Sunday 1 May 2022

இது சரியான முடிவு தானா?

 

                Unvaccinated Teachers will be allowed to return to school - Minister of Education    

கல்வி அமைச்சர், ராட்ஸி ஜிடின், கோவிட்-19 தொற்றுக்கு, தடுப்பூசி போட மறுத்த ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிகளுக்கு வரலாம் வந்து தங்கள் பணிகளைத் தொடரலாம் என்று அறிவித்திருக்கிறார்!

இப்படி ஓர் அறிவிப்பே நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. இப்போது உள்ள  நிலையில் பெற்றோர்கள் தான் தங்களின் பிள்ளைகளின் நலன் குறித்து கவலைப்பட வேண்டி உள்ளது.

முதலில் ஆசிரியர்கள் ஏன் தடுப்பூசி போடவில்லை என்பதற்கான காரணம் தெரியவில்லை. அவர்கள் தங்களுக்கு ஏற்கனவே உள்ள உடல்நல பாதிப்பின் காரணமாக ஊசி போடவில்லை என்றால் நாம் அதனைப் புரிந்து கொள்கிறோம். அப்படி இருந்தாலும் அவர்களுடைய பணிகளை மாற்றுவது தான் சரியாக இருக்கும்.  மாணவர்களுடனான நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்பது தான் பெற்றோர்கள் விருப்பம்.

ஆனால் உடல் நலத்தோடு இருந்தும், ஏதோ ஒரு சில காரணங்களைச் சொல்லிக் கொண்டு,  அரசாங்கத்திற்குச் சவால்  விடும் ஆசிரியர்களைப் பணி நீக்கம் செய்வது அல்லது அவர்களை வேலையிலிருந்து ஓய்வு கொடுப்பது தவிர வேறு வழியில்லை. 

இதில் வேறு ஒரு சங்கடமும் உள்ளது.  அரசாங்கத்தின் உத்தரவை ஆசிரியர்கள் மீறுகின்றனர். அது ஆசிரியர்களின் பொறுப்பின்மையைக் காட்டுகிறது. இந்த நிலையில் மாணவர்களின் நிலை என்ன? அவர்களும் ஆசிரியர்கள் சொல்லுவதை மீறுகின்றனர். அதற்கு ஆசிரியர்கள் முன்னுதாரணமாக  இருக்கின்றனர். இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.

எப்படிப் பார்த்தாலும் கல்வி அமைச்சரின் அறிவிப்பு மக்களிடையே சங்கடத்தை ஏற்படுத்துகிறது. மாணவர்கள் தடுப்பூசி போடுகின்றனர். பெற்றோர்கள் தடுப்பூசி போடுகின்றனர். ஆசிரியர்கள் ஏன் போட மறுக்கின்றனர்? ஆசிரியர்கள் படித்தவர்கள். மக்களின் அன்புக்குரியவர்கள். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக  இருக்க வேண்டியவர்கள். அவர்கள் ஏன் இப்படி அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றனர் என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.

இதற்கு முன்பு தடுப்பூசி போடாதவர்கள் மீது கல்வி அமைச்சர் சீறிப் பாய்ந்தார்! வேலையை விட்டு நீக்குவோம். நடவடிக்கை எடுப்போம், அது இது என்று ஆவேசமாகப் பேசினார்! இப்போது அவர்கள் செய்தது  சரி என்கிற நிலைமைக்கு வந்துவிட்டார்!

பெற்றோர்களுக்கு வருத்தம் தான்!        

No comments:

Post a Comment