Thursday 9 September 2021

இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

 கல்வி அமைச்சு சரியான பாதையில் செல்வதாகவே நமக்குத் தோன்றுகிறது.

மீண்டும் பள்ளி திறக்கப்படும் போது பள்ளிக்குச் சம்பந்தப்பட்ட அனைவரும் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்பது சரியான நடவடிக்கையே.

ஆசிரியர்கள் மட்டும் அல்ல, பள்ளியில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்கள், பாதுகாவலர்கள், துப்புரவு பணியாளர்கள்,சிற்றுண்டி நடத்துனர்கள் என்று அனைவருமே தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்னும் கல்வி அமைச்சின் முடிவை வரவேற்கிறோம்.

ஆனாலும் சிறு நெருடல் நமக்கு உண்டு. பள்ளிகள் திறக்கும் முன்பே பணியாளர்கள் அனைவருமே தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.  அதனைத்தான் கல்வி அமைச்சு உறுதி செய்ய வேண்டும்.  அவர்கள் இரண்டாம் தடுப்பூசி போட்டு  14 நாள்களுக்குப் பின்னரே அவர்கள் பள்ளி வளாகத்தில் அனுமதிக்கப்படுவர் என்பது கல்வி அமைச்சு தங்களது கொள்கையில் உறுதியாக இல்லை எனத் தெரிகிறது.

பள்ளித் தொடங்குவதற்கு முன்னர் என்று சொன்னால் பள்ளித் தொடங்க இரண்டு நாள்களுக்கு முன்னர் அவர்கள் இரண்டாம் தடுப்பூசியைப் போட்டால் பள்ளிகள் தொடங்கும் போது அவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்! இதனைக் கல்வி அமைச்சே கல்விப் பணியாளர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும்!

கல்வி அமைச்சு தங்களது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும் போது, குறிப்பாக பள்ளி ஆசிரியர்கள், அனைவரும் பள்ளிகள் திறக்கப்படும் குறிப்பிட்ட தேதியில் அனவைரும் பள்ளியில் இருக்க வேண்டும் என்கிற கடுமையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் பள்ளிப் பாடங்கள் சரியான முறையில் மாணவர்களுக்குப்  போதிக்கப்படும். இல்லாவிட்டால் விடுமுறை என்பது சர்வ சாதாரணமாகி விடும். எந்த ஒழுங்கும் இல்லாமல் போய்விடும்.

பள்ளிகள் திறக்கும் போது ஆசிரியர்களின் வருகை என்பது நிச்சயம் உறுதி செய்யப்பட வேண்டும்.

கல்வி அமைச்சு சரியாகச் செயல்படும் என நம்புவோம்!

No comments:

Post a Comment