள்ளப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை.

வேறு என்ன செய்ய? குழந்தைகளை எத்தனை நாள்களுக்குத்தான் வீட்டில் போட்டு அடைத்து வைத்திருக்க முடியும்? அவர்களின் அட்டகாசத்தையும் தாங்க முடியவில்லை. இயங்கலையில் பாடம் நடத்தினாலும் அதுவும் பெரும்பான்மையான மாணவர்களுக்கு வெற்றிகரமாக அமையவில்லை! பெற்றோர்களுக்கும் சிக்கல், ஆசிரியர்களுக்கும் சிக்கல்!

அதனால் தான் சுகாதார அமைச்சும் தனது தடுப்பூசி பணிகளை வேகமாக செய்து வருகிறது. இப்படி பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டால் பாதிப்புகள் குறைவாக இருக்கும் என்று சுகாதார அமைச்சு நம்புகிறது.

அதன் பின்னர் தான் பள்ளிகளைத் திறக்கும் வேலைகளைக் கல்வி அமைச்சும் செய்து வருகிறது.  திறப்பதா என்று பெற்றோர்களின் எதிர்ப்புக் குரலும்  ஆங்காங்கே கேட்டு வருகிறது. பெற்றோர்களின்,  தங்கள் பிள்ளைகளின் மீதான கரிசனம், நமக்கும் புரிகிறது.

இப்படியெல்லாம் ஆவேசப்படும் பெற்றோர்கள், அரசாங்கம் கொஞ்சம் தளர்வுகளை ஏற்படுத்தியதும் அவர்கள் செய்கின்ற வேலைகள் நம்மை அதிர வைக்கின்றன!  பேரங்காடிகளுக்குக் குழந்தைகளைத் தயங்காமல் அழைத்துச் செல்கின்றனர். கூட்ட நெருக்கடிதான்! பரவாயில்லை! கடற்கரை, நீர்வீழ்ச்சி, பொழுது போக்கு மையங்கள் என்று எதையும் விட்டு வைப்பதில்லை. எல்லாமே கூட்டம் நிரம்பி வழியும் இடங்கள் தாம்!

 அப்போதெல்லாம் பெற்றோர்களுக்கு எந்த பயமும் வரவில்லை!பள்ளிக்கூடம் போகலாம் என்று அறிவிப்பு வந்ததும் போதும் கோவிட்-19 என்கிற பயம் வந்துவிடுகிறது! பள்ளிக்கூடங்கள் என்ன கோவிட்-19 உற்பத்தியாகும் இடங்களா! நமக்குப் புரியவில்லை! அதைத்தான் பொதுத் தளங்களில் உள்ளவர்களும் கேள்விகள் எழுப்புகிறார்கள்.

கல்வி அமைச்சும், சுகாதார அமைச்சும் முடிந்தவரை, தொற்று வரமாலிருக்க, எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. பிள்ளைகளுக்கு எந்த ஆபத்தும் வராமலிருக்க தங்களால் முடிந்தவரை அனைத்தும் செய்து வருகின்றனர். அவ்வளவு தான் அவர்களால் செய்ய முடியும். அதற்கு மேல் இறைவன் விட்ட வழி!

கோவிட்-19  முற்றிலும் ஒழிக்க முடிந்த வியாதியாகத் தோன்றவில்லை. அது இன்னும் ஒரு சில ஆண்டுகள் தொடரத்தான் செய்யும். அதுவரை எல்லாவற்றையும் அப்படியே மூடி வைத்திருக்க முடியாது. வெளியே வந்து தான் ஆக வேண்டும்.

கல்வித் துறையினரும் சுகாதாரத் துறையினரும்  செய்து வருகின்ற அவர்களது பணிகளை நாம் நம்புவோம். நாமும் நமது சொந்தப் பாதுகாப்பை உறுதி செய்வோம்.

இது நமது அனைவரின் கூட்டு முயற்சி! கூடி வாழ்வோம்! கல்வி பயில்வோம்!

No comments:

Post a Comment