மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தைப்பற்றி நாம் அறிந்திருக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம்.
அதன் நோக்கம் சரியானது. இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சி என்பது தான் அதன் குறிக்கோள். நிர்வாகக் குளறுபடியால் அது தோல்வியில் முடிந்தது. அரசியல்வாதிகள் சாலை ஓரங்களில் ஒரு தேநீர் கடையைக் கூட நடத்த இலாயக்கற்றவர்கள் என்பதை அந்நிறுவனம் நிருபித்துக் காட்டியது. அதனால் தான் அதன் பின்னர் "திரட்டுகிற" அரசியல்வாதிகளின் முயற்சிகள் எதுவும் எடுபடவில்லை!
நாம் நினைத்தபடி அந்நிறுவனம் இந்தியர்களுக்கு முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை என்றாலும் ஒருசிலராவது அதன் மூலம் வயிற்றைப்பெருக்கிக் கொண்டார்களே என்கிற மனநிறைவே நமக்குப் போதுமானது. அவர்களும் இந்தியர்கள் தானே!
நாம் சொல்ல வருவது அதுவல்ல. இந்த நிறுவனம் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் பணம் போட்டவர்கள் அனைவரும் இந்தியர்கள். அப்போதும் ஏழை இந்தியர்கள் என்று தான் நாம் அழைக்கப்பட்டோம். ஏழை இந்தியர்களிடமிருந்து சுமார் 10 கோடி திரட்டப்பட்டது. இதைத்தான் நாம் கவனிக்க வேண்டும்.
அந்த காலகட்டத்தில் மக்களிடையே பேசப்பட்ட ஒரு செய்தியை நான் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அதன் உண்மைத்தன்மையை என்னால் நிருபிக்க முடியாது. ஆனால் பேசப்பட்டது உண்மை. அந்நிறுவனத்திற்காக ஏழை இந்தியர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் சுமார் பத்து கோடி ரிங்கிட். இதனைக் கண்டு பலர் ஆச்சரியப்பட்டார்கள். காரணம் அந்தக் காலகட்டத்தில் பத்து கோடி சொத்துக்கள் உள்ள உள்ளூர் நிறுவனங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்பட்டது. ஓரிரு வெளி நாட்டு நிறுவனங்கள் தான் அந்த அளவு சொத்துக்களைக் கொண்டிருந்தனவாம். அப்போது பிரதமராக இருந்த டாக்டர் மகாதிர் கூட அதனை அறிந்த போது வியந்து போனதாகப் பேசப்பட்டது. "ஏழை இந்தியர்களிடம் இவ்வளவு பணம் இருக்கா!" என்று சொன்னதாகப் பரவலாகப் பேசப்பட்டது. அப்போதே இந்தியர்களை டாக்டர் மகாதிர் ஏழைகள் அல்ல என்கிற முடிவுக்கு வந்து விட்டார்.
ஆனாலும் நாம் தான் வலுக்கட்டாயமாக இந்தியர்களை ஏழைகள் என்று சொல்லிக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம். இந்தப் போக்கை நாம் அறவே ஒழிக்க வேண்டும். நாம் ஏழைகள் என்பதை மறந்துவிட வேண்டும்.
டாக்டர் மகாதிர் கூட நம்மை ஏழைகள் என்று எண்ணியதில்லை. அவர் "வணக்கம் மலேசியா" இணையதளத்தில் கடைசியாகக் கொடுத்த பேட்டியில் கூட நாட்டில் இன்றும் அதிகமான டாக்டர்கள் இந்தியர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதாகக் குறிப்பிடுகிறார். அந்த அளவுக்கு நாம் நீண்ட நாட்களாக அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோமே அப்படியிருக்க நாம் ஏழை சமுதாயம் என்று ஏன் நம்மை நாமே பறைசாற்றிக் கொள்ள வேண்டும்?
நம்மிடையே உள்ள சில தவறான பழக்க வழக்கங்களால் நாம் ஏழைகள் என்பதாக முத்திரைக் குத்தப்படுகிறோம். பணம் இல்லாதவர்கள் என பேசப்படுகிறோம்.
இவைகளெல்லாம் மாறிக்கொண்டு வருகின்றன. பணம் உள்ளவர்கள் தான் நாம் என்பதை வருங்காலங்களில் காட்டுவோம்!
No comments:
Post a Comment