சினிமா படம் ஒன்றில் நடிகவேள் எம்.ஆர். ராதா பேசுகின்ற வசனம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது
"பணம்'னா செத்த பிணம் கூட வாயைப் பிளக்கும்' டா!" பிணம் வாயைப் பிளக்குமோ என்னவோ தெரியாது! பார்த்ததில்லை! ஆனால் அந்தப் பிணம் விட்டுப் போயிருக்கும் பணத்துக்காக வாயைப் பிளக்கும் குடும்ப உறுப்பினர்களைப் பார்த்திருக்கலாம்!
இப்போது ஏன் இந்த கதை? நமது நாட்டின் கோழி ஏற்றுமதியாளர்கள் நமது அண்டை நாடான சிங்கப்பூருக்குக் கோழிகளை ஏற்றுமதி செய்ய என்ன தீவிரம் காட்டுகிறார்கள் என்று நினைக்கும் போது அவர்களை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. வருகிற ஒன்றாம் தேதியிலிருந்து வெளி நாடுகளுக்கு கோழி ஏற்றுமதியில்லை என்கிற மலேசியாவின் ஒரு காரணம் போதும்.
சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு நமது நாட்டின் மதிப்பை விட அதிகம். சமீப காலங்களில் சிங்கப்பூர் டாலரின் மதிப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது கோழி ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்தி! என்ன விலைக்கு விற்றாலும் வருங்காலங்களில் அந்த நாணயத்தின் மதிப்பு உயர்ந்தால் அவர்கள் இன்னும் அதிகம் பணம் பார்க்கலாம்! அது ஒன்றே போதும் ஏன் ஏற்றுமதியாளர்கள் படாத பாடு படுகிறார்கள் என்பது!
அதனை தவறு என்று நாம் சொல்ல வரவில்லை. வியாபாரம் என்பதே இலாபம் பார்ப்பது தான். இன்னொன்றையும் கருத்திக் கொள்ள வேண்டும். இலாபம் பற்றியே நாம் பேசுகிறோம். அவர்கள் நிறைய நட்டத்தையும் படுகிறார்கள். கோழிகளுக்கு வியாதிகள் வந்தால் தீடிரென அனைத்துமே செத்துப் போகலாம்! அவைகள் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு நிறைய செலவுகள் செய்ய வேண்டும்.
வியாபாரம் செய்வது என்பது ஒரு வழி பாதையில்லை. இலாபம் மட்டுமே வரும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது, இலாபம், நட்டம் இரண்டுமே உண்டு. இலாபத்தை எப்படி மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறோமோ அதே போல நட்டத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இலாப நட்டம் என்பது எல்லா வியாபாரங்களிலும் உண்டு. கோழி வியாபாரம் மட்டும் அல்ல. நாம் செய்கின்ற அனைத்து வியாபாரங்களிலும் இலாபம் உண்டு; நட்டமும் உண்டு. இதையெல்லாம் மீறி சீனர்கள் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் ஒரே ஒரு காரணம் தான். நட்டத்தை விட இலாபமே அதிகம் என்பதனால் தான் வியாபாரம் அனைத்து இனத்தினரையும் ஈர்க்கிறது! புரிந்து கொண்டவர்கள் வியாபாரத்தை விட்டு வெளியே போவதில்லை. புரியாதவர்கள் நட்டத்தை மட்டும் பற்றி பேசி மற்றவர்களையும் வியாபாரம் வேண்டாம் என்று சொல்லி தடுக்க நினைக்கிறார்கள்.
என்ன தான் சொல்லுங்கள். காசே தான் கடவுளடா என்று சும்மாவா பாடிவிட்டுப் போனார்கள்? என்ன செய்வது? பணம் தான் ஒருவனை துள்ளி குதிக்க வைக்கிறது! ஓடி ஆடி பாட வைக்கிறது!
தவிர்க்க முடியாத ஒன்று தான் பணம்!
No comments:
Post a Comment