Monday, 28 February 2022
தலைவரே! இது சரியா!
உக்ரைன் மக்களுக்காக வேண்டுவோம்!
Apartment Building Destroyed.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படை எடுத்தது சரியா தவறா என்று மூக்கை நுழைக்கை விரும்பவில்லை. . காரணம் அது பல பல பல்லாண்டு கால பகையாக இருக்கலாம்.
வெளிப்பார்வைக்குப் பழி ரஷ்யா மீது விழுகிறது. உண்மை, பொய்மை என்பது பற்றி நமக்குத் தெரிய நியாயமில்லை. உண்மை வரும் போது வரட்டும்.
ஆனால் இப்போது அடித்துக் கொண்டு சாகிறார்களே இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும்?
ஒரு பலவீனமான உக்ரைன் நாட்டை பெரும் பலம் கொண்ட ரஷ்யா அடித்துத் துவம்சம் பண்ணுகிறதே - அது தான் மனதை வேதனைப் படுத்துகிறது.
மோதிக் கொள்பவர்கள் சரிசம பலம் கொண்டவர்களாக இருந்தால் "எப்படியோ போங்கடா!" என்று கை கழுவி விடலாம்/ ஆனால் உக்ரைன் நாடு எந்த வகையிலும் ரஷ்யாவின் படை பலத்திற்கு ஈடாகாது! அதனால் உக்ரைன் மக்கள் வீரம் குன்றியவர்கள் என்று ஒரு முடிவுக்கு நாம் வந்துவிட முடியாது!
சண்டையில் எவன் ஆயுதபலத்தை முதலில் பயன்படுத்துகிறானோ அவன் தொடர்ந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் அவன் இருப்பான். அவனுக்கு எப்போதும் ஒரு பயம் இருக்கும்!
இப்போது உக்ரைன் நாட்டின் நிலை என்ன?
உக்ரைன் மக்கள் அக்கம்பக்கத்தில உள்ள நாடுகளுக்கு அடைக்கலம் தேடி ஓடுகிறார்கள். வேறென்ன செய்ய முடியும்? அவர்கள் நிராயுதபாணியான மக்கள். குண்டு வீச்சினால் வீடுகள் சிதலமடைந்து விட்டன. தங்க இடமில்லை. சாப்பாட்டுக்கு வழியில்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. யார் எந்த நேரத்தில் போய் சேர்வார்களோ என்று சொல்ல முடியவில்லை. அப்பனா ஆத்தாவா, அம்மாவா அத்தை மகளா யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து என்ன தான் வாழ்க்கை இது?
"எங்கே மனிதன் யாரும் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!" இறைவா! சிரித்து மகிழ்ந்து வாழ்ந்த மக்கள் இன்று கண்ணீரும் கம்பலையுமாய் கட்டிய துணிகளோடு பரதேசம் செல்லுகிறார்களே! என்ன பாவப்பட்ட ஜென்மங்கள் இவர்கள்!
இறைவா! உக்ரைன் நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வந்தருளும்! போரினால் எந்த ஒரு தீர்வையும் கொண்டுவர முடியாது! என்பதை உலகம் அறிந்திருக்கிறது! தீர்வு என்பது இறைவனால் மட்டுமே முடியும்!
நண்பர்களே! உக்ரைன் நாட்டு மக்களுக்காக அனைவரும் பிரார்த்திப்போம்!
Sunday, 27 February 2022
இளம் வாக்காளர் நிலை என்ன?
இளைஞர்களே! வாக்களிக்கத் தவறாதீர்கள்!
ஜொகூர் மாநிலத்தில், மாநிலத் தேர்தல் சுறுசுறுப்பு அடைந்துவிட்டது!
வருகிற மார்ச் மாதம் ஜொகூர் , 15-வது சட்டமன்றத் தேர்தல், 12-ம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத மாற்றம் முதன் முதலாக இந்த மாநிலத்தேர்தலில் தொடக்கப்புள்ளியாக அமைகிறது. மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாகவும் அமைகிறது. ஆமாம், 18 வயது மேற்பட்ட இளைஞர்கள் வாக்கு அளிக்கும் தகுதியைப் பெறுகின்றனர்.
இளைஞர்களின் குரல் எப்படி எதிரொலிக்கும் என்பது இது நாள்வரை நாம் தெரிந்திருக்கவில்லை. அதற்கான வெள்ளோட்டம் என்பதாகவும் இதனை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
நான் இளைஞனாக முதன் முதலாக வாக்களித்த போது PAP வேட்பாளருக்குத்தான் வாக்களித்தேன்! அது ஏனோ இளம் வாக்களர்களுக்கு எதிர்தரப்பினர் தான் ஈர்க்கின்றனர்! அது அன்றைய நிலவரம். இன்றைய நிலவரம் கணிக்க முடியவில்லை!
சமீபகாலமாக நாட்டின் அரசியல் பெரும்புள்ளிகளின் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள். அம்னோவில் தின்று கொட்டை போட்டவர்களில் பலர் அந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தைரியமாகப் பேசுகின்றனர்! அப்படியென்றால் என்ன பொருள்? இளைஞர்கள் ஊழல்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் நம்புகின்றனர்.
கண்டு கொள்ள மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. இன்று ஜொகூர் மாநிலத்திலுள்ள இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதெல்லாம் அருகே உள்ள சிங்கப்பூர் தான். ஏன் ஜொகூர் மாநிலத்தால் வேலை கொடுக்க முடியவில்லை? அதனை இளைஞர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்று அரசியல்வாதிகள் நினைக்கலாம். ஆனால் இளைஞர்கள் அனைத்தையும் அறிந்தவர்கள்.
இன்று நாட்டையே உலுக்கிக் கொண்டிருப்பது ஊழல்கள் தான் என்பது அனைவருக்கும் தெரியும். அது ஜொகூர் இளைய தலமுறைக்கும் தெரியும்.` இதனை எல்லாக் காலங்களிலும் அவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. முடிவு கட்ட வேண்டும் என்று தான் களத்தில் இறங்குவார்கள்.
இளைஞர் சக்தியைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். அதுவும் 18-வயது என்பது மிகவும் கூர்மையான வயது. முதன் முதலாகக் களத்தில் இறங்குகிறார்கள். முதன் மாநிலமாக ஜொகூர். சரித்திரம் படைப்பார்கள் என நம்பலாம்.
இனி வருங்காலங்களில் இந்த இளம் பட்டாளத்தைக் கொண்டு தான் நாடு தலை நிமிர வேண்டும்!
Saturday, 26 February 2022
அம்மாடியோவ்! இத்தனை கடிதங்களா?
Opposition Leader Lim Kit Siang written 25,000 Press Statements since 1968!
எதிர்க்கட்சி தலைவர், லிம் கிட் சியாங் என்று சொன்னால் அவரை அறியாதார் யார்?
அவர் இல்லையென்றால் எத்தனையோ ஊழல் பிரச்சனைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கும்! நாமும் ஆளும் அரசியல்வாதிகளின் அருமை பெருமைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்போம்!
எனக்குப் பிடித்தமான விஷயம் என்னவென்றால் கடந்த 1968-ம் ஆண்டு தொட்டு சமீபகாலம் வரை அவர் வெளியிட்டிருக்கும் பத்திரிக்கை அறிக்கைகள் சுமார் 25,000 இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது!
ஒரு நாளைக்கு ஒரு செய்தி குறிப்பை பத்திரிக்கைகளுக்கு அவர் அனுப்பி இருந்தாலும் சுமார் 20,000 செய்திகளை அவர் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் ஒரு நாளைக்கு ஒன்று என்பதை விட ஒரே நாளில் மூன்று, நான்கு என்பதற்கு மேல் அவர் அனுப்பி இருக்கிறார்! ஓரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் அவரின் கடமையை அவர் சரியாகவே இப்போதும் செய்து வருகிறார்.
எனக்கும் அவருக்கும் மிகச் சிறிய ஒப்பீடு ஒன்று உண்டு. நான் 1960 லிருந்து தட்டச்சை பாவித்துக் கொண்டு வருபவன். இப்போது கால மாற்றத்தால் கணிப்பொறியைப் பாவித்து வருகிறேன். நான் முதன் முதலாக எனது பணியை ஆரம்பித்த போது தோட்டத்தில் உள்ள மக்கள் என்னிடமே பொதுவாக வருவதுண்டு. பல புகார்கள், பலப்பல புகார்கள்! அவர்களின் புகார்களைத் தெரிந்து கொண்டு அரசாங்க அலுவலகங்களுக்குக் கடிதம் எழுதுவேன். பல புகார்களுக்குச் சரியான பதில்கள் வரும்; வெற்றிகரமாகவும் அமையும். நான் அவர்களிடம் பணம் வாங்குகிற பழக்கம் இல்லை.
நான் மாற்றலாகி வேறு தோட்டத்திற்குப் போகும் போது நான் கடிதப் போக்குவரத்து செய்த அத்தனை கடிதங்களையும் ஒரு கோப்பில் வைத்திருந்தேன். அந்த கோப்பு கொள்ளாத அளவுக்குக் கடிதங்கள்! அவைகள் எனக்குத் தேவைப்படவில்லை. பலர் ஏன் இந்த வெட்டி வேலை என்பார்கள்! அப்படியல்ல! அவைகள் அத்தனையும் எனக்கு அனுபவங்களைக் கொடுத்திருக்கின்றன. இதில் என்னிடம் குறை கண்ட நண்பர்கள் கூட என்னிடம் தான் கடிதம் எழுதச் சொல்லி வருவார்கள்! அதனால் கடிதம் எழுதுவது எனக்குக் கைவந்த கலையாக மாறிப்போயிற்று!
லிம் அவர்களின் செய்தியைப் படித்த போது எனது கடிதப் போக்குவரத்து காலத்தைக் கொஞ்சம் எண்ணிப் பார்க்கவைத்துவிட்டது. ஆமாம் சும்மாவா! என்னுடைய ஏழாவது வயதிலிருந்து நான் எழுதிக் கொண்டிருப்பவன்! இப்போதும் எழுதிக் கொண்டிருப்பவன்! ஒரு வித்தியாசம். என்னுடைய கடிதங்கள் தனிப்பட்ட மனிதர்களின் நன்மைக்காக எழுதப்பட்டவை. லிம் அவர்களின் கடிதங்கள் நாட்டு மக்களின் நலனுக்காக எழுதப்பட்டவை. ஏதோ என்னுடைய சில இனிய அசைவுகளைப் பகிர்ந்து கொண்டேன்! அவ்வளவு தான்!
லிம் கிட் சியாங் அவர்களின் சேவைகளை நான் மதிக்கிறேன். நாட்டு மக்கள் அவரின் மூலதனம். இந்த வயதிலும் அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் அசரவில்லை.
இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இந்த நாட்டுக்கு அவர் சேவையாற்ற வேண்டும்! வாழ்த்துகள்!
வேலை வெட்டி இல்லையா?
சமீபத்தில் நடந்தேறிய தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி மாபெரும் தோல்வியைத் தழுவியது!
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எல்லா கட்சிகளுமே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துத் தான் வெற்றி பெற முடியும் என்கிற நிலையில் தான் தமிழ் நாடு இருக்கிறது!
மக்கள் நீது மய்யம் ஆட்சியில் இருந்தால் ஒருவேளை வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றியை உறுதி செய்யலாம்! அதற்கும் வழியில்லை! கமல்ஹாசன் ஆட்சியைப் பிடிப்பார் என்பதற்கான ஒரு சிறிய அறிகுறிகள் கூட எதுவும் இல்லை! அவருக்கு மூன்னாள் இருந்த கட்சிகளே ஆட்டம் கண்டு விட்டன! இவர் எம்மாத்திரம்!
பொதுவாகவே சினிமாவில் இருந்து வருபவர்கள், தங்களது சினிமா கவர்ச்சியின் மூலம், நாட்டைப் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். எம்.ஜி.ஆர். பிடித்தால் என்றால் அவர் சினிமா மூலம் தன்னை ஓர் அசைக்க முடியாத மனிதராக ஒவ்வொரு படத்திலும் அடையாளப்படுத்திக் கொண்டார்! அவர் அதைத் திட்டம் போட்டு செய்தார் என்று சொல்வதற்கில்லை. அவருக்கு நல்ல மனசு இருந்தது. அதனால் அதுவாகவே தானாக வந்து அவரிடம் ஓட்டிக் கொண்டது! அவர் ஓரு சகாப்தம். அவரோடு அது முடிந்துவிட்டது.
இனி அந்த இடத்தை நிரப்ப சினிமாவில் யாரும் இல்லை என்பது தான் உண்மை. அது தேவையும் இல்லை. கமலாலும் முடியாது!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வியைத் தாங்க முடியாத ம.நீ.ம. வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்கிற செய்தியைப் படித்த போது அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை! ஆளுங்கட்சியாக இருந்தால் செத்தால் பணம் கிடைக்கும்! கமல்ஹாசன் அப்படியெல்லாம் செய்ய வாய்ப்பில்லை! அவரே நொந்து போய் கிடக்கிறார்! அவருடைய வேட்பாளர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவி விட்டனர். பெயர் சொல்ல ஒருவருமில்லை! இதில் தற்கொலை வேறு!
தேர்தலில் நின்று அப்படியெல்லாம் ஒரே நாளில் ராஜாவாக முடியாது என்பதை வேட்பாளர்களுக்குக் கமல் புரிய வைத்திருக்க வேண்டும். இதெல்லாம் நீண்ட நாள் உழைப்பு, நீண்ட நாள் அர்ப்பணிப்பு, நீண்ட நாள் சேவை, இவைகளோடு சேர்ந்து பணம்! பணம் இல்லாமல் அணுவும் அசையாது! அது தான் தமிழ் நாட்டின் தேர்தல் நிலவரம்!
ஒரு வகையில் இந்த தற்கொலையும் நன்மைக்குத்தான் நடந்திருக்கிறது. ஒரு பொறுப்பற்ற மனிதர் தூக்குப் போட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் தனது குடும்பத்தைக் கூட சட்டை செய்யவில்லை! அவர் குடும்பத்தை விட ஒரு சினிமா நடிகரின் கட்சியை உயர்வாக நினைத்தவர். இருந்தும் அவர்புண்ணியம் இல்லை. இல்லாமலே போகட்டும்!
இது போன்ற வேலை வெட்டி இல்லாதவர்கள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன! போய்ச் சேரட்டும்!
வட்டமேசை விவாதம் தேவையா?
சமய விவகார அமைச்சர் ஓரு வட்டமேசை விவாதத்திற்காக, வருகின்ற புதன்கிழமையன்று, ஒரு கூட்டத்தைக் கூட்டவிருக்கிறார்.
தனித்து வாழும் தாயான லோ சியூ ஹொங்கின் மூன்று குழந்தைகள் ஒரு தலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதைப் பற்றியான கூட்டமாக இது இருக்கும் என நம்பப்படுகிறது.
செய்திகளின் மூலம் தெரியவருவது யாதெனில் இது இஸ்லாமிய அறிஞர்களின் கூட்டம் என்றே கருத இடமிருக்கிறது. கலந்து கொள்பவர்களில் இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள், விரிவுரையாளர்கள், முப்திகள் ஆகியோர் கலந்து கொள்ள விருக்கின்றனர்.
மாநிலத்திலுள்ள இஸ்லாமிய அறிஞர்கள் பலர் நாட்டின் சட்டதிட்டங்களை அறியாது மதமாற்றம் செய்கின்றனர். அது மிகவும் வேதனைக்குரியது. பதவிகளில் உள்ளவர்கள் குறிப்பாக முப்திகள் கடைசி நிமிட சட்ட மாற்றங்கள் வரை தெரிந்திருக்க வேண்டும். இது முக்கியம்.
மாநில இஸ்லாமிய சட்டங்கள் எங்களுக்கு அத்துப்படி என்று பேசுவது காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை அவர்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பதை அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை.
இந்த மாற்றங்களைத் தெரியாதவரை அப்பாவி மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அது தான் சமீபத்தில் நடந்தது. அந்த தனித்து வாழும் தாய் மூன்று வருடங்களாக தனது பிள்ளைகளைக் காணாமல் அலைந்து திரிந்திருக்கிறார். அந்த குழந்தைகளைத் தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற எண்ணமே யாருக்கும் எழவில்லை! காவல்துறைக்கும் வரவில்லை! சமய இலாகாவுக்கும் அது தோன்றவேயில்லை!
மதமாற்றம் செய்ய வேண்டுமென்று காட்டுகின்ற வேகம் குழ்ந்தைகளைப் பொறுப்பாக தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் காட்டவில்லை! சமயம் என்பதை விட்டுவிடுங்கள். மனிதாபிமானம் என்பது கூடவா இல்லாமற் போயிற்று?
இது போன்ற விஷயங்கள் இந்த வட்டமேசை விவாதத்தில் பேசப்படும் அல்லது எழுப்பப்படும் என நம்பலாம். ஆனைக்கும் அடிசறுக்கும் என்பார்கள்! அது தான் நடந்திருக்கிறது! இப்போது அறிஞர்களுக்கும் அடிசறுக்கும் என்பது தெளிவாகிறது!
சமயம் என்பது எத்துணை உணர்ச்சிமயமான விஷயம் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும் போது ஒரு சிலருக்கு மட்டும் கண்கள் திறக்கவே மாட்டேன் என்பது வருத்தம் தான்!
வட்டமேசை விவாதம் என்பது தேவையே!
Friday, 25 February 2022
பிள்ளைகளுக்கான தடுப்பூசி!
vaccination for school children
Thursday, 24 February 2022
சிக்கனம்! சேமிப்பு! சிக்கனம்! சேமிப்பு!
கொரோனா என்றாலே இப்போது நாம் பயப்பட வேண்டிய நிலைமையில் தான் இருக்கிறோம். கடைசியாகப் படித்த செய்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது 32,000 என்கிற அளவுக்கு உயர்ந்து விட்டது. . இந்த எண்ணிக்கை என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
மீண்டும் பழைய - ஓராண்டுக்கும் முன்னர் - இருந்த நிலைமை மீண்டும் வருமா என்கிற அச்சம் வரத்தான் செய்கிறது. பயப்படத்தான் வேண்டியுள்ளது.
இப்போது ஏதோ ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறோம். பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் அதனையும் சிக்கனம் பிடித்து சேமிக்க வேண்டும். இது கட்டாயம்.
மது அருந்துவதை குறைத்துக் கொள்ளலாம். அனாவசிய செலவுகளை நிறுத்தி விடலாம். திரை அரங்குகளில் போய் திரைப்படம் பார்ப்பதை ஒதுக்கி விடலாம். இப்போது தொலைக்காட்சிகளில் புதிய படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அதே போதும். நாம் கஷ்டப்படும் போது கதாநாயகர்கள் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் தான் பயணம் செய்யப் போகிறார்கள். நமக்குத் தேவை மூன்று வேளை உணவு, அவ்வளவு தான். நமக்கான வழிகளை நாம் தான் தேடிக்கொள்ள வேண்டும்.
நமக்குத் தேவை என்னும் போது நமது பணம் தான் நமக்குப் பலம். அதனை நாம் இறுக்கமாகப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு குறைவான சம்பளம் வாங்கினாலும் அதிலும் ஒரு நூறு வெள்ளியாவது சேமிப்புப் பக்கம் திருப்பிவிட வேண்டும். இது கட்டாயம். நமது பணத்தை நாம் சேமிக்கவில்லையென்றால் வேறு யாரால் சேமிக்க முடியும்?
நாம் எல்லாக் காலங்களிலும் "சேமிக்க முடியாது!" என்று சொல்லியே பழகி விட்டோம். ஏன் முடியாது என்று நாம் கேள்வி கேட்பதில்லை. ஒவ்வொரு மாதமும் நமக்குப் பல செலவுகள் இருக்கின்றன. வீட்டு வாடகை, கார் மாதாந்திரத் தவணை - இப்படி இன்னும் பல தவணைகள் இருக்கலாம். ஆனால் நமது முதல் தவணை என்பது சேமிப்பு தான். முதலில் சேமிப்பு அதன் பின்னர் தான் மற்ற தவணைகள் என்கிற ஒரு ஒழுங்கை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பெரிய பெரிய சம்பளம் வாங்குவர்களால் தான் சேமிக்க முடியும் என்னும் மாயையிலிருந்து நாம் விடுபட வேண்டும். சேமிப்பு என்பது எல்லாருக்கும் தேவையானது. அதில் சிறிய சம்பளம், பெரிய சம்பளம் என்கிற வேறுபாடுகள் இல்லை. தனது தேவைகளை தனது வருமானத்திற்கு ஏற்றபடி அமைத்துக் கொண்டு வாழ்பவர்களே வெற்றியாளர்கள். தேவைகளில் முதல் தேவை சேமிப்பு. அதனைக் கடைப்பிடிப்பவர்கள் வெற்றியாளர்கள்.
ஆமாம் நண்பர்களே! இந்த செய்தி நம் எல்லாருக்கும் தான். என்ன தான் கஷ்ட காலமாக இருந்தாலும் முதலில் சிக்கனம் அதனால் வருகின்ற சேமிப்பு. அதுவும் பண சேமிப்பு. சொத்துக்கள் நிறைய இருக்கலாம். ஆனால் யாரிடம் பணம் கையிருப்பில் இருக்கிறதோ அவர்கள் தான் "கிங்" என்பார்கள்! அதாவது "மன்னாதி மன்னன்" நீங்கள் தான்! சொத்து வைத்திருந்தவர்கள் கூட நட்டத்திற்குத் தானே விற்க முடிந்தது! மனக் கஷ்டத்தோடு தானே சொத்துக்களை விற்றார்கள்! இலட்சக்கணக்கில் பண இருப்புத் தேவையில்லை. ஒரு சில நூறு, ஒரு சில ஆயிரம் என்பது உங்கள் பணம். ஆபத்து அவசர வேளைகளில் உங்களுக்கு உதவும்.
நண்பர்களே! அடுத்த கட்ட பிரச்சனைகள் வரும் முன்னே தயாராகி விடுங்கள். சிக்கனத்தைக் கடைப்பிடியுங்கள். சேமிப்பை வளர்த்துக் கொள்ளுங்கள். ராஜாவாக தலைநிமிர்ந்து நில்லுங்கள்!
Wednesday, 23 February 2022
ஏன் இந்த தேர் திருவிழா!
Tuesday, 22 February 2022
ஐயோ! வேண்டாமே!
Dr.Nelson Murugan. Founder, Our Malaysian Indian Association
டாக்டர் நெல்சன் முருகன் நமது நாட்டு பெண்களுக்கு நல்லதொரு புத்திமதியைக் கூறியிருக்கிறார்.
பாராட்டுகிறேன்! இதற்கு முன்பு கூட ஒருமுறை இது போன்ற செய்தியை நானே வெளியிட்டிருக்கிறேன்.
மலேசியப் பெண்களில் அதிகமாக ஏமாறுபவர்கள் இந்தியப் பெண்கள் தான். அதென்ன இந்தியப் பெண்கள்? இது போன்ற குட்டிச்சுவரான காரியங்களுக்குப் பேர்போனவர்கள் நமது தமிழ்ப் பெண்கள் தான்.! அறிவும் இல்லை; தெளிவும் இல்லை!
வங்காளத்தேசிகளைத் திருமணம் செய்வதே பெரிய தவறு. அதனைக் கூட மன்னித்துவிடலாம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனாலும் இவைகளையெல்லா மீறி அவர்கள், அவர்களது ஊர் பக்கம் போகலாம் என்று நினைக்கிறார்களே அது மாபெரும் தவறு! சும்மா போய் வருகிறோம் என்பதே தவறு! கனவில் கூட அது போன்ற எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொள்ளக் கூடாது என்பது தான் நமது அறிவுரை!
இந்த நாட்டில் அவர்கள் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்வதன் நோக்கமே வேறு. முதலில் அவர்கள் இந்த நாட்டில் நிரந்தரமாக தங்கிவிட வேண்டும். அது தான் அவர்களது நோக்கம். தங்களின் நோக்கம் நிறைவேற அவர்கள் எதனையும் செய்யத் தயார்!
நாம் ஏன் அவர்களை வங்காளத்தேசத்திற்குப் போக வேண்டாமென்பதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலில் அங்குத் தரை இறங்கியதுமே காணாமல் போய் விடுவீர்கள்! காணாமலடித்து விடுவார்கள்! அதன் பின்னர் உங்களுக்கான இடம் என்பது சிவப்பு விளக்குப் பகுதிகள் தான்.
நீங்கள் குழந்தைகளோடு போனால், உங்கள் கணவரின் குடும்பத்தினர், குழந்தைகளைப் பிடிங்கிக் கொண்டு உங்களை விரட்டிவிடுவார்கள். கையில் உங்களிடம் கடப்பிதழ் இருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். அதனையும் அவர்கள் பிடிங்கிக் கொண்டால் நீங்கள் பிச்சை எடுக்க வேண்டிவரும்!
வங்காளதேச மக்கள் நல்லவர்கள் தான். ஆனால் அவர்களுக்கென்று சில கொள்கைகள் உண்டு. கலாச்சாரம், பணபாடுகள் உண்டு. அயலாரை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கிராமப்புற கலாச்சாரம் என்பது நாம் எதிர்பார்ப்பது போல் இருப்பதில்லை. ஏன்? தமிழ் நாட்டிலும் அதே நிலை தான்! ஒரு மொழி பேசுபவர்களே நம்மை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் வேற்று மொழி பேசுபவர்களின் கலாச்சாரம் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இங்கு நாம் மேலோட்டமாகத் தான் பேசுகிறோம். ஆழமாக அலசவில்லை. புரிந்து கொண்டால் போதும் என்பது தான் நோக்கம்.
நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்குப் பல காரணங்கள் உண்டு. அதனை எங்களால் எதிர்க்க முடியாது. அதற்கு உங்களிடம் நல்ல காரணங்கள் இருக்கலாம். முடிந்தவரை உங்களைப் பிரிந்து ஓடிவிடாதாவாறு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது தான் முக்கியம்.
எல்லாக் காலங்களிலும் நாம் ஏமாந்து கொண்டே இருப்போம் என்று நாம் யாரிடமும் சத்தியம் செய்து கொடுக்கவில்லை!! யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள். கௌரவமாக நடந்து கொள்ளுங்கள். அஞ்சடித்தனம் வேண்டாம்!
கடைசியாக வங்காள தேசம் போவதை கனவிலும் நினைக்கவேண்டாம். பாக்கிஸ்தானுக்கும் அதே அறிவுரை தான். இரண்டுமே ஒரே குட்டை! ஒரே மட்டை!
Monday, 21 February 2022
இதற்கும் முடிவு காண வேண்டும்!
மூன்று குழந்தைகளின் தனித்துவாழும் தாய் திருமதி லோ குழந்தைகளின் வழக்கில் குழந்தைகள் தாயிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
இந்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் என்றாலும் அப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதற்கும் நம்மிடம் ஆதாரம் உண்டு. என்னவோ நல்ல தீர்ப்பாக அமைந்ததற்கு நன்றி சொல்லுவோம்.
ஆனாலும் வழக்கு இன்னும் முழுமையாக முடிவடைந்துவிட்டதா என்ப்தைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முதல் கட்டம் தான் முடிவடைந்திருக்கிறது. இன்னும் போகும் பாதை நீண்டதாகவே இருக்கிறது. குழந்தைகள் தாங்கள் அறியா வயதில் மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் ஆச்சரியப்பட வேண்டியது என்னவென்றால் மதமாற்றம் செய்யக் கூடாது என்று தெரிந்தும் அவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்!
சட்டத்தை அறியாதவர்கள் பிழைகள் புரியலாம். ஆனால் அவர்கள் சமய அறிஞர்கள். சட்டத்தை அறிந்தவர்கள். நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்தவர்கள்.
ஆனாலும் அவர்கள் சட்டத்தோடு மோதுவதை ஒரு விளையாட்டாகவே கருதுகிறார்கள்! அது அவர்களுக்கு ஒரு விளையாட்டு! ஆனால் எதிராளிகளுக்கு அது மாபெரும் போராட்டம். மனப் போராட்டம். மதமாற்றம் என்பது ஒரு சில விஷயங்களில் அவர்களுக்குச் சாதகமாக அமைந்து விடுகிறது. மற்றவர்களை இழிவுபடுத்துவது, அவமானப்படுத்துவது, கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது - இதெல்லாம் அவர்களால் செய்ய முடியும். அதனை அவர்களால் அரசியலாக்க முடியும். நீதிமன்றத்திற்கு வெளியே நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய முடியும்! நீதிபதியை பயமுறுத்த முடியும். எதிராளிக்கு ஒரு வழியும் இல்லை!
நீதியை மட்டுமே கடைப்பிடிக்கின்ற நீதிபதிகளால் மட்டுமே நீதியை நிலைநாட்ட முடியும். அப்படியும் நீதிபதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதுவரை நடந்தது சரிதான். இனிமேல் நடக்கப் போவதும் சரியாக இருக்க வேண்டும். காரணம் இப்போதே ஒரு சிலர் மதமாற்றம் சரியே என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் அதனை அவர்கள் சாதிக்கவே முயல்வார்கள்!
அதுவும் பெர்லிஸ் முப்தி அவர்களின் கடந்தகால நடவடிக்கைகள் மற்ற மதத்தினருக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை! அவரின் அணுகுமுறையே வேறு மாதிரி!
அரசாங்கம், ஒரு தலைப்பட்சமாக மதமாற்றம் செய்வதை தடை செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் இந்த பிரச்சனை தலைதூக்குவது நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும்.
சட்டங்கள் என்பது அனைவருக்குமே! மேலோர் கீழோர் என்பது சட்டத்திற்கு இல்லை! அதனைக் கடைப்பிடித்தாலே போதும். எந்த ஒரு பிரச்சனையும் எழப்போவதில்லை!
Sunday, 20 February 2022
ஏற்றுக்கொள்ள தக்கதல்ல!
Penang Mufti Wan Salim Wan Mohd Noor
பினாங்கு முப்தி அவர்களை மதிக்கிறோம். அவர் தனது கருத்தைக் கூறியிருக்கிறார்.
நமக்கும் நமது கருத்துக்களைக் கூற அவர் எங்களுக்கும் அந்த மரியாதையைக் கொடுக்க வேண்டும்.
அந்த மூன்று குழந்தைகளின் தாயார் படும் வேதனையை முப்தி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் இங்கு கேட்பதெல்லாம் ஒரு குழந்தை இஸ்லாமிய இலாகாவினரிடம் 'அகப்பட்டுக்' கொண்டால் உடனே அவர்களை மதம் மாற்றம் செய்ய வேண்டுமென்று ஏதேனும் சட்டங்கள் உண்டா? அவர்கள் எந்த மதத்தினர் என்று அறியாமல், அவர்களின் பின்னணியை அறியாமல், எங்களுக்கு அதெல்லாம் தேவை இல்லை என்று இறுமாப்போடு செயல்படும் இஸ்லாமிய அதிகாரிகளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
மதம் மாற்றுவது குற்றம் என்று தெரிந்தும் அவர்கள் மதம் மாற்றம் செய்திருக்கிறார்கள். முதலில் அதற்கானத் தண்டனையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். தண்டனை இல்லையென்றால் அவர்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.
இது அவர்களின் முதல் தவறல்ல. தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இந்தியர்களின் மீது தொடர்ந்து வன்மத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர் தாக்குதல்; ஏற்புடையதல்ல!
பினாங்கு முப்தி அவர்கள் சொல்லுவதை ஏற்றுக் கொண்டால் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்! நாம் அவர்கள் வாயைப் பார்த்துக் கொண்டு பொத்திக் கொண்டிருப்பது தான்.
நாம் ஏற்றுக்கொள்ளாத ஒரு மதத்தை நம் மீது திணிப்பது வன்செயலுக்கு ஒப்பாகும். இன்று நம்மிடையே பல மதங்கள் இருப்பதே நம்மிடையே வேறுபாடுகள் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முப்தி அவர்கள் சொல்ல வருவது எல்லாம் ஒன்றே ஒன்று தான். நாங்கள் செய்யத்தான் செய்வோம், நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் நம்மிடையே, இஸ்லாமியரும்-இந்துக்களும், ஒற்றுமையுடன் வாழ முடியும் என்கிறார் முப்தி. அதாவது நல்லிணக்கம் என்பது இதுதான். நாம் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். அவ்வளவு தான்
நமக்கு மட்டும் தான் அந்த அறிவுரையைக் கொடுத்திருக்கிறார் முப்தி. காரணம் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்றால் நாம் அனைவரும் அமைதியாகத் தான் போக வேண்டும் என்கிறார்.
நீதி, நியாயம் என்பது பற்றி பேசி காலத்தை வீணடிக்க வேண்டாம். மாற்றம்செய்துவிட்டால் அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்! என்பது தான் அவர் அறிவுரை!.
ஆனாலும் முப்தி அவர்களே! உங்கள் அறிவுரையை எங்களுக்கு மட்டும் சொன்னால் எப்படி? இது ஒருதலைபட்சமாக அல்லவா தோன்றுகிறது!
மித்ராவில் முறைகேடுகள்!
Saturday, 19 February 2022
நாம் என்ன அரக்கர்களா!
Indonesian Ambassador Hermono
Friday, 18 February 2022
நீதிமன்றம் முடிவு செய்யட்டும்!
சட்ட அமைச்சர்: Wan Junaidi Tuanku Jaafar
மதமாற்றம் சரியே!
Perlis Mufti Mohamad Asri Zainul Abidin
Thursday, 17 February 2022
இஸ்லாமிய போதகர்ளுக்கும் சட்டம் உண்டு!
நன்றி: தமிழ் மலர்
Wednesday, 16 February 2022
இது எதிர்பார்த்தது தான்!
Mother reunites with her three children
தனித்து வாழும் தாயான லோ சியு ஹோங் தனது மூன்று பிள்ளைகளையும் இன்று மதியம் சென்று பார்த்ததாக வணக்கம் மலேசியா இணையத் தளம் கூறியது.
அவர் குழந்தைகளைப் பார்க்க நிறைய தடைகள் இருந்த போதிலும் அவர் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி கடைசியாக அவருடைய குழந்தைகளைப் பார்க்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனாலும் இந்த விதிமுறைகள் தேவையற்றவை என்பதாகக் கூறுகிறார் முன்னாள் துணை அமைச்சர், பி.வேதமூர்த்தி. இந்த பிரச்சனையில் அந்த தாயிடம் அரசாங்கம் பரிவுடன் நடந்து கொள்ளவில்லை. அரசாங்கம் சட்டத்தையும் அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளையும் மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார் வேதா.
நாமும் அதைத்தான் சொல்ல வருகிறோம். தனித்து வாழும் ஒரு தாய் தனது பிள்ளைகளைப் பார்ப்பதில் இந்த அளவு கெடுபிடிகள் தேவையில்லை என்பதே நமது கருத்தும் கூட. அந்த தாய் ஏதோ ஒரு பயங்கரவாதியை போன்று நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
தனது குழந்தைகளைப் பார்க்க ஒரு தாய் அனுமதிக்கப்படாததற்கு ஏதேதோ காரணங்கள் சொல்லப்படுகிறது. பெர்லிஸ் மாநில முப்தி பார்ப்பதற்கு அப்படி எந்த ஒரு விதிமுறையும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். உண்மையில் முப்தி அவர்களுக்கு அனுமதி கொடுத்ததே தவறு என்பதாகவே நான் நினைக்கிறேன். இது ஒரு வகையான பயமுறுத்தல் நாடகம். அவர்கள் குழந்தைகள். அவர்களிடம் போய் சமயம் பற்றி பேசுவதை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது? ஆனாலும் அது நடந்திருக்கிறது! சமயம் பற்றி அவர்களிடம் பேசுவதற்கான வயது அல்ல அவர்களுக்கு. ஆனாலும் மதிக்கத்தக்க ஒரு மனிதர் இதனைச் செய்திருக்கக் கூடாது என்பதே நமது கருத்து.
ஆனாலும் இந்த பிரச்சனை இத்தோடு தீர்ந்துவிட்டதாக நான் கருதவில்லை. இந்திராகாந்தி பிரச்சனைப் போன்று இதுவும் நீண்டு கொண்டு போகலாம். இதற்கெல்லாம் காரணம் இஸ்லாமிய இலாகா தான். அவர்களுடைய தவறான அணுகுமுறை அதனை அவர்கள் இழுத்தடிப்பதிலிருந்தே தெரிகிறது. இஸ்லாமிய இலாக்காவும் நாட்டின் சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும். அவர்களே சட்டத்தை மதிக்காவிட்டால் மற்றவர்களை நாம் எப்படி குறைசொல்ல முடியும்?
தனித்து வாழும் இந்த தாயின் பிரச்சனை சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர நாம் அனைவரும் பிரார்த்திப்போம்!
Tuesday, 15 February 2022
இலஞ்சம் தவிர்!
Monday, 14 February 2022
சட்டம் எங்களுக்கல்ல!
Sateesh Muniandy Loh Siew Hong (Mother) David Marshel
ஏற்கனவே இந்திராகாந்தி மகள் மதமாற்ற வழக்கு இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியாது நிலையில் (நீதிமன்றத்தின் உத்தரவை மீறி குழந்தையை தாயிடம் ஒப்படைக்க மறுக்கும் மாஜி கணவர்) இந்த நேரத்தில அதே பாணியில் இன்னொரு வழக்கும் தலை தூக்கியிருக்கிறது!
தாயின் அனுமதி இல்லாமல் தனது மூன்று குழந்தைகளும் தனது முன்னாள் கணவரால் மதம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதில் உண்மை இருக்கலாம். காரணம் இதுவரையில் இஸ்லாமிய இலாகா எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றால் அதில் உண்மை இருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.
ஒன்று மட்டும் நமக்குப் புரிகிறது. பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் மதமாற்றம் செய்யக் கூடாது. இதனை இந்திரா காந்தியின் வழக்கில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு. இந்த தீர்ப்பை யாரும் மதிக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது! அல்லது மதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை எனவும் சொல்லலாம்.
நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை முக்கியமாக இரண்டு அமைப்புக்கள் தங்களது கவனத்தில் கொள்ளவில்லை. ஒன்று அரசாங்கம் இன்னொன்று காவல்துறை. அரசாங்கம் "இது உங்கள் பிரச்சனை! நாங்கள் தலையிடமாட்டோம்!" என்று இஸ்லாமிய இலாக்காவிடம் உறுதிமொழீ கொடுத்திருக்கிறது! காவல்துறைக்கோ ஒரு பிரச்சனையும் இல்லை! "இந்திராகாந்தியின் மகளையே நாங்கள் ஒப்படைக்கவில்லை! இதுவும் அப்படி நடக்கலாம்!" என்று இறுமாப்போடு இருக்கிறது!
ஆக, சட்டத்தைப் பற்றியெல்லாம் இங்கு யாரும் கவலைப்படவில்லை! இது இந்தியர்களின் பிரச்சனை தானே! யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்! ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் யாரும் பேச மாட்டார்கள்! தேர்தலில் உங்களுக்குச் சீட் இல்லை என்று சொல்லி விடுவார்களோ என்று இப்போதே நடுக்கத்தோடு இருக்கிறார்கள்.
எதிர்கட்சியினர் குரல் கொடுக்கிறார்கள். அவர்கள் பேசுவது எதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உறைக்கப்போவதில்லை! கேட்டுக்கேட்டு அவர்களுக்கும் புளித்துப் போய்விட்டது!
பொதுவாக இந்தியர்களின் மதமாற்ற விவகாரம் என்றால் அதனை ஒரு பிரச்சனையாகவே யாரும் கருதவதில்லை. இப்போது இந்த மதமாற்ற விவகாரத்தில் அந்த குழந்தைகள் தாயிடம் ஒப்படைக்கபடுவார்களா என்பதே சந்தேகத்திற்குரியது. சட்டத்தில் இல்லாததையெல்லாம் போட்டுக் குழப்பியெடுப்பார்கள்! கஞ்சா அடிக்கிற கணவன் சொன்னதையெல்லாம் இஸ்லாமிய இலாக்கா ஏற்றுக் கொள்கிறது. ஆனால் குழந்தைகளைப் பெற்ற தாய் சொல்லுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! நீதிமன்றம் சொல்லுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! அதனால் அவர்கள் வைத்தது தான் சட்டம்!
ஒன்று புரிகிறது! நீதிமன்றம் சொல்லுவதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை! சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள்! அவ்வளவு தான்!
Sunday, 13 February 2022
யார் எழுதிய பாடல்?
நான் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களைப் பற்றி அதிகம் அறியாதவன். "தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு" என்கிற பாடல் இன்னொன்று "தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" போன்ற பாடல்களை எழுதியவர் என்பது மட்டும் தெரியும். மற்றபடி அத்தோடு சரி.
Saturday, 12 February 2022
ஏன் இந்த வேற்றுமை?
இப்போது நம் நாட்டில் பேசப்படும் முக்கியமான விஷயமாகக் கருத வேண்டியது குறைந்தபட்ச சம்பளம்.
பெரும்பாலும் இதில் வருபவர்கள் பி40 என்று சொல்லப்படும் அடிமட்ட வேலையில் உள்ளவர்கள். இவர்களுக்கான சம்பளம் என்பது ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமான சம்பளம் என்பது தான் உண்மை.
ஆளைப்பார்த்து தான் சம்பளம். இந்தியர்கள் என்றால் அடிமட்ட சம்பளம்! ஒரு சிலர் கல்வி தரத்தை வைத்து அளப்பவர்களும் உண்டு! ஆனால் பெரும்பாலும் "வலியவன் வெட்டியதே வாய்க்கால்!" என்கிற நிலை தான்! காரணம் அதை விட்டாலும் வழியில்லை என்கிற நிலையில் தான் நாம் இருக்கிறோம்!
இந்த சூழலில் தான் இப்போது குறைந்தபட்ச சம்பளம் பற்றி பேசப்படுகின்றது. நல்லது தான். இதனை எத்தனை முதலாளிகள் கடைப்பிடிப்பார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியப் போவதில்லை! சும்மா 'பாவ்லா' காட்டுபவர்கள் நிறையவே உண்டு! இங்கு நாம் குறைந்தபட்ச சம்பளம் என்பது ரி.ம.1500.00. இந்த சம்பளத்திற்கே இன்னும் முதலாளிகள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை! ஒரு பக்கம் 'ஆ!ஒ!' என்று அலறிக் கொண்டிருக்கிறார்கள்!
இந்த நேரத்தில், கவனியுங்கள் இந்த நேரத்தில், வீட்டு வேலைகள் செய்ய வரும் இந்தோனேசியப் பெண்களுக்கு ரி.ம. 2000,00 வெள்ளி சம்பளம் கொடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கிறது! அல்லது பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அல்லது இன்னும் ஆய்வில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
இங்கே நாம் கவனிக்க வேண்டியது நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் பி40 மக்கள் வெறும் 1500 வெள்ளிக்காக இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த பி.40 மக்கள் இல்லையென்றால் பல வேலைகள், பல சிறு சிறு நிறுவனங்கள் அனைத்தும் தங்களது நிறுவனங்களை இழுத்து மூட வேண்டி வரும்! இந்த நிறுவனங்கள் எல்லாம் பி40 மக்களை நம்பியிருக்கும் நிறுவனங்கள் ஆகும். 1500 வெள்ளி சம்பளம் கொடுக்க இன்னும் அரசாங்கம் எந்தவித ஆணையும் பிறப்பிக்கவில்லை!
ஆனால் வீட்டு வேலை செய்ய வரும் இந்தோனேசியர்களுக்கு 2000 வெள்ளி சம்பளம் கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது! அரசாங்கம் எந்த அளவுக்கு ஏழை மக்கள், பி.40 மக்கள் மீது மரியாதை வைத்திருக்கிறது என்பதை இப்போது புரிந்து கொள்ளலாம். அவர்களுக்குச் சம்பளம் கூட கொடுப்பதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் நம் மக்களுக்கு அதே அளவு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் நாம் சொல்ல வருவது.
எது முக்கியம் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். இந்தோனேசியர்கள் வேலைக்கு வருவது என்பது தனிப்பட்ட முதலாளிகளின் வசதிக்காக. பி40 மக்கள் என்பது நாட்டின் வளர்ச்சிக்காக. நாட்டின் முன்னேற்றத்திற்கு பி.40 மக்களின் பங்கு என்பது அளப்பரியது.
இந்த வித்தியாசங்கள் கலையப்பட வேண்டும். நம் நாட்டு மக்களுக்கு குறைந்தபட்சம் ரி.ம. 2000.00 வெள்ளி சம்பளம் என்பதே சரியாக இருக்கும். சொந்த நாட்டு மக்களின் முன்னேற்றமே முக்கியமே தவிர வீட்டு வேலை செய்ய வருபவர்களுக்கு அள்ளிக் கொடுப்பது முக்கியம் அல்ல!
Friday, 11 February 2022
கொடிகட்டிப் பறக்கிறோம்!
இலஞ்சம் ஊழல் என்பதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!
ஆமாம், நாம் யோக்கியமாக இருந்தால் தானே இறைவன் நல்லதைச் செய்வார். நாம் தான் இலஞ்சத்தைக் கொடுத்து காரியங்களைச் சாதிக்க நினைக்கிறோமே! அதற்கு நாம் தான் அனுபவிக்க வேண்டும்? இல்லையா!
நாட்டில் இலஞ்சம் ஊழல் என்பதெல்லாம் தலைவிரித்தாடுகிறது என்னும் கூக்குரல் நாடெங்கிலும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. முதலில் அது எதிர்கட்சியினரிடமிருந்து வந்து கொண்டிருந்தது. இப்போதோ ஒரு படி மேல் போய் பொது மக்களிடமிருந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது!
எதிர்கட்சியினர் பேசினால் அரசியல் என்போம். இப்போது பொது மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர்.
நம் அருகில் இருக்கும் சிங்கப்பூரை நாம் எந்த காலத்திலும் தொடவே முடியாது என்கிற சூழல் தான் உள்ளது! சிங்கப்பூரால் முடியும் போது நம்மால் ஏன் முடியவில்லை என்று கேட்டால் அந்த கேள்விக்குப் பதிலில்லை! "அப்ப நீங்க சிங்கப்பூருக்கு போயிடுங்க!" என்று பதில் சொல்லுவதில் தான் தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்கின்றனர்! சிங்கப்பூரைப் போல நாம் உயர வேண்டும் என்பதுற்குப் பதிலாக "நாட்டைக் கொள்ளையடித்தாவது நாங்கள் உயர்வோம், நாடு உயர வேண்டும் என்கிற அவசியம் இல்லை!" என்பது தான் அவர்களது பதில்!
இலஞ்சம் ஊழல்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு நாட்டு முன்னேற்றத்தைப் பற்றி கவலையில்லை! மக்கள் முன்னேற வேண்டும் என்கிற அக்கறை இல்லை!
இலஞ்ச ஊழலில் நாம் மிகவும் கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பது தான் மேலே உள்ள புள்ளி விபரம் கொடுக்கும் செய்தி! புருணை, பூட்டான் போன்ற நாடுகள் கூட நம்மைவிட சிறப்பாக இயங்குகின்றன.
நமது கல்வி முறைக்கும் ஊழல் சீர்கேடுகளுக்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டோ என்று யோசிக்க வேண்டிய சூழலில் நாம் உள்ளோம். முதல் நான்கு நாடுகளும் ஆங்கிலக் கல்வியை மையமாகக் கொண்ட நாடுகள். நமது கல்வி முறை முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளதோ? இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இஸ்லாமிய நாடுகள் எதுவும், எந்தக் காலத்திலும் முதல் நிலைக்கு வரும், அதாவது ஊழலற்ற நாடாக வரக்கூடிய சாத்தியங்கள் உண்டா, என்று சும்மாவாவது நினைத்துப் பார்க்க முடியவில்லை!
சமயம் நமக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க வேண்டும். மற்ற எந்த நாட்டையும் விட சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு நமது நாடு. நேர்மை, நல்லொழுக்கம் அனைத்தும் தினம் தினம் நமக்குப் போதிக்கப்படுகிறது. ஆனாலும் நாம் திருந்தவில்லை!Thursday, 10 February 2022
தாவல் சட்டம் தாவுகிறதா!
நாட்டில் என்று பாரிசான் கட்சி ஆட்சியை இழந்ததோ அன்றிலிருந்து ஆரம்பித்தது கட்சித் தாவுதல் என்னும் தரக்குறைவான தகரடப்பா ஆட்டம்!
தாவியவர்கள் தகரடப்பாக்களாக இருந்தாலும் இன்னொரு தலைமுறைக்கும் சேர்த்து பணம் சம்பாதித்து விட்டனர்! ஆக, அரசியல்வாதிகளின் நோக்கத்தில் எந்த புனிதமும் இல்லை! அவர்களின் குடும்பங்களுக்குச் சொத்து சேர்ப்பது தான் "மக்கள் குரலே மகேசன் குரல்!" என்னும் அவர்களின் கோஷம்!
முதலில் இப்படி ஒரு சட்டம் தேவை என்று சொல்லுபவர்கள் நேரம் வரும்போது தடாலடியாக மாறி விடுகின்றனர்! வெளியே பேசும்போது இது போன்ற சட்டங்கள் தேவை என்று பேசினாலும் உள்ளுக்குள் அது போன்ற சட்டத்தை அவர்கள் விரும்புவதில்லை.
ஒரே காரணம் தான். அவர்களிடம் பேரம் பேச பணத்தை வைத்துக் கொண்டு பேசுகின்றனர். பணம் மட்டும் அல்ல, என்ன பதவி கொடுப்போம், என்ன பட்டம் கொடுப்போம் - இப்படி எல்லாம் பேசி தான் இவர்கள் தூண்டில் போடுகின்றனர்! கட்சி தாவுபவர்கள் தங்களுக்கு இந்த வாய்ப்பு இனி மேல் வராது அதனால் வருவதை வரவில் வைப்போம் என்று வெட்கம், மானம், சூடு சொரணை இல்லாமல் மாறி விடுகின்றனர். அதன் பின் அவர்கள் மக்கள் முன் நிற்கக் கூசுவார்கள்! தேர்தல் காலங்களில் ஆளே இருக்க மாட்டார்கள்! ஆனாலும் இதனை மீறி தேர்தலில் நிற்கிறார்கள் என்றால் அவர்களின் தொகுதிகளில் தங்களின் தனிப்பட்ட செல்வாக்கு அவர்களுக்கு உண்டு என்று கூறலாம்.
ஆனாலும் கட்சி தாவும் சட்டம் என்னும் போது அம்னோ எந்த அளவுக்கு ஆதரவு கொடுக்கும் என்று பார்த்தால் அது சந்தேகமே! காரணம் கட்சி தாவுதல் என்று வரும் போது அதில் அதிகப் பயன் அடைபவர்கள் அம்னோ கட்சியினர் தான்! அவர்களிடம் பணம் உண்டு. மற்ற கட்சியினரை வாங்கக் கூடிய சக்தி அவர்களிடம் உண்டு. பணத்தை வைத்து மாநில அரசாங்கங்களை உடைத்தவர்கள் அவர்கள்! அவர்கள் அவ்வளவு எளிதில் கட்சி தாவுதல் சட்டத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள் என நம்ப இடமில்லை!
ஒரு வேளை அவர்களின் நிலை மிகவும் பலவீனமாக இருந்தால் அவர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நம்பலாம். அவர்கள் பலவீனம் என்றால் எதிர்கட்சி பலத்தோடு இருக்கிறது என்று பொருள். எதிர்கட்சி பலத்தோடு இருந்து ஆளுங்கட்சியாக மாறிவிட்டால் கட்சி தாவுதல் சட்டம் எளிதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி விடலாம்!
ஆனால் எதனையும் உறுதியாகச் சொல்ல இயலவில்லை. எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்குமோ, யார் கண்டார்! இதுவரை கட்சி மாறியவர்கள் என்றால் அவர்கள் அனைவரும் எதிர்கட்சியில் இருந்தவர்கள் தானே! உறுதியான ஆட்சி நடுவண் அரசு கொண்டிருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இராது என்பது திண்ணம். எளிதாக நிறைவேறிவிடும்!
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அரசியல்வாதிகளின் யோக்கியதைப் பற்றி இப்போது நம்மால் கணிக்க முடியாது!
இப்போதைக்கு இது தாவிக் கொண்டு தான் இருக்கும்! அரசியல்வாதிகளாயிற்றே!
தொற்றின் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்துகிறது!
நாட்டில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது அச்சத்தை ஏற்படுத்துகிறது என நம்பலாம்!
"அச்சம் என்பது மடமையடா!" என்று யாரும் பாடும் நிலையில் இல்லை!
கோவிட்-19 தடுப்பூசி பெரும்பாலும் போட்டாகிவிட்டது. அதற்கு மேல் பூஸ்டர் ஊசியும் போடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தொற்றும் குறையவில்லை என்னும் போது யாருக்கும் அச்சம் வரத்தான் செய்யும். யாரை குறை சொல்லுவது?
நாம் மற்றவரையே குற்றம் சொல்லிப் பழகிவிட்டோம்! ஆக, ஒரு பிரச்சனை என்னும் போது யாரைக் குறை சொல்லுவது என்று ஆளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்!
ஆனால் நாமும் ஒரு குற்றவாளி தான் என்பதை நம்புவதற்கு மறுக்கிறோம்! ஆமாம், சுகாதார அமைச்சு சொல்லுகின்ற நடைமுறையை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? அதுவே ஒரு கேள்விக்குறி! ஏதோ கொட்டகை திறக்கப்பட்டதும் ஓடும் கன்று காலிகளைப் போல அவிழ்த்துக் கொண்டு ஓடுகிறோம்! என்ன அவ்வளவு அவசரம்? பிள்ளைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படும் ஜென்மமாகக் கூட நாம் இல்லை! பொறுப்புணர்வு என்பது நமக்கு வரவில்லை! படித்தவன், படிக்காதவன் அனைவருமே ஒரே மாதிரியாகத்தான் நடந்து கொள்கிறோம்!
பிரச்சனை என்பது நமக்கு மட்டும் அல்ல. நமது நாட்டு பிரச்சனை மட்டும் அல்ல. எல்லா நாடுகளிலிலும் உள்ள பிரச்சனை. உலகளாவிய பிரச்சனை.
சுகாதார அமைச்சு சொல்லுகின்ற எதனையும் நாம் கடைப்பிடிக்க தயாராக இல்லை! தடுப்பூசி போட மறுக்கிறவர்களும் இருக்கிறார்கள்! என்ன செய்ய? தடுப்பூசி ஒன்றே கொஞ்சமாவது பாதுகாப்புக் கொடுக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நமது நாடும் அதனையே சொல்லுகிறது.
இந்த தொற்றுக்கு பணக்காரன், ஏழை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. பட்டால் பட்டது தான். அடுத்த நாள் சஙுகு தான்! மிகப் பெரிய உதாரணம் நடிகர் விவேக். அவரிடம் பணம் இல்லையா? போய் சேர்ந்துவிட்டாரே!
தொற்று அதிகமாகிக் கொண்டே போகிறது என்றால் ஒரு விஷயம் நமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இன்று பலர் தடுப்பூசி போடாமலேயே போலி சான்றிதழ்களை வைத்திருக்கின்றனர். இது சாதாரண விஷயம் அல்ல. இவர்கள் நாடெங்கிலும் தொற்றை பரப்பிக் கொண்டிருக்கின்றனர் என்பது தான் உண்மை. ஒரு வேளை நம்மிடையே கூட அவர்கள் இருக்கலாம்! ஆனால் நமக்குத் தெரிய நியாயம் இல்லை!
என்னால் அனுமானிக்க முடிந்தது ஒன்று தான். தடுப்பூசி போடாமலே போட்டுவிட்டதாக சான்றிதழ் வைத்திருக்கிறார்களே இவர்கள் தான் குற்றவாளிகள்! இவர்களைக் கண்டு பிடித்து தடுப்பூசி போடுவது தான் சுகாதார அமைச்சின் முதல் கடமை. அது மட்டும் அல்ல. அதற்கான தண்டனையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் யாராக இருந்தாலும், பொது மக்களுக்கு மிரட்டலாக இருக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாரோ சிலரால், பொறுப்பற்ற சிலரால், நாம் பயந்து பயந்து வாழ முடியாது!
மருத்துவர்களா இவர்கள்?
சில செய்திகள் நம்மை வேதனைக்குள்ளாக்குகின்றன.
பொறுப்பற்றவன், படிக்காதவன் இதனைச் செய்தால் மன்னித்து விடலாம். ஆனால் மருத்துவர்களே இப்படிச் செய்தால் என்ன செய்வது? அதுவும் கோவிட்-19 தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் ஒரு காலக் கட்டத்தில் இது போன்ற சம்பவங்களைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இதில் மூன்று மருத்துவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது கோவிட்-19-க்கு எந்த ஒரு சிகிச்சையும் பெறாமலே அவர்கள் சிகிச்சைப் பெற்றுவிட்டதாக போலி சான்றிதழ்களை இவர்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்திருக்கிறார்கள்! ஒவ்வொரு சான்றிதழும் சுமார் 400 - 600 வெள்ளி வரை விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
இதனைப் பார்க்கும் போது இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்பது நமக்குப் புரிகிறது. அதன் விலையைப் பற்றி நமக்கு அக்கறை இல்லை. அது அவர்களது பிரச்சனை.
ஆனால் தடுப்பூசி போடாமலே தடுப்பூசி போட்டதாக சான்றிதழ் கொடுப்பது என்பது எவ்வளவு ஆபத்தானது என்பது புரிந்திருக்கும். அரசாங்கம் அனைவரும் தடுப்பூசி போடுங்கள் என்று கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு பக்கம் சான்றிதழ் கொடுத்து வந்தால் இது சுகாதார அமைச்சுக்கே சவால் விடுகிற ஒரு செயலாகவே நமக்குத் தோன்றுகிறது!
போலி சான்றிதழ் கொடுத்துவிட்டால் தடுப்பூசி போட்டதாக ஆகாது! அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு ஆபத்து இருக்கிறது என்பது தான் பிரச்சனை. போலி சான்றிதழை வைத்திருப்பவர்கள் சாவதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவர்களின் உயிரைப் பற்றி அவர்களுக்கே கவலை இல்லாத போது நாம் கவலைப்பட ஒன்றுமில்லை! ஆனால் இவர்களால் மற்றவர்களுக்கு ஆபத்து எந்நேரத்திலும் வரலாம். எத்தனை பேருக்கு வந்திருக்கிறதோ தெரியவில்லை! இனி மேலும் வரலாம்.
சுகாதார அமைச்சு போலி சான்றிதழ் பெற்றவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். இது தான் மிக மிக முக்கியம். காரணம் இவர்களால் மற்றவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நோயின் தாக்கம் ஏற்பட வழியுண்டு.
போலி சான்றிதழை விற்று வந்த, இந்த மருத்துவர்கள் செய்தது, மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம். இது படிக்காதவன் செய்ய வழியில்லை. படித்தவன் இது போன்று சூது வாதும் செய்தால் "போவான்! போவான்! ஐயோவென்று போவான்!" சரியாகச் சொன்னார் பாரதியார். அவன் எப்படிப் போவான் என்பது அவனுக்கே தெரியாது! ஆனால் நிச்சயம் போவான்!
அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாது! நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவோம்! ஆனால் பெரிய மீன்களை விட்டுவிட்டு சிறிய மீன்களைப் பிடிக்கும் வேலை வேண்டாம்! ஐயோவென்று நீங்களும் போக வேண்டாம்!
மருத்துவர்களா இவர்கள்! மருத்துவ நாதாரிகள்!
களம் இறங்கும் இளைய தலைமுறை!
Syed Saddiq Abdul Rahman. yellow shirt, at the centre!
ஜொகூர் சட்டமன்றத் தேர்தலுக்கு நாள் குறித்தாயிற்று. மார்ச் 12-ம் தேதி தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இந்த மாதம் 26-ம் தேதி, அதாவது இன்னும் இரண்டு வாரங்களில், வேட்பு மனு தாக்கல் செய்யப்படும்.
இங்கு நாம் முக்கியமாக பேசப்போவது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர், சையட் சாடிக்கின் நாட்டிற்குப் புதிய அறிமுகமான மூடா கட்சி பற்றி தான்.
மற்ற கட்சிகளைப் பற்றி பேச ஒன்றுமில்லை. எல்லாமே நமக்கு ஏற்கனவே அறிமுகமான கட்சிகள் தாம். போட்டியிடுபவர்களும் ஏறக்குறைய மக்களுக்கு அறிமுகமானவர்கள்! எல்லாருமே ஏதோ ஒரு வகையில் திருட்டுத்தனம் பண்ணியவர்கள்! கட்சி மாறி மொள்ளமாரித்தனம் பண்ணியவர்கள்! இவர்களுடைய அரசியல் எப்படி இருக்கும் என நம்மால் கணிக்க முடியும்.
இவையெல்லாம் நாம் அறிந்திருக்கிறோம். புதிய கட்சிகள் ஆரம்பிக்கிறார்கள் என்றால் அவர்கள் எல்லாம் மூன்னாள் ஓடுகாலிகள்!
ஆனால் முன்னாள் அமைச்சர் சயட் சாடிக் இவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அரசியலுக்குப் புது முகம். இளைஞர். எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம். நல்ல பண்பாடு உள்ளவர். மற்றவரை மதிக்கத் தெரிந்தவர். மலேசியர் அனைவரும் ஒரு குடும்பம் என்கிற மனப்பானமை உள்ளவர்.
கிழடு கட்டைகள் எல்லாம் மதவாதம் பேசுவதும், மொழியை வைத்து அரசியல் நடத்துவதும் நாம் பார்த்துவிட்டோம். இனி அது மாற வேண்டும். அது இளைஞர்கள் கையில் தான் உண்டு. அந்த வகையில் சையட் சாடிக் போன்ற இளைஞர் தலைவர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்.
பெரு வெள்ளத்தின் போது நமது இளைஞர்கள் பள்ளிவாசல்களைச் சுத்தம் செய்தார்கள். ஒரு பிரச்சனையும் இல்லை. மலாய் இளைஞர்கள் இந்து கோவிலைச் சுத்தம் செய்தார்கள். வாதம், விதண்டாவாதம் எல்லாம் நடந்தது! பத்துமலை கோவில் முன்னே மலாய் பெண் ஒருவர் குழந்தையைப் பிரசவித்தார். இந்து பெண்கள் பிரசவம் பார்த்தார்கள்! அந்தப் பக்கமிருந்து வாதம், விதண்டாவாதம் எதனையும் காணோம்!
இளைஞர்கள் இதனைப் புரிந்து கொள்வார்கள். அதனால் தான் மலேசிய அரசியலுக்கு இளம் ரத்தம் தேவைப்படுகிறது.அந்த இளம் ரத்தத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். அது மூடா கட்சியினரிடம் உண்டு.
நமக்கு, நம் இனத்திற்கு, நம் மொழிக்கு இடையூறு தருபவர்களை இனி நாம் ஆதரிக்கவே வேண்டாம். புதியவர்களை, புத்தம் புது இளைஞர்களை நாம் ஆதரிப்போம். நாம் அனைவரும் மலேசியர் என்கிறவர்களை வரவேற்போம்.
இந்த ஜொகூர் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் மூடா இளைய தலைமுறையினரை ஆதரிப்போம்! வரவேற்போம்!
Wednesday, 9 February 2022
தடுப்புக்காவல் மரணங்கள்!
எத்தனையோ குறைகூறல்கள், அறைகூவல்கள், நாடாளுமன்றத்தின் எதிரொலிகள் - இப்படி எதனையும் காவல்துறை கண்டு கொள்வதாகத் தெரியவில்லை! அவர்கள் தனி சாம்ராஜ்யமாகவே செயல்படுகின்றனர்! கேட்க ஆளில்லை! தனிகாட்டு ராஜா!
கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 80 மரண சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.என்று கூறப்படுகின்றது. சென்ற ஆண்டு மட்டும் 44 மரணங்கள் சம்பவத்திருக்கின்றன.
இங்கே ஒரு சிறிய குறுக்கீடு, மன்னிக்கவும். கடந்த ஏழு ஆண்டுகளில் 80 மரண சம்பவங்கள் என்றால் ஓர் ஆண்டுக்கு சுமார் 12 என்று வைத்துக் கொண்டாலும் சென்ற ஆண்டு, ஒரே ஆண்டில் மட்டும், சுமார் 44 சம்பவங்கள் சம்பவித்திருக்கின்றன.
ஒன்று நமக்கு நினைவிற்கு வருகிறது. ஓரு நிலையான அரசாங்கம் இல்லாத போது இந்த மரண சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன! சென்ற ஆண்டு மட்டும் என்று எடுத்துக் கொண்டால் அரசாங்கம் மிகவும் ஆட்டங்கண்டிருந்த நேரம். அதாவது தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் என்றிருந்த நேரம். குறிப்பாக அந்த இக்கட்டான சூழலில் காவல்துறை கொஞ்சம் அதிகமாகவே "பயிர்" செய்திருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது! ஒரே ஆண்டில் மட்டும் 44 சம்பவங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல! மாதத்திற்கு சுமார் நான்கு மரணங்கள்!
பொதுவாக தடுப்புக்காவல் மரணங்கள் என்றாலே நமக்கு முதலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது இந்திய இளைஞர்கள் தான்! அடுத்து சிறிய எண்ணிக்கையில் மலாய் இளைஞர்கள். சீன இளைஞர்கள் சுழியம் என்றே சொன்னாலும் அவர்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் இந்த விஷயத்தில் இந்திய இளைஞர்களே முதலிடத்தில் நிற்கின்றனர். நாட்டின் மக்கள் தொகையில் சுமார் ஏழு விழுக்காடு கொண்ட நாம் இந்த மரண சம்பவங்களில் நமது இளைஞர்கள் தான் முன்னணியில் நிற்கின்றனர். அதாவது நம்மை ஒரு குற்றவாளி சமூகம் என்பதாகத்தான் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. வெளி வருகின்ற தடுப்புக்காவல் மரணங்களில் இந்திய இளைஞர்களே முதலிடம். சிறையில் இருக்கின்ற குற்றவாளிகள் என்றால் அங்கும் இந்திய இளைஞர்களே முதலிடம்.
இது ஒன்றே போதும். மலேசிய நாட்டில் நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதைக் காட்டும் கண்ணாடியாக எடுத்துக் கொள்ளலாம். குறைந்த கல்வியறிவு, வேலை இல்லாப் பிரச்சனை, உயர்கல்வி மறுக்கப்படுதல் போன்று பல்வேறு பிரச்சனைகளில் நமது சமூகம் உழன்று கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் முடிவு காணவில்லை என்றால் தடுப்புக்காவல் மரணங்களைத் தடுத்து நிறுத்த இயலுமா என்பது கேள்விக்குறியே!