Friday 10 September 2021

சீர்திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே! ஆனால்............!

 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஏழு சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வர  பிரதமர் இஸ்மாயில் சாப்ரி தலைமையிலான அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது.

குறை சொல்ல ஒன்றுமில்லை. எல்லாமே சரியான முறையில் வரையப்பட்ட  சீர்திருத்தங்கள் தாம். அதில் எந்த சந்தேகமுமில்லை!

இந்த சீர்திருத்தங்களில், என்னைப் பொறுத்தவரை,  நான் மிகவும் விரும்புவது கட்சித் தாவலுக்கான சட்டம். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் தங்களது பதவி காலத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியும்.

நம் நாட்டில், இத்தனை ஆண்டுகளில், எந்த ஓர் அரசாங்கமும் இடைப்பட்ட காலத்தில் கவிழ்க்கப்பட்டதில்லை. நான் PAP காலத்திலிருந்து வாக்களித்து வருபவன். 

சென்ற தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் நமக்குப் புதியதொரு பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அமையப்போவது அம்னோ அரசாங்கம் இல்லையென்றால் அது கவிழ்க்கப்படுவது கட்டாயம் என்கிற நிலை உருவாக்கப்பட்டது. இருந்தாலும் இவைகள் எல்லாம் தற்காலிகமே!

வருங்காலங்களில் அம்னோ இனி அரசாங்கத்தை அமைப்பது என்பது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. அம்னோ அரசியல் என்றால் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். இலஞ்சம், ஊழல் என்பது தான் அந்தக் கட்சியின் நிரந்தரக் கொள்கை என்பதை அனைவரும் அறிவர்.  இனி வெறும் மதம், மொழி என்பதெல்லாம் எடுபடாது! அனைத்துக்கும் எல்லா பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

மதத்தின் பெயரைச்சொல்லி, மொழியின் பெயரைச்சொல்லி "நான் கட்சி மாறுகிறேன்!" என்கிற போக்கு மாற வேண்டும் என்பது தான் நாம் விரும்பும் அரசியல்! ஆனால் அது உண்மையான காரணம் அல்ல. ஒருவன் கட்சி மாறும் போது அங்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறுகிறது! பணம் அள்ளிக் கொட்டப்படுகிறது.

இந்தப் போக்கு மாற வேண்டும் என்பது தான் நாம் விரும்பும் அரசியல். அதற்குத் தடை போடுகின்ற  கட்சித் தாவல் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது நமது தேவை.

ஆனால் மேலே குறிப்பிட்ட அனைத்து சட்டச் சீர்திருத்தங்களும்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட முடியுமா என்பது கேள்விக்குறியே!

நாடாளுமன்றத்தில் முதலில் தனக்கான ஆதரவை பிரதமர் இஸ்மாயில் பெற முடியுமா என்பதை நிருபிக்க வேண்டும். அவர் முன்னே உள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அவரால் வெற்றி கொள்ள  முடியுமா என்பதை அவர் எதிர்கொள்ள வேண்டும்.

சீர்திருத்தங்கள் தேவை தான். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து எதுவுமில்லை. ஆனால் பிரதமர் இஸ்மாயில் பிரதமராக நீடிப்பாரா என்பது தான் நமது கேள்வி!

No comments:

Post a Comment