நாட்டின் பொருளாதாரம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு முக்கியம் தனி மனிதனின் பொருளாதார வளர்ச்சி. தனி மனித வளர்ச்சி என்கிற போது நான் குறிப்பிடுவது தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி.
நம்மைச் சுற்றிப் பாருங்கள். அதெப்படி சீனர்கள் மட்டும் எல்லாக் காலங்களிலும் பணக்காரர்களாக இருக்கின்றனர்? நாட்டில் பொருளாதார வளர்ச்சி இருக்கிறதோ இல்லையோ சீனர்கள் மட்டும் எப்படி கையில் பணத்தோடு வாழ்கின்றனர்? அவர்கள் மலேசியாவில் மட்டுமா அப்படி வாழ்கின்றனர்? அவர்கள் வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் அவர்கள் தான் பணக்காரர்கள். குறிப்பாக சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நமது அண்டை நாடுகளில் சீனர்கள் கைதான் ஓங்கியிருக்கிறது!
இதிலிருந்து ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சீனர்கள் எங்கிருந்தாலும் வியாபாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஓர் இனம்.. வியாபாரம் செய்துதான் பிழைக்க வேண்டும் என்கிற எண்ணம் அவர்கள் இரத்தத்தில் ஓடுகிறது. அப்படி ஓர் எண்ணத்தை அவர்கள் வளர்த்துக் கொண்டார்கள். வியாபாரம் செய்தால் தான் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
நாம் இங்கே தான் - நமது எண்ணங்களில் கொஞ்சம் வித்தியாசப் படுகிறோம். நாம் ஆதிகாலந்தொட்டே வேலை செய்துதான் பிழைக்க வேண்டும் என்கிற எண்ணத்தை நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நமது தலையில் அடித்து அடித்து வளர்த்து விட்டிருக்கிறார்கள்! "வேலை செய்! வேலை செய்! அப்பத்தான் பிழைக்க முடியும்!" என்று சொல்லிச் சொல்லி நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம்!படித்தவனாக இருந்தாலும் வேலை செய்! படிக்காதவனாக இருந்தாலும் வேலை செய்! என்பதைத் தாரக மந்திரமாகவே நமக்கு ஓதப்பட்டிருக்கிறது~ ஒருவர் கூட "நீ வியாபாரம் செய்து பெரிய ஆளாக வா!" என்கிற பேச்சுக்கே இடமில்லை! அப்படிப்பட்ட ஒரு சமூக பின்னணியிலிருந்து நாம் வந்திருக்கிறோம். அதனால் தான் நம்மை நாமே மாற்றிக்கொள்வது எளிதான காரியமாக இல்லை!
ஆனால் நம்மை நாமே மாற்றிக் கொள்வது என்பது பெரிய விஷயமே இல்லை. சில பயிற்சிகளின் மூலம் நமது குறைபாடுகளை நாம் களைந்து விடலாம். இது நாள் வரை எது முடியாது என்கிற எண்ணத்தைக் கொண்டிருந்தோமோ அதை இனி முடியும் என்று எண்ணிப் பழகுங்கள். இதில் என்ன பிரச்சனை? முடியாது என்பது மனதில் ஆண்டுக்கணக்கில் ஊறிப்போய்விட்டது. இனி அதனை மாற்றி 'முடியும்' என்று சொல்லிப் பழகுங்கள்.
முடியாது என்பது தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தும். முடியும் என்பது தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். நமது பொருளாதாரத்தை உயர்த்த நமக்குத் தேவை முடியும் என்கிற மனப்பான்மையே!
No comments:
Post a Comment